சிறப்புக் கட்டுரைகள்

பார்வை திறனை பறிக்கும் ‘குளுக்கோமா’ + "||" + Blindness of sight ability 'Glaukkoma'

பார்வை திறனை பறிக்கும் ‘குளுக்கோமா’

பார்வை திறனை பறிக்கும் ‘குளுக்கோமா’
மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை உலக கண் அழுத்த நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை உலக கண் அழுத்த நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகத்தில் கண்பார்வை தெரியாமல் இருக்க முதல் காரணம் கண்புரை நோயாகும். அதற்கு அடுத்தபடியாக பார்வை திறனை பறிக்கும் நோயாக கண் நீர் அழுத்த நோய் (குளுக்கோமா) உள்ளது. இந்தியாவில் 1 கோடியே 2 லட்சம் பேர் பார்வை இழந்து உள்ளனர். இதில் 12 லட்சம் பேருக்கு கண் நீர் அழுத்த நோயினால் பார்வை பறிபோய் இருக்கிறது.

இந்த நோய் பற்றி பலருக்கு தெரிவதில்லை. இந்த நோய் தாக்கியவருக்கு கண்ணில் வலி இருக்காது. இதனால் பெரும்பாலானோர் சிகிச்சை பெற வேண்டி ஆஸ்பத்திரிக்கு செல்வதில்லை. பார்வை திறன் பாதிக்கப்பட்டவுடன்தான் மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். கண் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண் நரம்புகள் (ஆப்டிக்நர்வ்) பாதிக்கப்படும். பின்னர் கண் பார்வை பறிபோகும். இதற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும் மீண்டும் பழைய நிலையை அடைய முடியாது.

கண்ணில் கருவிழியும், லென்சும் இணைகிற இடத்தில் சிலியரி இழைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு திரவம் (ஆக்குவஸ்கியூமர்) சுரக்கிறது. இதற்கு முன்கண் திரவம் என்று பெயர். கண்ணில் உள்ள கார்னியா மற்றும் லென்ஸ் உள்ளிட்ட கண்ணின் பல்வேறு பகுதிகளுக்கு தேவையான உணவு சத்துகளை வினியோகிக்கவும் இது தேவைபடுகிறது. இந்த திரவம் கண்ணின் உள்புறமாக சுரக்கிறது. இது விழி வெண்படலமும், கார்னியாவும் இணையும் இடத்தில் உள்ள சல்லடை போன்ற வடிகால்களின் மூலம் வெளியேறுகிறது.

இந்தப்பாதையில் அடைப்பு ஏற்பட்டால் திரவம் சுரக்கும் அளவு அதிகமாகி அது வெளியேற வழியின்றி கண் நீர் அழுத்த நோயை ஏற்படுத்துகிறது. ஒரு குழாய் வழியாக தண்ணீர் வெளியில் செல்லும் போது குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் உள்ளே தேங்கி விடும். அதைப்போல் கண்ணின் வெளியேற்ற கால்வாயில் அடைப்பு ஏற்படுவதால் கண் அழுத்தம் அதிகமாகி கண் நரம்புகள் பாதிக்கப்படும். கண் அழுத்தத்தால் நீர் வெளியேறுவது குறைந்து விடுகிறது. இதனால் கண் அழுத்தம் அதிகமாகி கண் நரம்புகள் பாதிக்கப்படும்.

பொதுவாக ரத்தக்குழாய்களில் செல்லும் ரத்தத்துக்கு ஒரு வித அழுத்தம் உள்ளது. அதைப்போல் கண்ணில் பயணிக்கும் இந்த திரவத்துக்கும் அழுத்தம் இருக்கிறது. இந்த திரவம் சுரக்கிற அளவும், வெளியேறும் அளவும் சமமாக இருந்தால் கண் நீர் அழுத்தம் சரியான அளவில் இருக்கும். இந்த அழுத்தம் அதிகமானால் அது கண் முழுவதும் பரவும். பார்வை நரம்பை பாதிக்கும். அதனால் பார்வை பறிபோகும் சூழ்நிலை உருவாகும். கண்ணில் சுரக்கும் இந்த திரவத்துக்கும், கண்ணீருக்கும் சம்பந்தம் கிடையாது. முன்கண் திரவம் கண்ணின் உள்பக்கமாக சுரக்கிறது. கண்ணீர் கண்ணின் வெளிப்பக்கமாக சுரக்கிறது.

இந்த நோய்,திறந்த கோண கண்நீர் அழுத்தம், குறுங்கோண கண் நீர் அழுத்தம், பிறவி கண் நீர் அழுத்தம் என்று பலவகைகள் உண்டு. இதில் திறந்த கோண கண்நீர் அழுத்தம் கவனிக்கப்பட வேண்டியது. இந்த நோய் தாக்கியவருக்கு தொடக்கத்தில் எதுவும் தெரியாது. திடீரென்று பார்வை மங்க தொடங்கும் அப்போது பார்வை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். இந்த பாதிப்பை மீண்டும் சரி செய்ய முடியாது.

குறுங்கோண கண் நீர் அழுத்த நோய் வந்தவர்களுக்கு கண்வலியும், தலைவலியும் ஒரே நேரத்தில் உண்டாகும். கண்களில் நீர் வழியும் பார்வை மங்கும். பிறவி கண் நீர் அழுத்த நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவது. குழந்தைகளின் கண் பெரிதாக இருக்கும். கண்களில் நீர் வடிந்து கொண்டு இருக்கும். வெளிச்சத்தை பார்க்க முடியாத அளவுக்கு கண்கள் கூசும்.

இந்த நோய் யாருக்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் வரலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அடிக்கடி ஸ்டிராய்டு மருந்துகளை பயன்படுத்துவோருக்கு இந்த நோய் வரலாம். குடும்பத்தில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் இந்த நோய் வரலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய விழி அழுத்தமானி மூலம் கண் அழுத்தத்தை அறிந்து கொள்ள முடியும். விழி அக நோக்கி மூலம் பார்வை நரம்பு கோளாறுகளை தெரிந்து கொள்ளலாம். விழிக் கோணமானி உதவியுடன் முன்கண் திரவம் வெளியேறும் தடை உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.

கண் நீர் அழுத்த நோய்க்கு பல வகை சிகிச்சைகள் உள்ளன. நோய் தொடக்க நிலையில் இருந்தால் கண்ணில் சொட்டு மருந்து விட்டு கண் அழுத்தத்தை குறைக்கலாம். சிலருக்கு லேசர் சிகிச்சை மூலம் அழுத்தத்தை குறைக்கலாம். இந்த இரண்டு சிகிச்சைகளாலும் நோயை குணப்படுத்த முடியாத பட்சத்தில் கண்ணில் திரவ அடைப்பை நீக்க டிரபிகுலெக்டமி என்னும் அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த சிகிச்சை மூலம் முன்கண் திரவம் வெளியேறும் பாதை மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போது நவீன சிகிச்சை முறைகளான வால்வ், மற்றும் ஸ்டண்ட் முறைகளை பயன்படுத்தி கண்நீர் அழுத்தத்தை குறைக்கிறார்கள்.

இந்த அறுவை சிகிச்சையால் வரும் காலத்தில் ஏற்படக்கூடிய பார்வை இழப்பை மட்டுமே தடுக்க முடியும். ஏற்கனவே இழந்து விட்ட பார்வையை மீட்டு தர முடியாது. கண் நீர் அழுத்த நோய்க்கு சத்தம் இல்லாமல் பார்வையை திருடும் நோய் என்று பெயர் உண்டு. ஏனென்றால் இதில் பார்வை இழப்பானது நீண்டகால அளவில் ஏற்படுகிறது. நோய் முற்றிய பின்னரே இது கண்டு பிடிக்கப்படுகிறது. 40 வயது கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

‘குளுக்கோமா’வால் பாதிக்கப் பட்ட நோய் உள்ளவர்கள் புகை பிடிப்பதை கைவிட வேண்டும். யோகாசனம் செய்பவர்கள் சிரசாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகம் குடிக்க கூடாது. ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி மருத்துவரிடம் சென்று அவரது ஆலோசனைபடி மருந்துகளை முறையாக பயன்படுத்தினால் குளூக்கோமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பிரச்சினை இன்றி வாழலாம்.

பேராசிரியர் விஜய் சங்கர், கண் அறுவை சிகிச்சை நிபுணர்
(சிறந்த டாக்டருக்கான தமிழக அரசின் விருது பெற்றவர்)