நான்காவது நாளாக பின்னடைவு சென்செக்ஸ் 392 புள்ளிகள் இழப்பு நிப்டி 119 புள்ளிகள் இறங்கியது


நான்காவது நாளாக பின்னடைவு சென்செக்ஸ் 392 புள்ளிகள் இழப்பு நிப்டி 119 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 27 Feb 2020 8:54 AM GMT (Updated: 27 Feb 2020 8:54 AM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் நேற்றும் கச்சா எண்ணெய் விலை சரிந்தது.

மும்பை

புதன்கிழமை அன்று பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது நாளாக பின்னடைவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 392 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 119 புள்ளிகள் இறங்கியது.

கச்சா எண்ணெய்

கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் நேற்றும் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இதனையடுத்து ஆசிய நாடுகளில் பங்கு வியாபாரம் சுணங்கியது. ஐரோப்பிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அதன் தாக்கத்தை இந்திய சந்தைகளும் வெளிப்படுத்தின.

அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நேற்று ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.16 சதவீதம் சரிந்தது. அடுத்து மோட்டார் வாகன துறை குறியீட்டு எண் 2.12 சதவீதம் இறங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 6 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 24 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

இந்தப் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஆக்சிஸ் வங்கி, ஏஷியன் பெயிண்ட் உள்ளிட்ட 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் சன் பார்மா, மாருதி சுசுகி, எல் அண்டு டி, ஹீரோ மோட்டோகார்ப், இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்ட்ஸ் இந்த் வங்கி, டெக் மகிந்திரா உள்பட 24 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 392.24 புள்ளிகள் சரிவடைந்து 39,888.96 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 40,255.39 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 39,760.39 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 830 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,629 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 149 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,189 கோடியாக உயர்ந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.1,878 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 119.40 புள்ளிகள் குறைந்து 11,678.50 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,783.25 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,639.60 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story