சிறப்புக் கட்டுரைகள்

கைப்பற்றப்பட்ட கடத்தல் தங்கம் எங்கு செல்கிறது? + "||" + Where does the smuggled gold go?

கைப்பற்றப்பட்ட கடத்தல் தங்கம் எங்கு செல்கிறது?

கைப்பற்றப்பட்ட கடத்தல் தங்கம் எங்கு செல்கிறது?
அரசாங்க அமைப்புகளினால் கைப்பற்றப்படும் தங்கம், பணம் மற்றும் தடை செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் மிக சிக்கலான நடைமுறைகளின் வழியாக இறுதியில் அரசாங்க கருவூலத்தை சென்றடைகின்றன.
டந்த ஐந்து வருடங்களாக சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு துறையினரால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலில் தங்கம் முதலிடத்தில் உள்ளது.

2017-18-ல் சுங்கத்துறையினரால் மட்டும் ரூ.974 கோடி மதிப்புள்ள 3,332 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இது முந்தைய ஆண்டில் கைப்பற்றப்பட்ட 1,466 கிலோவை விட 110 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த பட்ஜெட்டில் 2.5 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டபின் தங்கத்தின் மீதான மொத்த இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தங்கக்கடத்தல் அதிகரித்துள்ளது.

ஆனால் கைப்பற்றப்பட்டபின் தங்கம், பணம் மற்றும் இதர கடத்தல் பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன?

“பணம் மற்றும் இதர பொருட்களை வருமான வரித்துறையினர் அல்லது சுங்கத்துறையினர் கைப்பற்றியபின் அவற்றை தற்காலிகமாக 180 நாட்களுக்கு தங்களின் பொறுப்பில் வைத்திருக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஆணை பெற வேண்டும்” என்கிறார் கார்ப்பரேட் சட்டங்கள் மற்றும் எப்.இ.எம்.ஏ. துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பட்டயக்கணக்காளரான எஸ்.சுந்தர் ராமன்.

“அதனை கைப்பற்றியது முதல் அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது அந்த அதிகாரியின் பொறுப்பாகும். இதை சோதனை கால டெபாசிட் அல்லது முடக்கம் என்று அழைக்கின்றனர்” என்றும் கூறுகிறார் அவர்.

பணம் கைப்பற்றப்பட்டால் அதை பாதுகாப்பாக சேமித்து வைக்க வரித்துறை அதிகாரிகள், மாஜிஸ்திரேட்டு ஆணை பெற வேண்டும் என்கிறார் ராமன்.

பொதுவாக இவை இதற்காக தொடங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும். 180 நாட்களில் இந்த வழக்கு முடிவடையாவிட்டால் அதிகாரிகள் மேலும் 180 நாட்கள் அவகாசம் பெற வேண்டும்.

வழக்கு முடியும் வரை இப்படி நீட்டிப்பு பெற வேண்டும். வருமான வரி வழக்குகள் ஒன்பது மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி அபூர்வமாகவே நடக்கிறது.

வரி ஏய்ப்பு

புலன் விசாரணை முடிந்த பின்னர் கைப்பற்றப்பட்ட பணம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு அல்லது சட்டவிரோதமான முறைகளில் ஈட்டப்பட்டது என்பதை வருமான வரித்துறையினர் நிரூபித்து அதை நீதிமன்றம் உறுதி செய்தால் பிறகு அபராதம் உள்ளிட்ட செலுத்த வேண்டிய மொத்த வரியை வருமான வரித்துறையினர் கணக்கிடுவர்.

கைப்பற்றப்பட்ட தொகை செலுத்த வேண்டிய தொகையை விட குறைவாக இருந்தால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை செலுத்தும்படி குற்றம்சாட்டப்பட்ட வரி செலுத்துபவரிடம் கேட்பார்கள். மீட்கப்பட்ட தொகை முதலில் வருமான வரித்துறையின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இறுதியாக இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியை சென்றடைகிறது.

“கைப்பற்றப்பட்ட தொகையை விட செலுத்த வேண்டிய தொகை குறைவாக இருந்தால் அதிகமாக உள்ள தொகை வரி செலுத்துபவரின் கணக்கில் வங்கி மூலம் செலுத்தப்படும்” என்கிறார் வக்கீல் ரிச்சர்ட் வில்சன்.கைப்பற்றப்பட்ட தங்கம்

சுங்கத்துறை மற்றும் இதர அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்படும் தங்கம் இதற்கென ஒதுக்கப்பட்ட கிடங்குகளில் வழக்கு முடியும் வரை பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

சுங்கத்துறையினருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதன்பிறகு இந்த தங்கம் ரிசர்வ் வங்கியின் தங்க கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும். உரிய நடைமுறைகள் முடிந்தவுடன் தங்கத்தின் சந்தை மதிப்பு சுங்கத்துறையின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பிறகு இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதிக்கு சென்றடையும்.

“பணம், தங்கம் மற்றும் இதர விலை உயர்ந்த பொருட்கள் போன்ற கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும் தற்காலிகமாக சேமித்து வைக்க முற்றிலும் பாதுகாக்கப்பட்ட பண்டகசாலை ஒன்று வருமான வரித்துறையினரிடம் உள்ளது. வழக்கை பதிவு செய்தபின் கைப்பற்றப்பட்ட பணம் தற்காலிக கணக்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது” என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய வக்கீல் சி.ராஜசேகரன்.

சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்படும் அனைத்து பொருட்களையும் ஆவணப்படுத்தி சட்டப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றங்களை நாடுகின்றனர். பிறகு கைப்பற்றப்பட்ட தங்கம், மத்திய பாதுகாப்பு படையினரால் பாதுகாக்கப்படும் அத்துறையின் சொந்த பண்டகசாலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

“வழக்கு நடக்கும் முன்பே சுங்கச்சட்டத்தின் 126-ம் பிரிவின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தை அவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் விற்பனை செய்து பணமாக மாற்றுகின்றனர். வழக்கு அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றால் தங்கம் தம் கையிருப்பில் இருந்தால் அதை திருப்பி அளிக்கின்றனர் அல்லது தங்கத்தின் மதிப்பிற்கு ஈடான தொகையை குற்றம் சாட்டப்பட்டவரிடம் திருப்பி அளிக்கின்றனர்” என்கிறார் ராஜசேகரன்.

கடத்தல் பொருட்கள்

சுங்கத்துறையினரால் கைப்பற்றப்படும் கடத்தல் பொருட்கள், பொருட்களுக்கான வகைகளின் அடிப்படையில் ஆன்லைன் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

மருத்துவ மூலிகைகள், தானியங்கள், மென்தால், கற்பூரம், குங்குமப்பூ, சர்க்கரைப் பாகு, சிகரெட்டுகள் மற்றும் புகையிலை போன்ற அழுகும் தன்மை கொண்ட பொருட்கள், மிகக்குறைந்த காலத்தில் விற்பனை செய்ய வேண்டிய பொருட்கள் போன்றவை அவற்றின் உரிமையாளர்களிடம் தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக விற்கப்படுகின்றன.

எலக்ட்ரானிக் பொருட்கள், கைபேசிகள், மதுவகைகள் மற்றும் பல்வேறு இதர பொருட்கள் போன்ற இரண்டாவது வகையை சேர்ந்த பொருட்கள், சுங்கச்சட்டத்தின் 110 (1ஏ) பிரிவின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சட்டப்பிரிவு கால வரையறை எதையும் தெளிவுபடுத்தாமல் துரிதமாக விற்பனை செய்யப்பட வேண்டும் என்கிறது.

கண்காணிப்பு கேமராக்கள், கெடிகாரங்கள், அலங்கார நகைகள், ஆயத்த ஆடைகள், மூக்கு கண்ணாடிகள், வாசனை திரவியங்கள் போன்ற மூன்றாவது வகையை சேர்ந்த பொருட்களை கைப்பற்றப்பட்ட தினத்தில் இருந்து 6 மாதங்களுக்குள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வகைகளில் சேராத இதரபொருட்கள் அனைத்தும் நான்காம் வகையின் கீழ் வருகின்றன. விரிவான நடைமுறைகளை பின்பற்றி இவை விற்பனை செய்யப்பட வேண்டும்.

1980 முதல் 2010 வரை இந்தியர்களினால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கணக்கில் வராத பணத்தின் மதிப்பு 21,648 கோடி டாலர்கள் முதல் 49,000 கோடி டாலர்கள் வரை இருக்கும் என்று நிதித்துறைக்கான நாடாளுமன்ற குழுவின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

50,000 கோடி டாலர்கள் (இந்திய ஜி.டி.பி.யில் சுமார் 20 சதவீதம்) அளவுக்கு சட்ட விரோதமான பணம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது என 2012-ல் சி.பி.ஐ. கணித்தது.

134 கோடி மக்கள் தொகையில் 3 சதவீத இந்தியர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துவது வருமான வரி ஏய்ப்பின் அளவை தெளிவுபடுத்துகிறது.

விதிமுறைகள் மீறல்கள் செய்பவர்களை புலனாய்வு செய்து சோதனைகள் நடத்தி அவர்களிடம் இருக்கும் ரொக்க பணம், தங்கம் அல்லது இதர சொத்துகளை கைப்பற்றும் பொறுப்பு, வருமான வரித்துறை, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு துறை (டி.ஆர்.ஐ), அமலாக்கத்துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதி புலனாய்வு மையம் ஆகிய ஐந்து அரசு அமைப்புகளிடம் உள்ளது.

கைப்பற்றிய மொத்த தொகைகள் பற்றி துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் 90 சதவீத தொகைகளை வருமான வரித்துறை கைப்பற்றுகிறது. உளவுப்பிரிவு ஒன்றை கொண்டுள்ள டி.ஆர்.ஐ. சுங்கத்துறையினருடன் இணைந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்படும் தங்கத்தின் பெரும் பகுதியை கைப்பற்றுகிறது.