சிறப்புக் கட்டுரைகள்

மங்கை பாதம்பட்டால் மண்ணும் பொன்னாகும் + "||" + If the mangai is scarred The soil is also gold

மங்கை பாதம்பட்டால் மண்ணும் பொன்னாகும்

மங்கை பாதம்பட்டால் மண்ணும் பொன்னாகும்
குடும்ப பொறுப்புகளை கவனித்தபடி, தொழில் நிர்வாகத்தையும் திறம்பட செய்துகொண்டிருக்கும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.
குடும்ப பொறுப்புகளை கவனித்தபடி, தொழில் நிர்வாகத்தையும் திறம்பட செய்துகொண்டிருக்கும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை போன்று குடும்ப நிர்வாகத்தோடு, விவசாயத்திலும் ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டும் இளம் குடும்பத்தலைவிகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் 32 வயது மகேஸ்வரி. இவர் மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தில் மகத்தான மகசூலை பெற்றுக்கொண்டிருப்பவர். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அக்கரை நெகமம் கிராமத்தை சேர்ந்தவர். கணவர் சுப்பிரமணியன், குழந்தைகள் கலைச்செல்வி, விக்னேஷ்வரன். மாமனார், மாமியாருடன் கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார்.

வீட்டைச்சுற்றி இருக்கும் 5 ஏக்கர் நிலத்தில் 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் இவர், சமீபத்தில் தனது விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு நடவு செய்திருந்தார். அது அந்த சுற்றுவட்டாரத்திலேயே அதிக விளைச்சலை கொடுத்திருக்கிறது. அதன் மூலம் அதிக வருவாய் ஈட்டி உள்ளார். வேளாண்மை என்றால் நஷ்டம் என்று பலரும் புலம்பிக்கொண்டிருக்க, ‘காலநிலைக்கு ஏற்ப விவசாய முறைகளை மாற்றினால் அதிக லாபம் சம்பாதிக்கலாம்’ என்று கட்டைவிரலை உயர்த்திக்காட்டுகிறார் மகேஸ்வரி.

இவரது சொந்த ஊர் தர்மபுரி. திருமணத்துக்கு பின்னர் கணவர் சுப்பிரமணியனுடன் இணைந்து விவசாய பணிகளை தொடங்கினார். பின்பு அவருக்கு அதில் முழுஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. கரும்பு, வாழை என்று பல்வேறு பயிர்களை நடவு செய்து அதிலே மூழ்கியிருக்கிறார். அவரது விவசாய அனுபவம் சற்று வித்தியாசமானது.

“எங்கள் தோட்டத்தில் கரும்பும், வாழையும்தான் பிரதான பயிராக இருந்தது. கீழ்பவானி பாசனப்பகுதி என்பதால் முன்பு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. கரும்பும் வாழையும், முழுநேரமும் தண்ணீர் தேவை ஏற்படக்கூடிய பயிர்கள். நான் 3 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு இருந்தேன். போதுமான அளவு தண்ணீர் இருந்தால் ஒரு ஏக்கருக்கு அதிக பட்சம் 60 டன் கரும்பு கிடைக்கும். நடவுக்கூலி, களைஎடுப்பு, தோகை உரிப்பு, வெட்டுக்கூலி எல்லாம் கழித்தால், கையில் லாபம் எதுவும் மிஞ்சாது. சில நேரங்களில் 40 டன் அளவுக்குதான் கரும்பு கிடைக்கும். அப்போது நஷ்டம் ஏற்பட்டுவிடும்.

கரும்பு பத்தரை மாத பயிர். 11 மாதத்துக்கு பிறகுதான் சர்க்கரை ஆலையில் இருந்து கரும்பு வெட்ட வருவார்கள். வெட்டி முடியும்போது பல தடவை 13 மாதங்கள் வரை ஆகியிருக்கிறது. பின்பு நிலத்தை பண்படுத்தி அடுத்த முறை நடவு செய்ய 3 மாதங்கள் வரை தேவைப்படும். அப்படி பார்த்தால் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறைதான் கரும்பு நடவு செய்ய முடியும். வருவாய் குறைவு. நேரம் விரையம். இந்த சூழலில்தான், மரவள்ளிக்கிழங்கு நடவு பற்றி சிந்தித்தேன்.

கரும்புக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கு நடவு செய்யலாம் என்று நான் சொன்னதும் கணவர் தயங்கினார். ஆனால் நான் வற்புறுத்தி அவரையும் சம்மதிக்கவைத்து, களத்தில் இறங்கினேன். அதனை சொட்டுநீர் பாசன முறையில் பயிரிட முடிவு செய்தேன். ஏற்கனவே மானியம் மூலம் எங்கள் தோட்டத்தில் சொட்டுநீர் பாசன வசதி இருந்ததால், அதற்கு தகுந்தபடி நிலத்தை தயார் செய்தோம். எங்கள் பகுதிக்கு எந்த ரக மரவள்ளிக்கிழங்கு அதிக மகசூல் தரும் என்று சக விவ சாயிகளிடம் கலந்தாலோசித்தேன். முள்ளுவாடி என்ற ரகத்தை 9 மாதத்தில் இருந்து 10 மாதத்துக்குள் அறுவடை செய்யலாம் என்றும், விளைச்சலும் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார்கள்.

உடனடியாக விதைக்குச்சிகள் வாங்கி வந்து, 3 ஏக்கரிலும் நம்பிக்கையுடன் நடவு செய்தேன். நடவுக்கூலி கரும்பினை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருந்தது. அதனால் மகிழ்ச்சியாக பணியை தொடங்கினோம். நடவு செய்த ஓரிரு நாட்கள் காலையும் மாலையும் சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் விட்டு வந்தோம். குச்சிகளில் இருந்து துளிர் வெளியே வந்தது. அதன்பிறகு 2 நாட்கள் அல்லது 3 நாட் களுக்கு ஒரு முறை 2 அல்லது 3 மணி நேரம் தண்ணீர் பாயச்செய்தோம். ஒரு மாதத்தில் செடிகள் நன்றாக வளரத்தொடங்கின. அதன் பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை சுமார் 4 மணி நேரம் மட்டும் தண்ணீர் விட்டோம். 2 மாதத்தில் செடிகள் நிழல் விழும் அளவுக்கு வளர்ந்து விட்டன.

அந்த நேரத்தில் சற்று மழை பெய்ததால் தண்ணீர் பாய்ச்சவில்லை. 5 முதல் 8 மாதம் வரை 15 அல்லது 20 நாட் களுக்கு ஒரு முறை தண்ணீரை சொட்டு நீராக பாய்ச்சினோம். 9-வது மாதத்தின் கடைசியில் அறுவடைக்கு கிழங்குகள் தயாராகின. முதல் முறையிலேயே லாபம் கிடைத்தது. எனவே அடுத்த முறையும் மரவள்ளிக்கிழங்கு என்று முடிவு செய்தேன். கணவரும் ஒப்புக்கொண்டார். இப்படி 3 ஆண்டுகளாக தொடர்ந்து மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு நல்ல விளைச்சலை பெற்றுவருகிறோம். வாய்க்கால் பாசனம் இல்லை என்றாலும், கிணற்று பாசனத்திலேயே போதிய தண்ணீர் பாய்ச்ச முடிகிறது. 2-வது தடவையில் இருந்து விதைக்குச்சிகள் வாங்க வேண்டியது இல்லை என்பதால் நடவுக்கூலி ஏக்கருக்கு ரூ.3 ஆயிரத்துக்குள்தான் ஆகிறது.

அடி உரமாக யூரியா, மேல் உரமாக பொட்டாஷ், ஒரு முறை மட்டும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால் போதும். மற்ற நேரங்களில் பஞ்சகவ்யம் தெளித்து மரவள்ளிக்கிழங்கு செடிகளை கண்ணும் கருத்துமாக பார்த்து வளர்ப்பேன். இதனால் கடந்த முறை ஒரு ஏக்கருக்கு 18 டன் கிழங்கு விளைச்சல் கிடைத்தது. இதில் ஒன்றரை டன் அளவுக்கு மண் கழித்து டன்னுக்கு தலா ரூ.7 ஆயிரம் வரை விலை கொடுத்தார்கள். கரும்புடன் ஒப்பிடும்போது கரும்பு 2 முறை போடும் காலத்தில் மரவள்ளிக்கிழங்கு 3 முறை போட்டு விளைச்சல் பார்த்து விட முடியும்.

சேலம், அந்தியூர் அருகே பூனாச்சி பகுதிகளில் உள்ள சேகோ தொழிற்சாலைகளில் இருந்து கிழங்கினை மொத்தமாக விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். அவர்களே வந்து அறுவடையும் செய்து கொள்கிறார்கள். எனவே நடவு செய்து வளர்க்கும் பொறுப்பை மட்டும் நாம் பார்த்தால்போதும். இதற்கு இயற்கை உரம் என்ற பெயரில் குப்பை, சாணம் போன்றவைகளை பயன்படுத்த முடியாது. அப்படி போட்டால் கிழங்குகளின் வேரில் இருந்தே புழுக்கள் தொற்றி விடும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடந்த முறை அறுவடையின்போது ஒரு மூட்டில் 10 கிலோ எடைவரை கிழங்குகள் இருந்தன. சில கிழங்குகள் என்னால் தூக்க முடியாத அளவுக்கு கனமாக இருந்தன. எனது வெற்றிக்கு காரணம், எதை எந்த நேரத்தில் பயிரிடவேண்டும் என்று சமயோசிதமாக முடிவு எடுத்ததுதான். எப்போதும் போன்று 2 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளோம். தேவை மற்றும் விலையின் அடிப்படையில் கரும்பு பயிரிடவும் தயாராக இருக்கிறோம். ஆனால் தற்போது மரவள்ளிக்கிழங்குக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இதனை தேர்ந்து எடுத்து இருக்கிறேன்.

3 ஆண்டுகளாக மரவள்ளி சாகுபடியில் கிடைத்த அனுபவத்தால் அடுத்த முறை அதிக விளைச்சல் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். 20 முதல் 25 டன் வரை அடுத்து கிடைக்கும் என்று நம்புகிறேன். இதற்காக இந்த முறை உழவுப்பணியில் இருந்தே உடன் இருந்து ஆழமாக உழவு ஓட்டி இருக்கிறேன். நானே மற்ற தொழிலாளிகளுடன் சேர்ந்து மண்வெட்டி எடுத்து தேவையான வேலைகள் செய்கிறேன். நான் முழு நேரமும் வேலை செய்வதால் சிறு களை எடுக்கும் பணி, தண்ணீர்பாய்ச்சுவது போன்றவற்றுக்கு கூலி ஆட்கள் தேவைப்படுவதில்லை. மரவள்ளியை பொறுத்தவரை ஒன்று அல்லது 2 முறை மட்டுமே களை எடுக்க வேண்டியது இருக்கும். செடி வளர்ந்து நிழல் மண்ணில் விழுந்து விட்டால் களைச்செடிகள் முளைக்காது. எனவே அந்த செலவும் மிச்சம்” என்று தனது வெற்றிக் கதையை சொல்கிறார், மகேஸ்வரி.