வாகனங்கள் விற்பனை - ஜனவரி நிலவரம்


வாகனங்கள் விற்பனை - ஜனவரி நிலவரம்
x
தினத்தந்தி 5 Feb 2020 8:24 AM GMT (Updated: 5 Feb 2020 8:24 AM GMT)

ஜனவரி மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வருமாறு:-

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் மொத்தம் 15,450 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் அது 15,000 கார்களாக இருந்தது. ஆக, விற்பனை 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணிகள் வாகனங்கள் சந்தையில் இந்நிறுவனம் 4-வது இடத்தில் நீடிக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 7,122 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் அது 12,067 கார்களாக இருந்தது. ஆக, விற்பனை 41 சதவீதம் சரிவடைந்துள்ளது. உள்நாட்டில் அதன் விற்பனை 48 சதவீதம் சரிந்து (11,221 கார்களில் இருந்து) 5,804 கார்களாக குறைந்து இருக்கிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனை 1,26,701 கார்களாக இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 16 சதவீதம் குறைவாகும். அப்போது அது 1,51,480-ஆக இருந்தது.

வி.இ. கமர்ஷியல் வெஹிகிள்ஸ்

வால்வோ குழுமம் மற்றும் எய்ஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் திட்டமான வி.இ. கமர்ஷியல் வெஹிகிள்ஸ் நிறுவனம் 5,544 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அது 5,906-ஆக இருந்தது. ஆக, விற்பனை 6.1 சதவீதம் குறைந்துள்ளது.

இதில் எய்ஷர் பிராண்டு டிரக்குகள் மற்றும் பேருந்துகள் விற்பனை 7.2 சதவீதம் சரிவடைந்து (5,808-ல் இருந்து) 5,388-ஆக குறைந்து இருக்கிறது. உள்நாட்டில் இதன் விற்பனை 5.9 சதவீதம் குறைந்து 4,871-ஆக இருக்கிறது. ஏற்றுமதி (631-ல் இருந்து) 517-ஆக குறைந்துள்ளது.

வால்வோ டிரக்குகள் விற்பனை 59 சதவீதம் அதிகரித்து 156-ஆக இருக்கிறது.

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 3.94 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 3.1 சதவீதம் குறைவாகும். அப்போது 4.07 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

உள்நாட்டில் இதன் ஒட்டுமொத்த விற்பனை 16 சதவீதம் குறைந்து (2.31 லட்சத்தில் இருந்து) 1.92 லட்சம் வாகனங்களாக குறைந்து இருக்கிறது. இந்நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 22 சதவீதம் குறைந்து 1.57 லட்சமாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2.03 லட்சமாக இருந்தது.

Next Story