ரொசாரி பயோடெக் நிறுவனம் பங்கு வெளியிட செபி அனுமதி


ரொசாரி பயோடெக் நிறுவனம் பங்கு வெளியிட செபி அனுமதி
x
தினத்தந்தி 27 Feb 2020 10:18 AM GMT (Updated: 27 Feb 2020 10:18 AM GMT)

மும்பையைச் சேர்ந்த ரொசாரி பயோடெக் நிறுவனம் சிறப்பு வகை ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

ரொசாரி பயோடெக் நிறுவனம் பங்கு வெளியிட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது.

ரசாயனங்கள் தயாரிப்பு

மும்பையைச் சேர்ந்த ரொசாரி பயோடெக் நிறுவனம் சிறப்பு வகை ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியா, வியட்நாம், வங்காளதேசம், மொரீஷியஸ் உள்ளிட்ட 17 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.பி.எல்., ஐ.எப்.பீ. இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர், பானாசோனிக் இந்தியா, பீ.எஸ்.எச். ஹவுஸ்ஹோல்டு அப்ளையன்சஸ் மானுபாக்சரிங், மில்லெனியம் பேப்பர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன.

இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க முடிவு செய்தது. எனவே அதற்கு அனுமதி கேட்டு செபி அமைப்பிற்கு விண்ணப்பித்தது. செபி இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த வெளியீட்டில் ரூ.150 கோடி மதிப்பிற்கான புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. மேலும் நிறுவனர்களின் பங்குகள் 1.05 கோடி வரை விற்பனை செய்யப்பட இருக்கிறது.

பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ.700 கோடி திரட்ட ரொசாரி பயோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சில கடன்களை திரும்ப செலுத்துதல், நடைமுறை மூலதன தேவைகள் மற்றும் சில பொது நோக்கங்களுக்காக இந்த நிதியை பயன்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிர்வகிக்கும் நிறுவனங்கள்

ரொசாரி பயோடெக் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை ஆக்சிஸ் கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. வெளியீட்டுக்குப் பின் இந்நிறுவனத்தின் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

Next Story