கடந்த 2019-ஆம் ஆண்டில் நிலக்கரி இறக்குமதி 12.6% உயர்ந்து 19.78 கோடி டன்னாக அதிகரிப்பு


கடந்த 2019-ஆம் ஆண்டில் நிலக்கரி இறக்குமதி 12.6% உயர்ந்து 19.78 கோடி டன்னாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 March 2020 9:54 AM GMT (Updated: 12 March 2020 9:54 AM GMT)

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நிலக்கரி இறக்குமதி 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என கேர் ரேட்டிங் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது.

புதுடெல்லி

கடந்த 2019-ஆம் ஆண்டில் நிலக்கரி இறக்குமதி 12.6 சதவீதம் உயர்ந்து 19.78 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

அனல்மின் நிலையங்கள்

அனல்மின் நிலையங்களில் நிலக்கரி முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது. நம் நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

2019 காலண்டர் ஆண்டில் 19.78 கோடி டன் சாதாரண நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 12.6 சதவீதம் உயர்வாகும். எனினும், கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரி இறக்குமதி (5.16 கோடி டன்னில் இருந்து) 5.13 கோடி டன்னாக குறைந்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.

2017-18-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த நிலக்கரி இறக்குமதி (உயர்தர மற்றும் சாதாரண நிலக்கரி) 20.83 கோடி டன்னாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடியாகும். சென்ற நிதி ஆண்டில் (2018-19) ரூ.1.70 லட்சம் கோடிக்கு 23.52 கோடி டன் இறக்குமதி ஆகி இருக் கிறது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நிலக்கரி இறக்குமதி 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என கேர் ரேட்டிங் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது. பிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்ச் நிறுவனம், அடுத்த 9 வருடங்கள் (2028 வரை) நிலக்கரி இறக்குமதி ஆண்டுக்கு சராசரியாக 4.3 சதவீதம் உயரும் என மதிப்பீடு செய்துள்ளது.

கோல் இந்தியா

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் உலக நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story