சிறப்புக் கட்டுரைகள்

சுஜாதா வாழ்கிறார் + "||" + Sujata lives on

சுஜாதா வாழ்கிறார்

சுஜாதா வாழ்கிறார்
இன்று (பிப்ரவரி 27-ந்தேதி) எழுத்தாளர் சுஜாதா நினைவு தினம். சுஜாதா! எழுதுகோலால் எழுதாமல் மந்திரக்கோல் கொண்டு எழுதி (பிறகு கணினியில் தட்டச்சு செய்து) லட்சக்கணக்கான வாசகர்களை அனஸ்தீசியா கொடுக்காமலேயே மயக்கி வைத்திருந்த எழுத்து நிபுணர்.
ஒரு கட்டத்தில் சினிமா கதாநாயகர்களுக்குச் சமமான புகழுடன் மஞ்சள் வெளிச்சத்தில் இருந்தார். இப்போதும்! தன் புத்திசாலித்தனமான எழுத்து நடையால், சொக்க வைக்கும் வாக்கியங்களால், உரைநடையையும், வர்ணனையையும் வித்தியாசமாக அணுகி, தமிழுக்கு அனைவரும் புடவை கட்டி, பொட்டு வைத்து, ஊதுபத்தி காட்டியபோது, சுஜாதா மினி ஸ்கர்ட்டு போட்டு, லிப்ஸ்டிக் தீட்டி, டிஸ்கோ ஆட வைத்தார்.

தொடாத ஏரியாவே இல்லை... கிரைமா? குடும்பமா? விஞ்ஞானமா? சரித்திரமா? நகைச்சுவையா? அமானுஷ்யமா? பக்தியா? மேடை நாடகங்களா? கேள்வி-பதிலா? கட்டுரைகளா? கவிதைகளா? எல்லாமே கிடைக்கும் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் அவர்.

கணையாழியின் கடைசி பக்கங்களிலும், அட்டகாசமான சிறுகதைகளிலும் இலக்கியம் என்கிற லேபிளை பட்டவர்த்தனமாக ஒட்டாமல், ஆனால் எந்த இலக்கிய எழுத்துக்கும் குறைவில்லாத தரத்துடன் எழுதியிருக்கிறார். கிரைம் நாவல்கள் எழுதிய ஒரே காரணத்தால் தமிழ்நாடு அரசின் கலைமாமணி தவிர, வேறு தேசிய அளவிலான பட்டங்களை அவருக்குத் தரவில்லை என்பது அநியாயம்!

‘கற்றதும் பெற்றதும்’, ‘ஏன்? எதற்கு? எப்படி?’ இந்த இரண்டு கதையல்லாத அவரின் புத்தகங்களும் விற்பனையில் ஏகப்பட்ட பதிப்புகளை கண்டவை.

சுஜாதா எழுதிய படைப்புகளில் சிறப்பானவை என்று பட்டியலிடச் சொன்னால் அவரின் அத்தனை படைப்புகளின் பெயர்களையும் தான் எழுதியாக வேண்டும் (சலவைக் கணக்கு உள்பட).

அவர் கடைசி வரை சொல்லாமல் டபாய்த்த ‘மெக்சிகோ தேசத்து சலவைக் காரி’ ஜோக் எனக்குத் தெரியும். அதுபற்றி கட்டுரையின் கடைசியில்...

நான் எழுத்துலகில் தட்டுத் தடுமாறி எழுந்து, நடைவண்டி வைத்து தத்தக்கா பித்தக்கா என்று நடந்து கொண்டிருந்தபோது, சுஜாதா நடை, ஓட்டம் எல்லாம் முடித்து விண்வெளிக்கே பறந்துவிட்டார்.

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1974-ல் நான் சேர்ந்தபோது இருபது வருடங்கள் முன்பாக சுஜாதா படித்த கல்லூரி என்று அறிந்து அத்தனை பெருமைப்பட்டேன். நான் அவர் எழுத்தை வாசித்தவனல்ல. சுவாசித்தவன்.. அவரை நேரில் சந்தித்த (நான் மட்டுமே) முதல் அனுபவம் மறக்காது. தஞ்சாவூரில் சாவி வார இதழில் தற்காலிக ஒருநாள் அலுவலகத்திற்காக நான், சாரு பிரபா சுந்தர் (எழுத்தாளர் மற்றும் குங்குமத்தில் ஆசிரியராக இருந்தவர்), வசந்த் (ஆமாம் இயக்குனரேதான்) மூவரும் திசைகள் இதழில் உதவி ஆசிரியர்கள் என்பதால் கூடினோம்.

அன்று மாலை மயிலாடுதுறையில் சுஜாதா ஒரு இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதை அறிந்தோம். 5 மணி அளவில் மூவரும் ஆசிரியர் சாவியிடம் சொல்லி விட்டு புறப்பட்டு கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறினோம். அங்கு சென்று மயிலாடுதுறை பஸ்சில் ஏறுவது திட்டம். வழியெல்லாம் அரட்டை...

சுஜாதாவை முதன்முதலாக சந்திக்க போகிறேன் என்கிற பதற்ற ஆர்வம் மனதில் துள்ளியது. கும்பகோணம் வந்து மயிலாடுதுறைக்கு செல்லும் பஸ்சில் ஏறி பயணம் தொடர்ந்த கொஞ்ச நேரத்தில் வசந்த் அலறுகிறார். ‘எங்கே என் சூட்கேஸ்?’. நாங்கள் முதலில் வந்த பஸ்சில் வைத்துவிட்டு இறங்கும்போது மறந்து விட்டார் வசந்த். இப்போது பயணம் செய்த பஸ் டிரைவரிடம் பஸ்சை நிறுத்தச் சொல்லி அவசர அவசரமாக நடுவழியில் இறங்கி விட்டோம். எதிர்புறமாக கும்பகோணம் செல்லும் பஸ்சை வழிமறித்து ஏறினோம். கும்பகோணம் பஸ் நிலையத்தில் நல்ல வேளையாக இன்னும் அந்த பஸ் நின்றிருந்தது.

அவசரமாக ஏறினோம். சீட்டுக்கடியில் வைத்த இடத்தில் சூட்கேசும் இருந்தது. மீண்டும் வேறு பஸ் பிடித்து மயிலாடுதுறைக்கு வந்து விழா நடந்த அரங்கத்திற்கு வந்தபோது, அங்கு விழா முடிந்து ஏற்பாட்டாளர்கள் 10 பேர் நடுவாந்திரமாக சுஜாதாவை நிறுத்தி குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். முடிந்ததும் ஓடிப்போய் கைகுலுக்கிய 20, 30 பேரில் நாங்களும் இருந்தோம். அவர் கூட்டத்தில் நீந்தி காரில் ஏறி புறப்பட்டதும் நானும், சாரு பிரபா சுந்தரும் வசந்தை முறைத்தோம்.

அவர் மட்டும் சூட்கேசை மறக்காமல் இருந்தால் சொற்பொழிவு கேட்டல், புகைப்படம் எடுத்தல், ஆட்டோ கிராப் வாங்கும் வேலைகள் எல்லாம் நடந்திருக்கும். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சுஜாதா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த அவரின் நண்பரும் எழுத்தாளருமான ஒரு நண்பர் மதுவுக்கு அடிமையாகி இருந்தது சகிக்க முடியாமல், நீங்கள் சொன்னால் கண்டிப்பாக கேட்பார் என்று சுஜாதாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.

பெங்களூருவில் இருந்த சுஜாதா உடனே நீண்ட பதிலை எழுதினார். அதெல்லாம் பலமுறை சொல்லி பார்த்தாயிற்று. அவரின் மது பழக்கத்தால் நிகழ்ந்த ஒரே நன்மை உங்களுக்கும், எனக்கும் ஏற்பட்டிருக்கும் இந்த கடித நட்பு மட்டுமே என்று அதில் குறிப்பிட்டு என் கதைகளையும் பாராட்டியிருந்தார்.

சுஜாதா, குமுதம் ஆசிரியர் ஆனதும் வார இதழுடன் ஒரு குறுநாவல் போட முடிவெடுத்து அதில் முதல் குறுநாவல் என்னை எழுத சொன்னது வரம்! பாலுமகேந்திராவின் கதை நேரம் என்று சிறப்பான சிறுகதைகளை தேர்வுசெய்து குறும்படங்களாக சன் டி.வி.யில் ஒளி பரப்பச் செய்தார். அதில் 8 கதைகள் என்னுடையவை என்பது பெருமை. என் ஒரு சிறுகதை தொகுப்புக்கு விளாவாரியாக முன்னுரை எழுதி தந்தது பாக்கியம். அவரது 6 புத்தகங்களை ஒரு பதிப்பகம் வெளியிட்டது. அதில் ஒரு புத்தகத்தை என்னை மதிப்பீடு செய்து பேச சொன்னது ஆனந்தம். எழுத்தில் சாதித்த சுஜாதா சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. மணிரத்னம், சங்கர் இவர்களின் பல வெற்றி படங்களின் பின்னணியில் சுஜாதாவின் பங்கு கணிசமாக இருந்ததை அவர்கள் பெருமையாக சொல்கிறார்கள்.

பணம் விஷயத்தில் மட்டும் அவருக்கு சாமர்த்தியம் போதாது என்று அவரின் திருமதியே சொல்லி இருக்கிறார். திரைப்படத் தயாரிப்பாளர்களிடமோ, பத்திரிகை மற்றும் பதிப்பாளர்களிடமோ கறாராக நடந்தது இல்லை.

சுஜாதா மட்டும் இங்கிலாந்தில் பிறந்து ஆங்கிலத்தில் எழுதி இருந்தால், வார்த்தைக்கு இவ்வளவு என்று ராயல்டி வாங்கும் அத்தனை முன்னணி எழுத்தாளர்களை விடவும் அதிகம் சம்பாதித்திருப்பார் அல்லது சம்பாதித்து ஒரு தீவு வாங்கியிருந்தால் அதற்கு சொர்க்க தீவு என்று தன் நாவலின் பெயரை சூட்டியிருப்பார் (தனி நாடாக அறிவித்திருக்க மாட்டார்).

இன்று (பிப்.27) சுஜாதாவின் நினைவு நாள். அதாவது அவரின் உடலுக்கு! ஆனால் சுஜாதா தனது படைப்புகள் மூலம் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். கடைசி வாசகன் பூமியில் இருக்கும் வரை வாழ்வார்.

மெக்சிகோ தேசத்தின் சலவைக்காரி ஜோக் தெரியும் என்றாயே அது என்ன? என்கிறீர்களா? தெரியும் என்று தானே சொன்னேன். அதை சொல்கிறேன் என்று சொல்லவில்லையே. சில புதிர்கள் புதிர்களாகவே தொடர்வது சுவாரசியம்.

- பட்டுக்கோட்டை பிரபாகர்