தினம் ஒரு தகவல் : விண்வெளியில் கால் பதிக்கும் காலம்


தினம் ஒரு தகவல் : விண்வெளியில் கால் பதிக்கும் காலம்
x
தினத்தந்தி 21 Jan 2020 8:49 AM GMT (Updated: 21 Jan 2020 8:49 AM GMT)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், விண்வெளி தொழில்நுட்பம் குறித்து கற்பிக்க இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி எனும் கல்வி நிறுவனத்தை இந்திய விண்வெளி துறை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது.

திருவனந்தபுரத்துக்கு மிக அருகில் வலியமலா எனும் இடத்தில் இது அமைந்துள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் சேர பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் எடுத்து படித்திருக்க வேண்டும். நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிடுவார்கள்.

பத்திரிகை விளம்பரங்கள் மூலம் சேர்க்கை விவரங்களை அறியலாம். இதற்கான நுழைவு தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது. நுழைவு தேர்வுக்கு பின்னர் வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தாலே சேர்க்கை உறுதி எனலாம்.

ஜூலையில் இதற்கான கவுன்சிலிங் நடக்கிறது. இக்கல்வி நிறுவனத்தில் பி.டெக். ஏவியானிக்ஸ், பி.டெக். ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயரிங், பி.டெக். பிஸிகல் சயின்ஸ் என மூன்று வகையான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நான்கு வருடப் படிப்புகள். இதுதவிர முதுநிலை படிப்புகளும் உண்டு.

இங்கு படிப்பவர்களுக்கான கல்விக்கட்டணம், விடுதி கட்டணம், உணவு கட்டணம் போன்றவற்றை கல்வி நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது என்பது கூடுதல் சிறப்பு. இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு செமஸ்டருக்கும் புத்தகங்கள் வாங்குவதற்கு நிதியும் வழங்கப்படுகிறது. படிப்பு முடிந்ததும் அங்கேயே பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.

இங்கு படிப்பவர்களுக்கு 2 நிபந்தனைகள் உண்டு. ஒன்று, கல்வி நிறுவனத்திலேயேதான் தங்கி படிக்க வேண்டும். இரண்டு, படிப்பை முடித்தவுடன் இஸ்ரோவில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். இஸ்ரோவில் நல்ல சம்பளம், வீடு என அனைத்து வசதிகளும் உண்டு.

இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் இருப்பதால் வெளிநாட்டு வாய்ப்புகளும் வருங்காலத்தில் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. நீங்களும் ஒருநாள் விண்வெளியில் கால் பதிக்கும் காலம் வரலாம். அதற்கான முதல் அடியை இப்போதே எடுக்கத் தொடங்குங்கள்.


Next Story