பருவ நிலை மாற்றமும், பனிப் பொழிவும்!


பருவ நிலை மாற்றமும், பனிப் பொழிவும்!
x
தினத்தந்தி 13 Dec 2019 5:57 AM GMT (Updated: 13 Dec 2019 5:57 AM GMT)

நாளுக்கு நாள் அறிவியல் புரட்சி மேலோங்கி வரும் நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் பனிப்பொழிவு ஏற்படுத்தும் தாக்கத்தைப்பற்றி அறிவது காலத்தின் அவசியம் ஆகும்.

நாளுக்கு நாள் அறிவியல் புரட்சி மேலோங்கி வரும் நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் பனிப்பொழிவு ஏற்படுத்தும் தாக்கத்தைப்பற்றி அறிவது காலத்தின் அவசியம் ஆகும். சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு மற்றும் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாகத் தண்ணீர் பற்றாக்குறையும் உயிர் வளிப்பற்றாக்குறையும் ஏற்பட்டுவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமை நீடித்தால் விளை நிலங்கள் ஆறுகள், சுற்று உயிரினங்கள் உருக்குலைந்து வாழ்க்கை செழுமையைப் பூமி இழந்து விடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற அபாயகரமான நிலை உருவாகி விடும். இதை உணர்ந்து செயல்பட வேண்டும். பருவநிலை மாற்றங்களால் உலகில் பஞ்சமின்றி பேரழிவுகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக பேரிடர்கள் பெருமளவில் நாட்டின் முன்னேற்றத்தை முடக்குகின்றன. நிலநடுக்கம், வறட்சி, புயல், பெருவெள்ளம், பனிப்பொழிவு, பனி மலைச் சரிவு, நிலச்சரிவு நமது நாட்டின் இயற்கைச் சூழலை பாதித்து மனித சமுதாயத்தின் வாழ்வாதார நிலையினை சீரழிக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இயற்கையை அறிவதும் காலத்தின் கட்டாயம் இயற்கைப் பேரழிவுகளை எதிர் கொள்வதும் காலத்தின் கட்டாயம்.

புவி வெப்பமடைதல் என்பது நம்மைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் காற்றில் கலக்கும் வாயு வடிவ மாசுப்பொருட்களின் அதிகரிப்பினால் ஏற்படும் அசாதாரண வெப்ப உயர்வு. தற்போதைய சராசரி வெப்பநிலை 500 பாரான்ஹீட் (140 செல்சியஸ்) என்று கூறப்படுகிறது. இந்த வெப்ப நிலை மாறும்போது, உலகளவிலே வெப்பம் அதிகரிக்கிறது.

மனிதர்களுடைய நடவடிக்கைகளால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்போது வானிலையில் மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. நாட்டிலே இயற்கை வளங்களாகிய நிலக்கரி, நிலத்தடி எண்ணெய் வளங்கள் மற்றும் வாயுக்கள் எரிக்கப்படும்போது, அதிக அளவிலே கார்பன்-டை -ஆக்ஸைடு வெளியாகிறது. வாயு மண்டலத்தில் கார்பன்-டை- ஆக்ஸைடு அதிக அளவு சேருவதால், சூரிய வெப்பம் பூமிக்கு வருவது தடை செய்யப்படுகிறது. இதைத் தவிர, அதிக மழையினாலும், பனிப் பொழிவினாலும், பூமி வெப்பமடைதல், பூமியின் ஓசோன் அடுக்கில் ஓட்டை ஏற்படுதல், அமில மழை, கதிரியக்க ஆபத்துகள் ஆகியவற்றாலும் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உலகளாவிய தொழிற் புரட்சியினால் சமீபகாலமாக பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதை புவி வெப்பமடைதல் என்று கூறுகிறோம்.

சில சமயங்களில், அமிலங்கள் உலர்ந்து, ஈரத்துடன் வளிமண்டலத்திலிருந்து பூமிக்கு விழுவதை அமில மழை எனக் கூறுவர். பெரும்பாலும் அமிலங்கள் பனி மூலமாக பூமிக்கு இறங்கும். இவ்வாறு பெய்யும் நச்சுக் கலந்த அமில மழை பூமியில் உள்ளத் தாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். பின்பு, இந்த அமிலங்கள் யாவும் பூமியின் மேல்பரப்பில் உள்ள கட்டிடங்கள், போக்குவரத்து வாகனங்கள், மரங்கள் ஆகியவற்றின் மீது படிகின்றன, சல்பர்டை ஆக்ஸைடும், நைட்ரஜன் ஆக்ஸைடும், அமில மழையில் உள்ளன. அமில மழையால் உயிரினங்கள், தாவரங்கள், விலங்கினங்கள், கட்டிடங்கள், பூச்சு வண்ணங்கள், சிலைகள் யாவும் மிகுந்த பாதிப்புகளை உருவாக்கும்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு ஏற்பட்டு மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே முடக்கி இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான சூழலுக்கு தள்ளப்படுகிறது. மேலும் இது ஏற்படுத்தும் இடையூறுகளும், இழப்புகளும் பேரழிவுகளும் மிகப் பயங்கரமானவை. அளவிட முடியாதது. பனிப்பொழிவுகள் பாதிப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உண்டு. குளிர் மாற்றம் பனிப்பொழிவு அளவு பொறுத்து பனி உறைவு ஏற்படுத்துகிறது.

இழப்புகள் பனிப்பொழிவின் தீவிரத்தை பொறுத்து அமைகின்றன. ரெயில் தண்டவாளம், விமான ஓடுதளத்தில் கடும் பனிப்பொழிவின் பனிப் படிவை நீக்க முயன்றபோது குளிர் தாங்க முடியாமல் இறந்தவர்கள் ஏராளம். மழை பெய்யும்போது ஓசை கேட்கும். பெரும் காற்று வீசும்போதும் ஓசை கேட்கும். பனி பெய்யும் போதும் ஓசை கேட்கும் அளவுக்கு பனிப்பொழிவும் தீவிரமாய் உள்ளது என்று நினைத்தால் அது ஏற்படுத்தும் ஆபத்தின் தீவிரத்தை உணரவேண்டும்.

பனிப்பொழிவு காலங்களில் குறைந்த பனி என்பது 1 கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேலாக கண்களுக்கு தெரிய வருவதை குறிக்கும்.

மிதமான பனி என்பது 1 கிலோ மீட்டர் மற்றும் அரை கிலோ மீட்டர் அளவிற்கு நமது பார்வைக்கு தெரியவரும். அடர்ந்த பனி என்பது அரை கிலோ மீட்டருக்கும் குறைவான அளவில் நமது பார்வைக்கு தெரியாத அளவில் அடர்ந்து இருக்கும்.

பருவ நிலை மாற்றத்தின் விளைவு 600 மில்லியன் மக்களை கொண்டுள்ள இந்தியாவுக்கு பெரும் சவாலாகவே இருக்கக்கூடும். பருவ நிலை மாற்றத்தின் மீதான விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் சமூகப் பொருளாதார தகவல்கள் அதன் சாத்தியமான விளைவுகள் குறைப்பதற்கான வாய்ப்புகள் தெரிவித்தது, இருப்பினும் அறிவியல் மேலோங்கிய நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும், நல்ல சுற்றுப்புறச் சூழல் நிலைத்திருக்கிற வளர்ச்சி மற்றும் அமைதியான வாழ்க்கை முறை அமைய உத்தரவாதம் அளித்தல். சுற்றுசூழலில் உள்ள மனிதன் பயன்படுத்தக் கூடிய தாவர இனங்கள் காற்று, நீர், மண், கடல் ஆகிய இயற்கை வளங்கள் மாசுபடாமல் பாதுகாத்தல், காடுகளைப் பாதுகாத்தல் மிக மிக அவசியம்.

பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நன்மை, தீமைகள் மற்றும் பாதிப்புகள், விளைவுகள் ஆகியவற்றினைப் பற்றி ஓர் விழிப்புணர்வை ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்படுத்துதல் அவசியம். அதேபோல் பனிப்பொழிவு காலங்களில் பாதுகாப்பான, குளிரினை தாங்க கூடிய உடை, காலணி, கவசம், வெளியில் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் பயணிப்பதும், குழந்தைகளின் உடல் நலனில் மிகுந்த கவனத்தை கையாள்வது மிக மிக முக்கியம்.

பருவநிலை மாற்றங்களினாலும், பனிப்பொழிவினாலும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

முனைவர் இ.கே.தி.சிவகுமார், உறுப்பினர், தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் கழகம், புதுடெல்லி.

Next Story