சிறப்புக் கட்டுரைகள்

வளர்ந்த இந்தியா + "||" + Developed India

வளர்ந்த இந்தியா

வளர்ந்த இந்தியா
1947 ஆகஸ்டு 15, நள்ளிரவைக் காத்திருந்து கொண்டாடியதற்கிணையாய் இந்தியா வல்லரசு ஆகி விட்டதைக் கொண்டாட வேண்டிய நேரமும் வந்து, அதன் பின்னால் பல நாட்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
2020 -ல் இந்தியா வல்லரசாகும், வல்லரசாக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திரும்பத் திரும்ப சொல்லி வந்த 2020-ம் ஆண்டு பிறந்தாயிற்று.

1947 ஆகஸ்டு 15, நள்ளிரவைக் காத்திருந்து கொண்டாடியதற்கிணையாய் இந்தியா வல்லரசு ஆகி விட்டதைக் கொண்டாட வேண்டிய நேரமும் வந்து, அதன் பின்னால் பல நாட்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் கொண்டாட்டங்கள் ஏதும் இல்லையே ஏன்? இந்தியா வல்லரசு ஆக வில்லையா?

நேரிலும், ஊடகங்கள் மூலமும் பதிலாய் விழும் பெரும்பாலான குரல்கள், “இல்லை இல்லை” என்பதாகத்தான் இருக்கின்றன. இந்த “இல்லை”களில் தொத்திக் கொண்டிருப்பது இந்திய மனங்களின்,

வெட்கம், வேதனை, விரக்தி, ஏமாற்றம், எகத்தாளம், கோபம், குமுறல் என்று எல்லாமும் எதிர் மறை எண்ணங்களின் எதிரொலிகள். இந்தியாவின் இந்தப் பெரும்பான்மை சொல்வது என்ன?

கலாமின் அந்தக் கனவு பகல் கனவா? நடக்க முடியாதவற்றை ஏன் கலாம் கணித்தார்?

இந்த நோக்குடன், கலாமின் “இந்தியா 2020 விஷன் பார் நியூ மில்லினியம்” நூலை திரும்ப ஒரு முறைபடித்துப் பார்த்தேன். நான் அறிந்து கொண்டபடி, அதன் சாரம் இதோ,

2020-ன் இலக்கு என்ன என்பதையும், எப்படி அவற்றை அடைய முடியும் என்பதையும் வரையறுத்து, புத்தகம் இரு அங்கங்களாக அமைக்கப் பட்டுள்ளது.

முதல் அங்கம், துறை சார் வல்லுனர்கள், ஐநூறுக்கும் மேற்பட்டவர்களின் துணையுடன், பல மாதங்கள் உழைத்து, விவசாயம் முதல் விண்வெளித் துறை வரை இந்தியாவின் அப்போதைய நிலையையும், அடுத்து வரும் காலங்களில் ஏற்படும் முன்னேற்றங்களையும் கணித்து, 2020-ல் இந்தியா தொட வேண்டிய சிகரங்களையும், அதற்கான படிகளையும் கணித்துச் சொல்லியிருந்தது கலாமின் அந்த “2020 விஷன் டீம்”. இரண்டாவது அங்கம், அந்தப் படிகளை எப்படி ஏறுவது என்பதை முத்தாய்ப்பாக கலாம் பட்டியலிட்டிருக்கிறார். ஒரு தனி மனிதனின் பங்கு, ஆராய்ச்சி கூடங்களின் பங்கு, பொதுத் துறை ஸ்தாபனங்களின் பங்களிப்பு, பொதுஜன ஊடகங்களின் பங்கு, சிறு குறு தொழில் மனைகளின் பங்கு, அரசின் பங்கு என்று யார் யார் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கலாம் அவரது பாணியிலேயே கன கச்சிதமாக வரையறுத்திருக்கிறார்.

புத்தகம் வெளி வந்தது 1996-ம் ஆண்டில். இப்போது நாம் 2020-க்கு வருவோம்.

2020 விஷனின் முதல் அங்கம் முன்பே பார்த்தபடி துறை வாரியாக அந்தச் சிகரங்களின் உயரங்களைக் கூட்டி ஒரு பொதுவான இலக்கையும் மொத்த இந்தியாவிற்குமாக விதித்தார்கள். அதைத்தான் நாம் பக்கத்தில் பார்க்கும் வரைபடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதன்படி இந்தியாவின் நிலை உலக அளவில் 1996-ம் ஆண்டில் இருந்த 15-வது இடத்திலிருந்து 2020-ல் குறைந்தது ஐந்தாவது இடத்திற்கு உயர வேண்டும். இந்தியர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டால் உலக அளவில் நான்காவது இடத்திற்கும் உயரமுடியும் என்பதாகும்.

முதல் இருபத்தைந்து இடத்தில் இருக்கும் எல்லா நாடுகளும் தங்களின் முன்னேற்றப் பாதைகளில் முந்தியடித்து ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் தனக்கு முன்னால் முன்னேறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து, பிரான்சு போன்ற பல முன்னேறிய பதினொரு நாடுகளையும் முந்திக்கொண்டு இன்று ஐந்தாவது இடத்தை இந்தியா தாண்டிவிட்டதாக உலக வங்கி உள்பட பல சர்வதேச பொருளாதார அமைப்புகள் அவற்றின் சமீபத்திய ஆண்டறிக்கைகளில் அறிவித்து இருக்கின்றன. இப்போதைய நிலையில் இந்தியா மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது. நமது அடுத்த இலக்கு 2030-ல் இரண்டாவது இடம்.

இந்த நிலை நாம் எல்லாம் மகிழ்ந்து கொண்டாட வேண்டியதல்லவா? அதை விட்டு விட்டு இந்தியாவின் நிலையைக் குறை கூறிக் கும்மியடிப்பது எதற்காக? பார்த்தும், படித்தும், கேட்டும் நம் மீது நமக்கே உண்டான அவ நம்பிக்கையாலா? நமது அறியாமையாலா? அல்லது யாரோ சொன்னபடி, இது குறை கூறிச் சுகம் காணும் இந்தியர்களின் மன நோயா?2020 விஷன் அறிக்கையின் இரண்டாவது பகுதி, தனி மனிதர்களாகவும், அமைப்புக்களாகவும் என்ன என்ன எப்படிச் செய்ய வேண்டும் என்பதை, கலாமே விரிவாக எழுதியிருப்பதைப் படிக்கும் போது இவற்றை மனதில் கொண்டுதான் எழுதியிருப்பாரோ என்ற எண்ணம் அலையாடுவதைத் தவிர்க்க முடியாது. ஆம், கலாம் எழுதியிருப்பது என்ன தெரியுமா? இந்தியா 2020-ல் உலகின் முன்னேறிய நாடாக, முதல் ஐந்தாவது இடத்தை ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தில் தொடவேண்டும். அப்படி ஒரு நாடாக வளர உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையும், பொறுப்பும் உள்ளது.

ஒரு ஆசிரியராக, மருத்துவராக, வங்கி ஊழியராக என்று எந்த ஒரு உருவில் இருந்தாலும் மாதத்தில் ஓரிரு நாட்கள் உங்கள் பணியை சிறப்பாகவும், விரைவாகவும், பெருமைப்படும் படியாகவும், உங்களையும், ஊரையும் உயர்த்துவதாகவும், ஒரு சில ஏழை எளிய மனிதர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்துவதாகவும் இருக்கட்டும், என்று தொடங்கி, மத்திய மாநில அரசுகள், மத்திய மாநில அரசு அமைப்புகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள், தனியார் துறை அமைப்புகள், பல் நாட்டு நிறுவனங்கள், அரசுசார தொண்டு நிறுவனங்கள் என்று ஒவ்வொருவரும் செய்யவேண்டியது என்ன என்று பட்டியலிட்டு விட்டு கடைசியாக ஊடகத்தார் பக்கம் வருகிறார்.

ஊடகத்தில் பணிசெய்பவர்கள் ஒரு படி மேலே சென்று, நாட்டில் நடக்கும் சிறப்பான செயல்களும், சாதனைகளும் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அவற்றை அனைவரும் அறியும் வண்ணம் பரப்ப வேண்டும். எவ்வளவு செல்வந்த நாட்டிலும், சில தகாத செயல்கள், மனிதர்கள் இருக்கத்தான் இருப்பார்கள். அந்தச் செயல்களும், மனிதர்களும் புறக்கணிக்கப் பட வேண்டுமே ஒழிய, காட்சிப் படுத்த வேண்டியவையல்ல. ஆண்களும் பெண்களுமாய் இந்திய நாட்டின் பெருமையை உயர்த்தும், துறைசார் சாதனையாளர்களை நூறும் ஆயிரமுமாகக் கண்டறிந்து அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்திக் கொண்டே போவதாக இருக்கட்டும். கலாமின் 2020 விஷன் அறிக்கையின் முக்கிய அங்கமே இதுதான். இதைத்தான், சுருக்கமாகக் கலாம், “கனவு காணுங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அந்தக் கனவுகளின் செயல் வடிவத்தைதான் ஒவ்வொருவருக்கும் என்னவாக இருக்க வேண்டும் என்று வரையறுத்தார்.

இப்போது, திரும்ப மேலே எழுதியிப்பதைப் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். துறை சார் தனி மனிதனில் இருந்து ஊடகத்தினர் வரை, அவரவர்கள், அவரவர் கடமையைச் செய்திருந்தால் 1947-ல் ஆகஸ்டு 15-ஐ கொண்டாடியது போல் ஜனவரி, 1, 2020-ஐ இந்தியாவே கூடிக் கொண்டாடியிருக்கும் நாளாக இருந்திருக்கும் அல்லவா?.

இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை, 2020-ன் அடுத்த வரும் நாட்களில் இந்தியர்கள் அனைவரும் கலாமின் “கனவு”ப்படி, வீட்டையும், நாட்டையும் குறை கூறிக் கூவுவதை விட்டு விட்டு, அவரவரின் கடமைகளைச் சரிவரச் செய்தால், 2020-ஐ ஒரு கனவு ஆண்டாக மாற்றி 31 டிசம்பர் 2020 நாம் அனைவரும் கலாமின் கனவான வளர்ந்த இந்தியாவைக் கொண்டாடலாம்.

முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றம்.

ஆசிரியரின் தேர்வுகள்...