பாகிஸ்தானின் விருது பெற்ற ஒரே இந்தியர்


பாகிஸ்தானின் விருது பெற்ற ஒரே இந்தியர்
x
தினத்தந்தி 29 Feb 2020 8:45 AM GMT (Updated: 29 Feb 2020 8:45 AM GMT)

தலைப்பை பார்த்தவுடன் அது யாராக இருக்கும் என்று யோசிக்க தொடங்கியிருப்பீர்கள். சிலர் கண்டுபிடித்திருப்பீர்கள். இன்றைய தேதியோடு சம்பந்த படுத்தி பார்த்தால் இன்னும் சிலருக்குத் தெரியும். அப்படியும் தெரியாதவர்களுக்குச் சொல்லி விடுவதே நல்லது.

அவர்தான் இந்தியப் பிரதமராயிருந்த மொரார்ஜி தேசாய். அந்த விருதின் பெயர் ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’, பாகிஸ்தானில் வழங்கப்படும் உயரிய விருதான இந்த விருதை பெற்ற ஒரே இந்தியர் இவர்தான்.

வரலாறு என்பது வந்து போனவர்களின் தொகுப்பு அல்ல; சாதனைகள் தந்து போனவர்களின் தொகுப்பு. அப்படிப்பட்ட சாதனையாளர்தான் மொரார்ஜி தேசாய். இவர் 1896-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி குஜராத் மாநிலத்தில் குல்சார் மாவட்டத்தில் படேலி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது பிறந்தநாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும். பிப்ரவரி 29-ந் தேதியே அதற்கு காரணம்.

மொரார்ஜிக்கு பதினெட்டு வயதாகும்போது அவருடைய தந்தை ரன்சோதிசி தேசாய் திடீரென்று மரணம் அடைந்தார். மூத்த மகன் என்ற காரணத்தால் குடும்ப சுமையை மொரார்ஜி ஏற்றுக் கொண்டார். பவநகர் மகாராஜாவிடம் கல்வி உதவித்தொகை பெற்று பம்பாயில்(தற்போது மும்பை) பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றார். 12 ஆண்டுகள் பம்பாய் மாகாணத்தின் துணை ஆட்சி தலைவராக பதவி வகித்தார். 1930-ம் ஆண்டு காந்தியடிகள் தலைமையில் சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது. ஆங்கிலேய அரசு பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டது. ஆங்கிலேய அரசின் உயர் அதிகாரி என்ற முறையில் இவற்றை கண்கூடாக கண்டார் மொரார்ஜி. ஆங்கிலேயர்களின் நீதியிலும், நேர்மையிலும் நம்பிக்கை இழந்த மொரார்ஜி. பம்பாய் மாகாண துணை ஆட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பலரது வற்புறுத்தலையும் பொருட்படுத்தாமல் குடும்ப நலனைவிட தேச நலனே முக்கியம் என்று கருதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்த போது மொரார்ஜி கைது செய்யப்பட்டார். 1942-ம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் போதும் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1931-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக பதவி வகித்தார். 1937-ம் ஆண்டு வல்லபாய் படேல் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு வெற்றி பெற மொரார்ஜி கடுமையாக உழைத்தார். இதனால் காங்கிரஸ் தலைவர்களின் பாராட்டைப் பெற்றார்.

1937-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி முதன் முறையாக பம்பாய் மாகாண தேர்தலில் போட்டியிட்டது. இதில் மொரார்ஜி வெற்றி பெற்றபோது விவசாயம் மற்றும் கூட்டுறவு, வருவாய்த்துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 1939-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியர்களை கலந்து ஆலோசிக்காமல் இரண்டாவது உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்தியது. இதனால் எல்லா காங்கிரஸ் அரசுகளும் பதவி விலகின. அப்போது மொரார்ஜி தேசாயும் பதவி விலகினார். 1946-ம் ஆண்டு மீண்டும் பம்பாய் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அப்போது மொரார்ஜி தேசாய் உள்துறை மந்திரி ஆனார். இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு 1952-ம் ஆண்டு பம்பாய் மாகாணத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 1952-ம் ஆண்டு பம்பாய் மாகாணம் “மகாராஷ்டிரா”, “குஜராத்” என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவினை மொரார்ஜிக்கு திருப்தியை அளிக்காததால் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார்.

1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி மத்திய அமைச்சரவையில் சேர்ந்தார். அப்போது தொழில் மற்றும் வணிக வரித்துறையின் கேபினட் மந்திரியாக இருந்தார். 1958-ம் ஆண்டு மத்திய நிதிமந்திரி ஆனார். தனது அமைச்சகத்தின் மூலம் அரசுக்கு வருவாயை அதிகப்படுத்தினார். 1963-ம் ஆண்டு காமராஜரின் திட்டத்தின்படி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி காமராஜர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதேபோல் மொரார்ஜி தேசாய் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினார்.

1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பிளவு பட்டது. மொரார்ஜி தேசாய் தொடர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் என்ற பழைய காங்கிரஸ் கட்சியில் நீடித்தார். 1971 மற்றும் 1975-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார்.

1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். அப்போது மொரார்ஜி தேசாய் கைது செய்யப்பட்டு ரகசிய காவலில் வைக்கப்பட்டார். 19 மாத சிறைவாசத்திற்கு பின்னர் 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார்.

அதே ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இவரது தலைமையில் ஜனதா கட்சி கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. மொரார்ஜி குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றார். பிரதமராக பொறுப்பு ஏற்றபோது மொரார்ஜியின் வயது 80. பிரதமராக இருக்கும்போது பூரண மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வந்தார். தங்கத்தின் விலை குறைய நடவடிக்கை எடுத்தார். கதர் மற்றும் கைத்தறி தொழிலுக்கு மறுவாழ்வு கொடுத்தார். ஜனதா கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

மொரார்ஜி தேசாய் நேர்மைக்கும், உண்மைக்கும் உதாரணமாக திகழ்ந்தவர். அவர் அப்போதைய பம்பாய் மாகாணத்தின் மந்திரியாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. அவரது மகள் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டார். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தந்தையிடம் அனுமதி கேட்டார். ஆனால் தேசாய் மறுத்துவிட்டார். தான் அமைச்சராக இருப்பதால் மகளுக்கு ஏதோ சலுகை காட்டிவிட்டார் என்ற பழிச்சொல் வரும் என்பதே அதற்கு காரணம். எவ்வளவு நேர்மை பாருங்கள். அதன் விளைவாக அவரது மகள் தற்கொலை செய்து கொண்டார்.

‘ஜனதா சாப்பாடு திட்டம்’ அவர் பிரதமராக இருக்கும்போது கொண்டுவரப்பட்டது. உணவகங்கள் ஒரு ரூபாய்க்கு நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும். இதுதான் ஜனதா சாப்பாடு. இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கே உணவகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதைப் போலவே பொருட்களில் விசிறி என்ற விலைப்பதிவு இவர் காலத்திலே தான் கொண்டு வரப்பட்டது.

வரதட்சணை என்ற அரக்கனை அடியோடு வெறுத்தவர் தேசாய். தான் கலந்துகொள்ளும் திருமணங்களில் அது தலை காட்டியிருக்கிறது என்பதை கேள்விப்பட்டால் உடனே வெளியேறி விடுவார். தனது காலத்துக்குப் பிறகு தனது சொத்துகள் பொது நல சேவைக்கு பயன்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார். எளிமையை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர், மற்றவர்களும் அப்படியே வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஒருமுறை தமிழகத்திலுள்ள ராமேசுவரத்துக்கு வந்திருந்த போது, சாமி தரிசனத்துக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி வரிசையில் நின்றே வழிபட்டார். அவர் தன்னுடைய சிறுநீரை தானே அவ்வப்போது அருந்துவாராம். ரகசியமாக இருந்த இந்தச் செயல் மற்றவர்களுக்கு தெரிந்தவுடன் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பல ஆண்டுகள் வாழ்வதற்கும் இது உதவும் என்பாராம்.

மொரார்ஜி தேசாயின் நாட்டு நலத்திட்டங்களைப் பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது. மொரார்ஜி தேசாய் 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி காலமானார்.

இன்று (பிப்ரவரி 29-ந்தேதி) முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்ததினம்.

- முனைவர் இளசைசுந்தரம், மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்.

Next Story