சாதிப்பாரா ஜே.பி.நட்டா?


சாதிப்பாரா ஜே.பி.நட்டா?
x
தினத்தந்தி 24 Jan 2020 11:24 AM GMT (Updated: 24 Jan 2020 11:24 AM GMT)

பா.ஜ.க.வின் பழம்பெரும் போர் வீரரான ஜே.பி.நட்டாவின் செயல்பாடுகள், அவருக்கு முன் கட்சித் தலைவராக செயல்பட்ட அமித் ஷா மற்றும் இதர தலைவர்களின் சாதனைகளுடன் ஒப்பிடப்படும்.

பா.ஜ.க.வின் 11-வது தலைவராக, ஜகத் பிரகாஷ் நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட போது, அந்நிகழ்வில் கட்சியின் முன்னாள் தலைவர்களான  மூத்த  தலைவர் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி, நிதின் கட்காரி மற்றும் அமித் ஷா ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டது, அவருக்கு  பிரதமருடன் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தியது.

பா.ஜ.க. தலைவராக நட்டா பதவியேற்றது, அக்கட்சியின் செயல்பாடுகளை எப்படி மாற்றப்போகிறது? அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானி காலத்தில், அவர்கள் தொடர்ச்சியாக கட்சியை வழிநடத்தி சென்ற பின், 2013-ல் நரேந்திர மோடி தேசிய அரசியல் களத்தில் தோன்றினார். பா.ஜ.க. கட்சி தலைவராக இதுவரை  மோடி செயல்படாவிட்டாலும், கட்சியை அவர் கட்டுக்குள் வைத்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. 

பதவியேற்பு விழாவில் பேசிய மோடி, நட்டாவுடன் தனக்கு இருந்த நீண்ட கால தொடர்புகளை பற்றி கூறினார். இமாச்சல பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்த, அவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் சென்று பணியாற்றிய காலம் பற்றி சொன்னார்.  நட்டா தனது அரசியல் வாழ்க்கையை 1970-களில், பீகார் மாணவர் இயக்கத்தில் தொடங்கினார்  என்பதால் இமாச்சல பிரதேச மக்களுக்கு மட்டுமல்லாமல், பீகார் மக்களுக்கும் இது பெருமைக்குரிய தருணம் என்றார். 

2020-ன் இறுதியில், சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் பீகார் மாநில மக்களுடன் உணர்வுரீதியாக நெருங்க, இது ஒரு முயற்சி என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 

மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை இழந்த பின்,  பீகார்    தேர்தல், பா.ஜ.க.விற்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அரியானா மாநில சட்டமன்ற தேர்தலிலும், பெரும்பான்மை இடங்களை வெல்ல முடியாமல், அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. 

பா.ஜ.க. கோட்டையாக முன்பு திகழ்ந்த டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால்,  நிலைமை இன்னும் சிக்கலாகும். கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் முன்பு, கடைசி முறையாக பேசிய அமித் ஷா, கட்சியின் அடித்தளம் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டிருந்தாலும், கட்சியின் செல்வாக்கு குறைவாக உள்ள மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் கட்சியை வளர்த்தெடுக்க இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளதாக கூறினார். 

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, எதிர்கட்சிகளின் தூண்டுதலில் உருவான மாணவர் போராட்டங்களை, பா.ஜ.க. நாடு முழுவதும்  எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சிகள் மற்றும் மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கேரளா மற்றும் டெல்லியை சேர்ந்த பிராந்திய தலைவர்களின் பரப்புரைகளை எதிர்கொண்டு, அவற்றிற்கு  எதிர்வினையாற்ற வேண்டிய சவாலான காரியம் பா.ஜ.க. தொண்டர்களை எதிர் நோக்கியுள்ளது.

சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்கு பின்னர், காஷ்மீரில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய சவாலான பணியும் பா.ஜ.க.வின் புதிய தலைவர் முன் உள்ளது. காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை பெற,  பா.ஜ.க. கட்சியின் காரியகர்த்தாக்கள் முக்கிய பங்காற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில் ஜே.பி.நட்டாவுக்கு நிறைய சவால்கள் உள்ளன. அவர் சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நட்டா கடந்து வந்த பாதை

2014-ல், அன்றைய  பா.ஜ.க. கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக பதவியேற்ற தருணத்தில் இருந்து,  பா.ஜ.க. கட்சி  தலைவர் வேட்பாளராக நட்டாவை பலரும் கருதினர். இந்த ஊகங்கள், அமித் ஷா கட்சி தலைவராக பதவியேற்ற பின் ஓய்ந்தன. நட்டா மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

2019 ஜூனில், அமித் ஷா மத்திய உள்துறை மந்திரியான பின்னர், கட்சியின் செயல் தலைவராக நட்டா நியமிக்கப்பட்டார். 

இமாசல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அமைதியான சுபாவம் கொண்ட தலைவரான நட்டா, ஒரு தேர்ந்த ராஜ தந்திரியாக, கட்சியை கட்டமைப்பதில் மிகுந்த திறமை மிக்கவராக, தொண்டர்களினால் கருதப்படுகிறார்.  அவரின் திறமை 2019 நாடாளுமன்ற தேர்தல்களின் போது கடுமையான பரீட்சைக்குள்ளாகி, உத்தரப்பிரதேசத்தில் எஸ்.பி - பி.எஸ்.பி கூட்டணியின் அசுர பலத்திற்கு எதிராக,  பா.ஜ.க.வின் வெற்றியை உறுதி செய்ததில் வெளிப்பட்டது. 

பா.ஜ.க. கட்சி தலைவர் பதவி காலம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் என்ற விதிமுறை உள்ளது. ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக கட்சி தலைவராக இருக்க முடியாது. கட்சித் தலைவர் பொதுவாக அரசாங்க பதவி எதுவும் வகிப்பதில்லை. மத்திய அமைச்சரவையில் சேருவதற்காக கட்சி தலைவர்கள், அப்பதவியை துறந்துள்ளனர்.

காங்கிரசின் வாரிசு அரசியல்

நட்டாவிடம் கட்சி தலைமையை ஒப்படைத்த போது, அமித் ஷா, ஜனநாயக நெறிமுறைகளை கடைபிடிக்கும் ஒரே கட்சி  பா.ஜ.க. மட்டும் தான் என்றார். காங்கிரஸ் கட்சி ‘வாரிசு அரசியலை’ கொண்ட கட்சி என்றார். 1921-ல் காங்கிரஸ் கட்சி தலைவரான மகாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சியில் ஒரு படிநிலை முறையிலான கட்டமைப்பை  உருவாக்கினார். ஜவகர்லால் நேருவின் வாரிசுகள், கட்சியை ஒரு ’குடும்ப நிறுவனமாக’ மாற்றி, வாரிசு முறையிலான தலைமையை உருவாக்கினர்.

1978-ல் இ.காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி  உருவாக்கிய பின், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், கட்சியின் தேசிய தலைவராகவும், அமைப்பின் தலைவராகவும், காரியக் கமிட்டியின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் அனைத்து கமிட்டிகளின் தலைவராகவும், கட்சியின் பிரதான பேச்சாளராகவும்,  கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சி தலைவரை, பிராந்திய காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கின்றனர்; இந்த நடைமுறையை காங்கிரஸ் காரியக் கமிட்டி பலமுறை மீறி, தன்னுடைய சொந்த வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளது. 

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in

வாழ்க்கை குறிப்பு

பாட்னாவில் 1960 டிசம்பர் 2-ல் பிறந்தார்

1975இல் அரசியலில் நுழைந்தார். பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி) தொடங்கிய சம்பூர்ண கிராந்தி (முழுமையான புரட்சி) இயக்கத்தில்  இணைந்தார்.

பின்னர் ஏ.பி.வி.பி என்ற பா.ஜ.க.வின் இளைஞரணியில், மாணவராக இருக்கும் போதே சேர்ந்தார்

அவரின் தந்தை என்.எல்.நட்டா, பாட்னா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

1977-ல் ஏ.பி.வி.பி சார்பில், பாட்னா பல்கலைகழக மாணவர் சங்கத்தின் செயலாளராக தேர்தேடுக்கப்பட்டார்

இமாசல பிரதேச பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்

1987-ல் அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் அரசுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்ததற்காக 45 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் 

1989-ல், 29தே வயதில், நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வின் இளைஞரணிக்கு பொறுப்பேற்றார். 

1991-ல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவரானார்

இமாசல பிரதேசத்தில் மூன்று முறை மந்திரியானார் - 1993 முதல் 1998 வரை, 1998 முதல் 2003 வரை ; பின்னர் 2007-2012-ல் ; காடுகள், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கான மந்திரியாக பணியாற்றினார். 

2007 தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்றார். 2008 முதல் 2010 வரை இமாச்சல் பிரதேசத்தில், காடுகள், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கான மந்திரியாக பணியாற்றினார். 

2012-ல் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2014-ல் மத்திய சுகாதாரத் துறை மந்திரியானார்.

2019 தேர்தலில், பி.எஸ்.பி-எஸ்.பி கூட்டணிக்கு எதிராக, பாஜக வெற்றி பெற வகை செய்தார்

பா.ஜ.க.வின் செயல் தலைவராக, 2019 ஜூனில் நியமிக்கப்பட்டார்

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் தொகுதிக்கான மக்களவை உறுப்பினர் ஜெயஸ்ரீ பானர்ஜியின் மகளான மல்லிக்கா நட்டாவை மணந்தார். இமாச்சல் பிரதேச பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியரான மல்லிக்கா, ஏ.பி.வி.பி அமைப்பில் தீவிரமாக பணியாற்றியவர்.




Next Story