வானவில் : வருகிறது டாடா அல்ட்ரோஸ்


வானவில் : வருகிறது டாடா அல்ட்ரோஸ்
x
தினத்தந்தி 22 Jan 2020 10:31 AM GMT (Updated: 22 Jan 2020 10:31 AM GMT)

வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப புதிய அம்சங்களை, அவர்களது விருப்பத்துக்கு ஏற்ற தேவைகளை இதில் பொருத்தித் தரவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேட்ச் பேக் மாடலில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அல்ட்ரோஸ் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இதே மாடலில் உள்ள பிற நிறுவன தயாரிப்புகளான மாருதி சுஸுகி பலேனோ, ஹோண்டா ஜாஸ், டொயோடா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ 20 ஆகிய மாடலுக்கு போட்டியாக இது இருக்கும் என்று தெரிகிறது. எனவே இதன் விலையும் சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சத்துக்குள் இருக்கும் எனத் தெரிகிறது. இதில் பல்வேறு வேரியன்ட்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டாலும், வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப புதிய அம்சங்களை, அவர்களது விருப்பத்துக்கு ஏற்ற தேவைகளை இதில் பொருத்தித் தரவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இப்போதைக்கு இந்த அல்ட்ரோஸ் மாடல் மட்டும்தான் டாடா மோட்டார்ஸ் தயாரிப்பில் பி.எஸ் 6 புகை விதி சோதனைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக சந்தையில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல இந்த என்ஜின் பிரிவில் இதுவே முதலாவது காராகவும் இருக்கும். இதில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலையும் அறிமுகப்படுத்துகிறது. இது 1.2 லிட்டர் என்ஜின் 86 ஹெச்.பி. திறன் மற்றும் 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் வந்துள்ளது. மற்றொரு வேரியன்ட் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 90 ஹெச்.பி. திறன் மற்றும் 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 5 கியர்களைக் கொண்டதாக மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது.

இதில் இரட்டை கிளட்ச் வசதியோடு ஆட்டோமேடிக் மாடல் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடலையும் அறிமுகப்படுத்தப் போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடலுக்கான முன் பதிவு கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதியே தொடங்கிவிட்டது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மாடல் காரையே அதிகம் தேர்வு செய்துள்ளதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கார் பிப்ரவரி மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Next Story