ரூபாய் மதிப்பு அடிப்படையில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 20 சதவீதம் சரிவு


ரூபாய் மதிப்பு அடிப்படையில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 20 சதவீதம் சரிவு
x
தினத்தந்தி 13 March 2020 9:58 AM GMT (Updated: 13 March 2020 9:58 AM GMT)

2015-16-ஆம் நிதி ஆண்டில், ரூ.2.57 லட்சம் கோடிக்கு நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

மும்பை

நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, கடந்த பிப்ரவரி மாதத்தில், ரூபாய் மதிப்பு அடிப்படையில் 20 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

தங்கம் இறக்குமதி

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது.

அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் இந்தியாவில் இருந்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. நம் நாட்டின் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு சுமார் 25 சதவீதமாக உள்ளது.

2015-16-ஆம் நிதி ஆண்டில், ரூ.2.57 லட்சம் கோடிக்கு நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. 2016-17-ஆம் நிதி ஆண்டில் அது ரூ.2.37 லட்சம் கோடியாக குறைந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் ரூ.2.10 லட்சம் கோடியாக குறைந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 11 சதவீத சரிவாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2018-19) ரூ.2.76 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதி இருக் கிறது.

நடப்பு நிதி ஆண்டில் (2019-20) நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 5 முதல் 10 சதவீதம் வரை குறையும் என ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மதிப்பீடு செய்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு, மத்திய கிழக்கு நிலவரங்கள் போன்றவையே இதற்கு காரணங்களாகும்.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.20,763 கோடியாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 20 சதவீத சரிவாகும். அப்போது அது ரூ.26,039 கோடியாக இருந்தது.

பிப்ரவரி மாதத்தில் அறுத்து, பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி 41 சதவீதம் சரிந்து ரூ.9,897 கோடியாக உள்ளது. எனினும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 28 சதவீதம் உயர்ந்து (ரூ.6,321 கோடியில் இருந்து) ரூ.8,107 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story