பிளாட்பாரத்தில் ஒரு பியானோ கலைஞன்!


பிளாட்பாரத்தில் ஒரு பியானோ கலைஞன்!
x
தினத்தந்தி 14 Dec 2019 12:24 PM GMT (Updated: 14 Dec 2019 12:24 PM GMT)

சமூக வலைத்தளங்கள் ஒருவரின் வாழ்க்கையையே 180 டிகிரிக்கு சுழற்றிப் போட்டிருக்கிறது என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.

டொனால்டு கவுல்ட் எனும் பியானோ கலைஞர் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளின்போது தேசிய கீதத்தைப் பாடிய பெருமையைப் பெற்றிருக்கிறார். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? இருக்கு பாஸ் இருக்கு! அவர் வசிப்பதற்குக்கூட வீடில்லாத தெருவோர பியானோ கலைஞர். அமெரிக்காவின் பிளோரிடா மாகாணச் சாலைகளின் பிளாட்பாரத்தில் பியானோ வாசித்து, பாதசாரிகளை மகிழ்விப்பவர். வழக்கம்போல ஒருநாள் ஆழ்ந்து பியானோ வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் அதை வீடியோவாகப் பதிவு செய்து வலைதளங்களில் பதிவேற்ற... அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு.

ஓவர்நைட்டில் பதினைந்து லட்சம் பேர் இவரது இந்த ‘கம் செயில் அவே’ பாடலின் வீடியோவைப் பார்த்து ரசிக்க, பாராட்டுகள் குவிந்தன. அதன்பின்பு அதிர்ஷ்டம் இவரது பியானோவைத் தட்ட (வீடே இல்லை. அப்புறம் எங்கிட்டு கதவு?) யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அமைந்தது. லட்சம் மக்களுக்கு மத்தியில் கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு தேசியகீதத்தை பியானோவில் இசைத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

“அதற்கு முன்பு வரை, பத்துப் பேருக்கும் மேலாக மொத்தமாக என் இசையை ரசித்ததில்லை. அன்று சுற்றிலும் பெரும் கூட்டத்தினிடையே நான் இருந்தபோது எப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றத்தை அனுபவித்தேன். கண்களை மூடி விரல்களை அசைத்தது மட்டுமே நினைவில் இருக்கிறது. கைதட்டல்களை நான் உணரவே வெகுநேரம் பிடித்தது” என நெகிழ்கிறார். இப்போது இவருக்கு வீடும், வீட்டுக்குள்ளேயே ரெக்கார்டிங் தியேட்டரும் இருக்கிறதாம்.

Next Story