எழுந்தது வீரம்.. பணிந்தது காளைகள்..


எழுந்தது வீரம்.. பணிந்தது காளைகள்..
x
தினத்தந்தி 26 Jan 2020 7:46 AM GMT (Updated: 26 Jan 2020 7:46 AM GMT)

ராம்குமார் கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடங்கி சிறந்த மாடு பிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

16 காளைகளை அடக்கிய இளைஞரின் அதிரடி அனுபவங்கள்
வாடிவாசலில் இருந்து புழுதி பறக்க சீறிப்பாயும் காளைகள், அடக்க முயற்சிக்கும் இளைஞர்களை திமிலாலும், கொம்புகளாலும் பந்தாடி ஜல்லிக்கட்டுக்கு விறுவிறுப்பும், சுவாரசியமும் சேர்க்கும். ஆக்ரோஷம் காட்டும் அத்தகைய காளைகளை களத்தில் நின்று அடக்குவதற்கு உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் வலிமை வேண்டும். அந்த வலிமை மாடுபிடி வீரர்களுக்கு இருக்கிறது. அவர்கள் ஆர்ப்பரித்து துள்ளி வரும் காளைகளை அடக்கி பரிசுகளையும் வென்று அசத்துகிறார்கள். அத்தகைய மாடுபிடி வீரர்களில் தனிக்கவனம் பெற்றிருக்கிறார்கள், இரு சகோதரர்கள்.

அவர்கள் பெயர்: ராம்குமார் - ரஞ்சித்குமார். இவர்களில் ராம்குமார் கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடங்கி சிறந்த மாடு பிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அவரது சகோதரரான ரஞ்சித் குமார் (வயது 24) 16 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றிருக்கிறார். வெற்றி பூரிப்பில் திளைத்தவர் ‘இனி ஜல்லிக்கட்டுப்போட்டியில் கலந்து கொள்ளப்போவதில்லை’ என்றும் அறிவித்துவிட்டார். அதற்கான காரணத்தை அறியவும், ஜல்லிக்கட்டு போட்டி அனுபவங்களை கேட்டறியவும் அவரது ஊரான அலங்காநல்லூருக்கு சென்றோம். அங்கே முதலில் நம்மை வரவேற்றது அவர்களது வீட்டில் வளர்க்கும் காளைகள் தான். அவை ராஜ மரியாதையுடன் பராமரிக்கப்படுகின்றன. கொட்டகையில் மின் விசிறி வசதியுடன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. அந்த காளை மாடுகளை ரஞ்சித்குமார் வாஞ்சையுடன் தழுவி பராமரித்துக்கொண்டிருந்தார். அவருடன் நமது கலந்துரையாடல்!

உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

அப்பா கண்ணன் கூலித்தொழில் செய்கிறார். அம்மா சுந்தரி எங்கள் காளைகளை பராமரித்து வருகிறார். நான் டிப்ளமோ படித்து முடித்து விட்டு கிடைக்கும் வேலையை பார்த்து கொண்டிருக்கிறேன். ராம்குமார் எனது தம்பி. அவரும் என்னை போல் கிடைக்கும் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார். எனக்கு 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்கள் குடும்பத்தில் கருப்பன், களவாணி என்ற இரு காளைகளும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த 6 வருடங்களாக பிள்ளைகளை போல் வளர்த்து வருகிறோம். ஜல்லிக்கட்டு என்பது எங்கள் குடும்பத்துடன் ஒன்றாக கலந்துவிட்டது. அது எங்கள் வாழ்க்கை.

ஜல்லிக்கட்டில் உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்?

என் அப்பாவும் சிறந்த மாடுபிடி வீரர். 35 வருடங்களாக ஜல்லிகட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை பெற்றிருக்கிறார். நானும் என் தம்பியும் பள்ளி படிக்கும்போதே தந்தையுடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சென்று விடுவோம். ‘அப்பா எப்படி காளைகளை அடக்குகிறார்’ என்பதை உற்று கவனித்து கொண்டிருப்போம். அவர் 10 காளைகளையாவது அடக்கி விடுவார். தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் எங்களையும் உடன் அழைத்து செல்வார். மாடுகளின் மீது பயம் இருக்கக்கூடாது என்பதற்காக எங்கள் வீட்டிலும் மாடுகள், காளைகளை வளர்த்து எங்களுக்கு பயிற்சி அளித்தார். எந்த காளையை எப்படி அடக்க வேண்டும், முரண்டு பிடிக்கும் சில காளைகளை பிடிக்காமல் விட்டுவிடுவதே நல்லது என பல விஷயங்களை கற்று கொடுத்தார். ஜல்லிக்கட்டு போட்டி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் வீட்டில் உள்ள காளைகள் மூலம் பயிற்சி அளிப்பார். அவரிடம் பெற்ற பயிற்சிதான் எங்களை ஜல்லிக்கட்டு போட்டிக்குள் அழைத்து வந்தது. நாங்கள் இருவரும் பல காளைகளை அடக்கி இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டிருப்போம். எங்கு சென்றாலும் எப்படியும் ஒரு காளையாவது அடங்கி பரிசை வென்று விடுவோம்.

அலங்காநல்லூரில் இருந்தால் ஜல்லிக்கட்டே கதி என ஆகி விடுவேன் என்று எண்ணி உறவினர் வீட்டில் தங்கவைத்து படிக்க வைத்தார்கள். இருந்தாலும் ஜல்லிக்கட்டு விளையாடுவதற்காக பள்ளிக்கு விடுமுறை எடுத்து கொண்டு வந்து விடுவேன். ஒருவழியாக டிப்ளமோ வரை படித்துவிட்டேன். மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தேன். ஆனால், ஜல்லிக்கட்டு விளையாட விடுமுறை தராததால் அந்த வேலையையும் உதறிவிட்டேன். தம்பி ராம்குமாரும் ஜல்லிக்கட்டுக்காக படிப்பை பாதியில் விட்டு விட்டான்.

இனி போட்டியில் கலந்து கொள்ளமாட்டேன் என்று அறிவிக்க என்ன காரணம்?

சிறந்த மாடுபிடி வீரர் என்ற பரிசை வெல்வது தான் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறிவிட்டது. எனது தம்பி அவனது லட்சியம் ஏற்கனவே நிறைவேறி விட்டதால் இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டியில் ஆர்வம் காட்டவில்லை. மற்ற வீரர்களுக்கு வழி விடுவதற்காக இனி போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம். கடந்த முறை என் தம்பி கார் பரிசு பெற உதவியது என் நண்பர்கள் தான். இந்த முறையும் நான் வெல்வதற்கு காரணமாக இருந்ததும், தூண்டுதலாக இருந்ததும் என் நண்பர்கள் தான். அதிலும் நெருங்கிய நண்பனான முகமதுமைதீன் களத்தில் நின்று என்னை உற்சாகப்படுத்தினான்.

கடந்த முறை வெற்றி பெற்ற காரை நிறுத்துவதற்கு வீட்டில் இடம் இல்லை. காளைகளுக்குத்தான், சிறிய இடம் இருந்தது. ஒரு காலகட்டத்தில் கார் முக்கியமா? காளை முக்கியமா? என்று யோசித்து பார்த்தபோது காளை தான் முக்கியம் என தோன்றியது. அதன் காரணமாக காரை விற்று விட்டோம். ஆனால் இந்த முறை காரை நிறுத்துவதற்கு வீட்டின் முன்பு இடம் இருக்கிறது. அதனால் காரை விற்க மாட்டோம். ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க செல்வதற்கு இந்த காரை பயன்படுத்துவோம். மற்ற வீரர்களும் எங்களை போல் கார் வெல்ல வழிகாட்டுவோம்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், அண்டா, பாத்திரம், தங்க காசு, கட்டில், பீரோ என எல்லாமும் வைத்திருக்கிறோம். எல்லாம் உண்மையான வீரத்திற்கு கிடைத்த பரிசு. உயிரை பணயம் வைத்து விளையாடி வெற்றி பெற்றிருக்கிறோம். எங்களுக்கு கார் பெரிதல்ல. அலங்காநல்லூரில் வெற்றி பெற்றோம் என்பதுதான் பெரிய விஷயம்.

ஒரே சுற்றில் 16 காளைகளை அடங்கியது எப்படி?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். களத்தில் ஒரு காளை யையாவது அடக்கியாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் 16 காளைகளை அடக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இப்போது வரை அதை என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் வீட்டில் வளர்த்து வந்த காளைகளை வாடிவாசலில் அவிழ்க்க வேண்டும் என்பதற்காக முதல் 3 சுற்றுகளில் நான் விளையாடவில்லை. எங்கள் காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விட்டு, 4-வது சுற்றில் மாடுகளை அடக்க வந்தேன். வந்த வேகத்தில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கியது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். என் தம்பி கடந்த முறை ஒரே சுற்றில் 12 காளைகளை பிடித்து விட்டான். பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து விளையாடி மேலும் 3 காளைகளை பிடித்து காரை தட்டிச் சென்றான். எல்லா காளைகளையும் சுலபமாக எண்ணிவிட முடியாது. சில காளைகள் மாடு பிடி வீரர்களை கிறங்கடிக்கும். அதுபோன்ற காளைகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு உரிய பயிற்சி இருந்தால் மட்டுமே சாத்தியம்.

மாடுகளை பிடிக்க எந்த மாதிரியான பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்டீர்கள்?

எங்கள் வீட்டிலேயே ஜல்லிக்கட்டு காளைகள் இருப்பதால் எங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவைகளை வைத்து பயிற்சி எடுத்து கொள்வோம். ஜல்லிக்கட்டு போட்டி களுக்கு முன்பு காளியம்மனுக்கு விரதம் இருக்க தொடங்குவோம். விரதம் இருந்து போட்டிகளில் கலந்து கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். விடுமுறை நாட்களில் நண்பர் களுடன் சேர்ந்து செயற்கை வாடிவாசலை அமைத்து அதில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி பயிற்சி எடுத்துக்கொள்வோம். எனக்கும், என் தம்பிக்கும் ஏற்படும் சந்தேகங்களை என் அப்பா விளக்கி புரியவைப்பார். மாட்டின் திமிலை எப்படி பிடித்தால் அது சரியாக இருக்கும், எந்த இடத்தில் நின்று பிடித்தால் காளையின் பாய்ச்சலில் இருந்து தப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்.

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதை மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் கவுரவமாக கருதுவார்கள். சரியான உடல் தகுதி இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு கிடைக்கும் கவுரவமும், மரியாதையும் எங்களுக்கு கிடைப்பதில்லை. அதுதான் மாடுபிடி வீரர்களின் குறையாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. அதனை ஒட்டுமொத்த உலகிற்கு பாறைசாற்ற தமிழக அரசு மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் நாட்டு மாடுகளையும் பாதுகாக்க முடியும். தமிழர்களின் வீரத்தை பறைசாற்ற முடியும்.

உங்கள் அடுத்த இலக்கு என்ன?

அலங்காநல்லூரில் வசித்து வருவதால் காளைகள் மீது எங்களுக்கு எப்போதுமே பாசம் அதிகம். நாங்கள் கூட மழையிலும், பனியிலும் தூங்கி விடுவோம். ஆனால் காளைகளை அப்படி விடமாட்டோம். மாதம் ரூ.8 ஆயிரம் வரை காளை களுக்காக செலவிடுவோம். காளைகளுக்கு உணவழிப்பதற்காகவே என் தம்பி கிடைக்கும் வேலைக்கு சென்று விடுவான். காளைகளை அருகில் இருந்து பார்த்து கொள்வது தான் அம்மாவின் முக்கிய வேலை. வீட்டில் வளர்க்கும் காளைகள், பசுக்கள் எப்போதும் ஆண்களை காட்டிலும் பெண்களிடம் அதிக பாசத்துடன் இருக்கும். அம்மாவிடம் காளைகள் அதிக பாசம் காட்டும். போட்டி போட்டு ஒரு காளை களவாடி உணவு உண்ணும். அதனால் அதற்கு களவாணி என பெயர் வைத்து விட்டோம்.

அடுத்த வருடங்களில் காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விட்டு சிறப்பான காளை உரிமையாளர் என்ற பரிசை பெறுவதற்கு ஆவலாக இருக்கிறோம். அதற்காக காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தயாராகி வருகிறோம். இப்போதைக்கு எங்கள் பயணம் அதை நோக்கி தான் இருக்கிறது.

Next Story