சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி ரூ.7 லட்சம் கோடியை தாண்டியது


சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி ரூ.7 லட்சம் கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 22 Feb 2020 9:14 AM GMT (Updated: 22 Feb 2020 9:14 AM GMT)

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் மேட் எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்டு வினியோக வரி விதிக்கப்பட்டது.

புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டில் (2019-20), ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதத்தின் இடைப்பகுதி வரை சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி ரூ.7 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

முக்கிய நோக்கங்கள்

சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிப்பது, வேலைவாய்ப்பை பெருக்குவது, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, அதிக அளவு முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவை சிறப்பு பொருளாதார மண்டலங்களின் முக்கிய நோக்கங்களாகும். துரித வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்தத் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் மேட் எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்டு வினியோக வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்தப் பிரிவில் முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சில நிறுவனங்கள் இப்பிரிவில் இருந்து பின் வாங்கி விட்டன. பல நிறுவனங்கள் கட்டமைப்பு பணிகளை தொடங்குவதற்கு கால அவகாசம் கோரி உள்ளன.

இது போன்ற இடர்பாடுகளுக்கு மத்தியிலும் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சியை விஞ்சும் வகையில் இந்த மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. 2016-17-ஆம் நிதி ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி 12 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.5.24 லட்சம் கோடியை எட்டியது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.5.52 லட்சம் கோடியாக இருந்தது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 27 சதவீதம் உயர்ந்து ரூ.7 லட்சம் கோடியாக (10 ஆயிரம் கோடி டாலர்) அதிகரித்தது.

இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில், பிப்ரவரி மாதத்தின் இடைப் பகுதி வரை இந்த மண்டலங்களின் ஏற்றுமதி 10 ஆயிரம் கோடி டாலரை தாண்டி ஷிஇருக்கிறது. நிதி ஆண்டு நிறைவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஏற்றுமதி சென்ற ஆண்டின் அளவை (ரூ.7 லட்சம் கோடி) தாண்டி உள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா

தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அதிக அளவில் உள்ளன. பொதுவாக நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சியை விஞ்சும் வகையில் இந்த மண்டலங்களின் ஏற்றுமதி இருந்து வருகிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story