புதன்கிழமை வர்த்தகத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு விலை 20% ஏற்றம்


புதன்கிழமை வர்த்தகத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு விலை 20% ஏற்றம்
x
தினத்தந்தி 27 Feb 2020 10:55 AM GMT (Updated: 27 Feb 2020 10:55 AM GMT)

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.132 கோடியை மொத்த லாபமாக ஈட்டி இருக்கிறது.

ந்தியா சிமெண்ட்ஸ் பங்கு விலை, மும்பை சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தில் 20 சதவீதம் ஏற்றம் கண்டது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.132 கோடியை மொத்த லாபமாக ஈட்டி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.139 கோடியாக இருந்தது.

சிமெண்டு நிறுவனங்கள் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோபிகிஷண் தமானி வெளிச்சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 85.2 லட்சம் பங்குகளை (2.75 சதவீதம்) ரூ.70.5 கோடிக்கு வாங்கினார். தலா ரூ.82.70 என்ற விலையில் இந்தப் பங்குகள் கைமாறின.

கோபிகிஷண் தமானி, முன்னணி முதலீட்டாளர்களுள் ஒருவரான ராதாகிஷண் தமானியின் சகோதரர் ஆவார். ராதாகிஷண் தமானிக்கு 2019 டிசம்பர் இறுதி நிலவரப்படி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 4.73 சதவீத பங்குகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கோபிகிஷண் தமானியின் முதலீடு எதிரொலியாக இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு விலை கிடுகிடு ஏற்றம் கண்டது. கடந்த ஓராண்டில் நிப்டி 50 குறியீட்டு எண் 9 சதவீதம் உயர்ந்த நிலையில் இந்நிறுவனப் பங்கு விலை 2 சதவீதம் மட்டுமே ஏற்றம் கண்டு இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களில் மட்டும் இப்பங்கின் விலை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 20 சதவீதம் உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு ரூ.88.40-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.104.60-க்கும், குறைந்தபட்சமாக ரூ.87.90-க்கும் சென்றது. இறுதியில் ரூ.104.60-ல் நிலைகொண்டது. இது, செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 19.95 சதவீத ஏற்றமாகும்.

தேசிய பங்குச்சந்தையில் இப்பங்கின் விலை 19.99 சதவீதம் அதிகரித்து ரூ.104.45-ல் முடிவுற்றது.

Next Story