எண்ணெய் விலை சரிவு, கொரோனா பீதி வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் வீழ்ச்சி


எண்ணெய் விலை சரிவு, கொரோனா பீதி வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் வீழ்ச்சி
x
தினத்தந்தி 10 March 2020 11:14 AM GMT (Updated: 10 March 2020 11:14 AM GMT)

கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா பீதி போன்ற உலக நிலவரங்களால் வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.

மும்பை

கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா பீதி போன்ற உலக நிலவரங்களால் வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 538 புள்ளிகளை இழந்தது.

சென்ற வார வர்த்தகத்தில்...

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 720.67 புள்ளிகள் சரிவடைந்து 37,576.62 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 212.30 புள்ளிகள் இறங்கி 10,989.45 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில், எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற உலக நிலவரங்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார புள்ளிவிவரங்கள் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்யும் என ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். அதை உறுதி செய்யும் விதமாக பங்குச் சந்தைகள் நேற்று ரத்தத்தில் குளித்தன.

சவுதி அரேபியா

ஓபெக் நாடுகள்-ரஷ்யா இடையிலான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 30 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்தது. முதல் வளைகுடாப் போருக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் கடும் பாதிப்புக்கு உள்ளானது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் 1.07 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இத்தாலியில், கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 130-ஐத் தாண்டியதாக செய்திகள் கசிய பீதி உச்சத்தை எட்டியது. அதனால் கலவரம் அடைந்த சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுத் தள்ளினர். எனவே ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் பங்கு வியாபாரம் சுருண்டது. அதனை இந்தியப் பங்குச்சந்தைகளும் எதிரொலித்தன. குறிப்பாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அன்னிய முதலீடு அதிகம் வெளியேறியது போன்றவற்றால் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் அனைத்து துறை குறியீட்டு எண்களும் வீழ்ந்தன. அதில் எரிசக்தி துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 9.74 சதவீதம் சரிந்தது. அடுத்து உலோகத்துறை குறியீட்டு எண் 7.62 சதவீதம் இறங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,941.67 புள்ளிகளை இழந்து 35,634.95 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 36,950.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 35,109.18 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 327 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 2231 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 167 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,660 கோடியாக குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அது ரூ.2,912 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 538 புள்ளிகள் குறைந்து 10,451.45 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 10,751.55 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 10,294.45 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story