செலவில்லாமலும் ஜெயிக்கலாம்!


செலவில்லாமலும் ஜெயிக்கலாம்!
x
தினத்தந்தி 19 Jan 2020 3:30 AM GMT (Updated: 18 Jan 2020 5:32 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் பணம், பரிசுப் பொருட்கள், சாதி, மதம் அபிமானங்கள் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி சில இடங்களில் மக்கள் இளைஞர்களை வெற்றி பெற வைத்துள்ளனர். அதே சமயம் தொண்டுக்கு பெயர் பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் சிலருக்கு தோல்வியையும் பரிசாக்கியுள்ளனர். ஆயினும், உள்ளாட்சி நிர்வாகம் குறித்த விழிப்புணர்ச்சி பரவலாகியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் ஓர் மக்கள் திருவிழாவைப் போல நடந்து முடிந்துள்ளன. மக்கள் கையில் அதிகாரம் என்பதே உள்ளாட்சியின் அடிப்படையாகும். அந்த வகையில் 9,613 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கிராம அளவிலான இந்த தேர்தலில் மட்டும் அரசியல் கட்சிகளோ, அதன் சின்னங்களோ அனுமதிக்கப்படுவதில்லை. அனைவரும் சுயேட்சைகளே! அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கட்சியின் அனுபவசாலிகளுக்கும், சீனியர்களுக்கும் தான் முக்கியத்துவம் தரும். உள்ளாட்சி என்பதால் இந்த தேர்தலில் கணிசமான இளைஞர்கள் போட்டியிட்டனர்.

கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பட்டதாரிகள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட புதியவர்கள் களம்கண்டனர். தேர்தல் பிரசாரத்திலேயே இளைஞர்களின் அணுகுமுறை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

ஊரக உள்ளாட்சி என்று சொல்லப்படும் கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் நிற்பவர்கள் ஒவ்வொருவரையும் மக்கள் நன்கு அறிவார்கள். அறிமுகமில்லாத எவரும் கிராமங்களில் களம் காணமுடியாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு வகைகளில் நிதி கிடைக்கிறது என்பதை அறிந்த கட்சிக்காரர்கள் பலரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை களத்தில் இறக்கினர். கோடிகள் வரை செலவு செய்தனர். பெரிய நகரங்களின் அருகில் இருக்கும் கிராமத்திற்கு பல கோடி ரூபாய் வருமானம் என்பதால் அதன் தலைவர் பதவிகளுக்கு நின்றவர்கள் வாக்காளர் களுக்கு கம்மல், மூக்குத்தி, வேட்டி, சேலை, ஆயிரக்கணக்கில் பணம்... என்றெல்லாம் கொடுத்து வாக்கு வேட்டையாடினார்கள். இது நேர்மையாகக் களம் கண்டவர்களை கடுமையாக பாதித்தது.

இத்தனை களேபரங்களுக்கு இடையிலும், சில இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் தனிப்பட்ட தகுதியால், உழைப்பால் மக்கள் நம்பிக்கையை பெற்று வென்றுள்ளனர். அந்தந்த தொகுதிகளில் விளையாடிய பண ஆதிக்கத்தை, சாதி ஆதிக்கத்தை முறியடித்து இவர்கள் எப்படி தேர்தலில் வெற்றிபெற்றனர் என்பது மிகவும் சுவாராசியமான செய்தியாகும். சில ஆரோக்கியமான உதாரணங்களின் மூலம் இப்படியான ஆரோக்கியமான நிகழ்வுகள் பெருகவும் வாய்ப்புள்ளதே!



தொண்டுக்கும் தோல்வி!

சென்னைக்கு அருகே உள்ள கூத்தம்பாக்கத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளங்கோ தன் கிராமத்தை செழிப்பாக்கியதில், பல வேலை வாய்ப்புகளை மக்களுக்கு உருவாக்கி கொடுத்ததில் இந்திய அளவில் ஒரு முன்னுதாரணமாக கருதப்பட்டவர். மிகச்சிறந்த சமூக சேவகர் என பல விருதுகள் பெற்றவர். ஆனால், கடைசி நேரத்தில் களத்தில் இறக்கப்பட்ட அதீத பணம் இளங்கோவின் வெற்றிவாய்ப்பை பறித்துவிட்டது.

இதேபோல ஓடந்துறை சண்முகமும் தொண்டுக்கு பெயர் பெற்ற ஊராட்சி தலைவர். தன் கிராமத்திற்கு 850 வீடுகள் கட்டித் தந்தவர். ஏராளமான திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு வந்தவர். சிறந்த ஊராட்சித் தலைவருக்கான வெளிநாடுகளின் விருதுகளை பெற்றவர். இந்த முறை அதீத பணபலம் இவரது வெற்றிவாய்ப்பை பறித்துவிட்டது.



திருட முடியாது

மதுரை மாவட்டம் கம்பூர், கொட்டாம்பட்டி வட்டாரம் செல்வராஜ் ஊரில் ஜல்லிக்கட்டுவிற்கான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். கிராமத்தில் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அங்கே ஓடிச் சென்று செய்து தருவார். குறிப்பாக கிராம சபை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதில் பாடுபட்டவர். ஆயினும் கடைசி மூன்று நாட்கள் எதிரணியினர் வினியோகித்த பணத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார். ‘‘அது பற்றி ஒன்றும் கவலையில்லை. இங்கே இனி யார் ஜெயித்து வந்தாலும் ஊழல் செய்யமுடியாது. கிராமசபை கூட்டத்தில் கணக்கை கொடுக்க வேண்டும். ஆகவே, என்னை எதிர்த்து போட்டியிட்டவரை மக்களுக்காக நான் வேலை வாங்குவேன். எனக்கும் நிறைய பேர் ஓட்டுப் போட்டதால் நான் எதிர்க்கட்சி பொறுப்புடன் நடந்து கொள்வேன்’’ என்கிறார் இந்த இளைஞர்.

பெரம்பலூர் காரைப் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்ட பொன்னுசாமி தனது அரசு வேலையை துறந்து போட்டியிட்டார். ஊரில் இளைஞர்களை ஒருங்கிணைத்து தன் சகோதரர் தனபாலுடன் இணைந்து 110 ஏக்கரில் கரடுமுரடாக முளைத்திருந்த வேலிக்காத்தான் மரங்களை அகற்றி கிராமத்து நீர்நிலைகளை பாதுகாத்தது இவர்களின் குழு! ஆயினும் ஊரில் தேர்தலின் இறுதி நாட்களில் விளையாடிய பணத்தால் வெற்றி வாய்ப்பு நழுவிப்போனது.

மதுரை கேத்துவார்பட்டியை சேர்ந்த இளைஞர் முருகேசன் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டு தோற்றார். ஆனாலும் மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டி அதில், கீழ் பகுதியில், ‘‘நீங்க இப்படி செய்வீங்கன்னு கனவிலே கூட எதிர்பார்க்கல..’’ என்று போட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

பொன்னமராவதி ஒன்றியம் ஆலவாயல் ஊராட்சியின் இளைஞர்கள் தேர்தலுக்காக தங்கள் ஊரில் வேட்பாளர்கள் அதிகமாக பணம் செலவழித்து வருவது தொடர்பாக எச்சரித்து, ‘‘தேர்தலில் செலவு செய்துவிட்டு, ஊராட்சியின் வளர்ச்சிக்கு வரும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என யாரும் நினைக்க வேண்டாம். செலவழிக்கும் பணத்திற்கு கிராம சபையில் கணக்கு கேட்கப்படும். கொடுக்கப்படும் கணக்கு சரிதானா? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆராயப்படும்” என பேனர் வைத்திருந்தனர்.

இவையெல்லாம் உள்ளாட்சி தொடர்பாக ஒரு நல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதைத்தான் உணர்த்துகிறது. மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் மொத்தம் 450 பேர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற முடிந்துள்ளது.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in


Next Story