15 வருடங்களில் காணாமல்போன 5 மில்லியன் எலிகள்


15 வருடங்களில் காணாமல்போன 5 மில்லியன் எலிகள்
x

அது ஒரு வகை எலி. நீரிலும் நிலத்திலும் வாழும் என்கிறார்கள். எலி என்று சொல்வதைக் காட்டிலும் பெருச்சாளி என்று சொல்லலாம். இல்லை, இரண்டு பெருச்சாளிகள் என்று கூட சொல்லலாம். காரணம், அதை அப்படியே தூக்கி ஒரு எடை பார்க்கும் இயந்திரத்தில் வைத்தால் எப்படியும் ஒன்பது கிலோவுக்குக் குறையாமல் இருக்கும்.

பிரச்சினை என்னவென்றால், அதன் இடம் இது அல்ல. இந்தக் கலிபோர்னிய சதுப்பு நிலங்கள் அதன் சொந்த பூமி இல்லை. இந்த நிலத்திற்கு அது ஓர் அழையா விருந்தாளி. அதுவும் எப்படிப்பட்ட விருந்தாளி? புகுந்த நிலத்தின் சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கும் தன்மையுடைய விலங்கினம். கோய்பு என்று அழைக்கப்படும் அந்த எலியின் வியாபார பெயர் நியூட்ரியா. பார்ப்பதற்கு ஒரு ரக்கூன் போல இருக்கும். 

புதிதாக கலிபோர்னிய சதுப்பு நிலங்களில் அடியெடுத்து வைத்திருக்கும் அதன் தலையாய கடமைகளே, அங்கு நிகழும் விவசாயத்திற்குத் தொல்லை கொடுப்பது, குழிகள் பறித்து வெள்ளத் தடுப்புகளை சீரழிப்பது, நிலத்தில் வாழும் பூர்வீக மிருகங்களை விரட்டியடித்து அதன் இடங்களில் வாழ்வது போன்றவைதாம். உண்மையில், இந்த வகை எலிகளின் பூர்வீகம் தென்அமெரிக்கா. ஆனால், இன்று இந்த வகை எலிகள் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா தவிர மற்ற அனைத்துக் கண்டங்களிலும் குடியேறிவிட்டன. தற்போது கலிபோர்னிய சதுப்பு நிலங்களில் ஆட்டம்போடும் இதை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் பின்பற்றியும் எந்த மாற்றமும் நிகழவில்லை.

போர்களில் வென்று சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் அரசன் போல, இன்று வட அமெரிக்காவின் பதினெட்டு மாகாணங்களில் இவை ஊடுருவிவிட்டன. முன்னர் இதே நியூட்ரியா எலி லூசியானா மாகாணத்தில் நுழைந்து அட்டகாசம் செய்ய, அப்போதுதான் அமெரிக்கர்களுக்குத் தோன்றுகிறது அந்த யோசனை. ஒன்பது கிலோ எடை இருக்கிறது. 

இதன் கறி எப்படி இருக்கும்? இந்தக் கேள்வி எழுந்த சில நாட்களிலேயே, அந்தப் பகுதி மக்களின் பிடித்த உணவுகள் பட்டியலில் இடம்பெற்றுவிட்டன நியூட்ரியா எலிகள். பெயருக்குத் தகுந்தாற்போல் சத்து இருக்கிறதோ இல்லையோ, வான்கோழிகளின் கறியைப் போலச் சுவையாக இருப்பதாகச் சிலாகிக்கிறார்கள் லூசியானா வாழ் அமெரிக்கர்கள்.

ஜம்பாலயா என்பது ஒரு ஸ்பானிஷ் - பிரெஞ்சு உணவு வகை. பேல் பூரி போல இருக்கும் இதில், கறியைச் சேர்த்து தயாரிக்கிறார்கள். இதில் வழக்கமாகப் பயன்படுத்தும் போர்க்சாசேஜ்களுக்குப் பதில், இந்த நியூட்ரியா எலி கறியைக் கலந்துவிட, இந்தப் புதிய முயற்சிக்கு ஏகபோக வரவேற்பு. 

இந்த எலிகள் குறித்த ஆவணப்படத்தை எடுத்த மூன்று படத் தயாரிப்பாளர்கள் தனியாக அந்த எலிகளின் கறியை சாசேஜ்களாக உண்ண முடியாது எனவும், ஜம்பாலயா போன்ற உணவுகளில் சேர்த்தால் சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

லூசியானா மாகாணத்தின் அதிகாரபூர்வ வனஉயிர் மற்றும் மீன்பிடி இணையதளத்தில், நியூட்ரியா எலிகளின் ஸ்பெஷல் ரெசிபிகளுக்கு என்றே தனியாக ஒரு பக்கம் ஒதுக்கிஇருக்கின்றனர். அதில் நியூட்ரியா சூப், சாலட் உள்ளிட்ட ஐட்டங்களை எப்படிச் செய்வதென விளக்கியிருக்கிறார்கள். தங்கள் விவசாய நிலங்களில் உலாவும் நியூட்ரியா எலிகளை விவசாயிகள் பிடித்து வைத்தால் சன்மானம் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்தன. 

கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 5 மில்லியன் நியூட்ரியா எலிகள் காணாமல் போயிருக்கின்றன. ஆனால், தற்போது அவை புதிதாக நுழைந்திருக்கும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு சட்டம் இருக்கிறது. நியூட்ரியா எலிகள் போன்ற ஆக்கிரமிக்கும் உயிரினங்களைப் பாதுகாக்க அங்கே சட்டமே இருக்கிறது. அவ்வகை உயிரினங்களை உரிமையாக்குவது, 

கடத்துவது அல்லது வேட்டையாடுவது போன்ற செயல்கள் அங்கே தண்டனைக்குரியக் குற்றங்கள். அது மட்டுமன்றி, இவ்வகை எலிகள், ஒருவித ஒட்டுண்ணியுடன் வருவதால், ஒருவகை அரிப்பு நோய் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.

தனக்குச் சொந்தமில்லாத இடத்தில் கால்பதித்து அட்டகாசம் செய்ததற்காக நியூட்ரியா எலிகளுக்கு இப்படியொரு தண்டனை!

Next Story