சிறப்புக் கட்டுரைகள்

இயற்கை வாட்டர் பில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! + "||" + Prepared Natural Water filter, Indian showing talent in London!

இயற்கை வாட்டர் பில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

இயற்கை வாட்டர் பில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!
ஆற்று நீரையும், குளத்து நீரையும் கையில் அள்ளிக் குடித்த காலம் இருந்தது. இயற்கை நமக்கு அளித்த கொடை அது. ஆனால், இன்றைக்கு நிலைமை வேறு. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படும் தண்ணீர்கூட மாசுபட்டதாகத்தான் இருக்கிறது.
இயற்கைச் சூழல் பெரும்பாலான இடங்களில் மாசுபட்டிருப்பதால், நீரை எங்கிருந்து பெற்றாலும் அதை சுத்திகரித்த பின்பே அதை நம்மால் அருந்த முடிகிறது. எனவேதான் குடிநீர் சுத்திகரிப்பு என்பது இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது.

மனிதர்கள்தான் கிடைக்கும் தண்ணீரை சுத்தி கரிக்க செயற்கையான கருவிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இயற்கையில் நீர் சுத்திகரிப்பு என்பது இயல்பாகவே நடக்கிறது. மண்ணில் இருக்கும் நீர் ஆவியாகி மழையாய் மீண்டும் பூமிக்கு வருவதைக்கூட இயற்கையின் தண்ணீர் சுத்தி கரிப்புக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தாவரங்களுக்கு நீர் தேவைப்படுவதும், அதன் இலைகளில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் விளைவால் நீர் ஆவியாதல் நடைபெறும். மிகப் பெரிய காடுகளில் இந்த ஆவியாதல் நிகழ்வு பெரிய அளவில் நடைபெறும். அதுவும் மழைக்காடுகளில் நிலவும் காலநிலையால் ஆவியாதலால் உருவாகும் வெண்ணிற மேகங்களையும்கூட பார்க்க முடியும். இயற்கையின் இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து நீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை வீட்டுக்குள்ளேயே உருவாக்கியிருக்கிறார் பிரதிக் கோஷ் என்ற இளைஞர்.

குடிநீர் சுத்திகரிப்பு கருவி

மத்தியப் பிரதேசம்தான் பிரதிக் கோஷின் சொந்த ஊர். லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ‘ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்’-டில் படிக்கும்போதுதான் இந்த வடிவமைப்பை உருவாக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியிருக்கிறது. குடிநீரை சுத்திகரிக்க அதிகம் செலவாகிறது, அதில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படியிருந்தும் தூய்மையான குடிநீர் கிடைப்பது கடினமாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், இறுதியாண்டு புராஜெக்ட்டாக இதை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கருவியை வெற்றி கரமாக செயல்பட வைத்து பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களை அசத்தியிருக்கிறார். இதன் வடிவமைப்பும் இது செயல்படும் விதமும் மிகவும் எளிமையானது. குழந்தைகள்கூட இதன் செயல்பாட்டை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இயற்கையின் ஆவியாதல் நிகழ்வே இந்தக் கருவியின் அடிப்படை. இதன் மூலமாக செலவே இல்லாமல் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீரைப் பெறலாம். இந்தக் கருவிக்கு ‘ட்ராப் பை ட்ராப்’ என்று பெயர் வைத்திருக்கிறார் பிரதிக் கோஷ்.

கருவி

ஒரு சாதாரண மனிதனின் உயரமே இருக்கக் கூடிய இந்தக் கருவியில் ஒரு கண்ணாடிக்குடுவைதான் பிரதானமான பகுதி. அதற்குள்ளே செடிகள் வளர்வதற்கான இடம் இருக்கிறது. வெளியில் சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்று வதற்காக ஒரு குழாய் இருக்கிறது. கண்ணாடிக் குடுவைக்குள்ளே ஆவியாகும் நீரை வெளியே கொண்டுவந்து சேகரிக்கவும் ஒரு அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒளிச்சேர்க்கை நடை பெறுவதற்கு ஒளி தேவைப்படும் என்பதால், கருவிக்கு வெளியே ஒரு விளக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்றிவிட்டுக் காத்திருந்தால் போதும் சில மணி நேரங்களில் ஒரு கோப்பை அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உருவாக்கிவிடும் இந்தக் கருவி. இதன் மூலமாக 24 மணி நேரத்தில் இரண்டு முதல் மூன்று கப்கள் வரை நீரை பெற முடியும். இதை ஒருவர் வீட்டில் பயன்படுத்தும்பொழுது சுத்தமான குடிநீர் மட்டுமின்றி புத்துணர்ச்சியும் கிடைக்குமாம்.

பெரிய அளவிலான திட்டம்

அசுத்தமான நீரில் இருக்கும் நைட்ரேட்கள், தீங்கு விளைவிக்கும் கன உலோகங்கள், பாக்டீரியாக்கள் மற்றும் குளோரின் போன்றவற்றை இந்தக் கருவி நீக்கிவிடும் என்று கூறுகிறார் பிரதிக் கோஷ். இந்தக் கருவியை உருவாக்க அதிகம் செலவு செய்ய தேவையிருக்காது என்பதும் இயற்கையாகவே தாவரங்கள் தன்னைதானே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், இந்தக் கருவிக்கு பெரிய அளவில் பராமரிப்பும் தேவை யிருக்காது என்பதும் இதன் மிகப்பெரிய வசதி என்று கூறுகிறார் பிரதிக்.

இதைப் பெரிய அளவில் செயல்படுத்தும் திட்டத்தையும் தயாராக வைத்திருக்கிறார். எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வரலாம், அதற்கு இது தொடக்கப்புள்ளியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பிரதிக் கோஷ். நல்ல தொழில்நுட்பம்தான் என்றாலும் இது வெற்றியடைவதற்கான சாத்தியம் பற்றி சிலருக்கு சந்தேகம் எழும்தானே, அதற்கும் அவரிடம் தீர்வு இருக்கிறது.