பிரபலங்களின் கடைசி டிரைவரின் கலங்கவைக்கும் நினைவலைகள்


பிரபலங்களின் கடைசி டிரைவரின் கலங்கவைக்கும் நினைவலைகள்
x
தினத்தந்தி 15 March 2020 10:07 AM GMT (Updated: 15 March 2020 10:07 AM GMT)

பிரபலங்கள் அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ வாகனங்களில் பயணித்திருந்தாலும், அவர்களை கடைசியாக நீங்கள், உங்கள் வாகனத்தில் கொண்டு செல்கிறீர்கள்.

ழ்ந்த சோகத்தோடு ஆங்காங்கே திரண்டு நின்றிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், அழகான அந்த இறுதி யாத்திரை வாகனம் தவழ்ந்து வருகிறது. உள்ளே தி.மு.க. தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரான பேராசிரியர் க.அன்பழகன் உடல் மெருகு குலையாமல் கிடத்திவைக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி சூழ்ந்த அந்த வாகனத்தின் உள்ளே அவர் முகத்தை பார்க்கும் தொண்டர்களில் பலர் ‘உங்களாலதானே நாங்க நல்லா இருக்கோம். எங்களையும் உங்களோடு கூட்டிட்டு போங்கய்யா..’ என்று உணர்ச்சிமேலிட கதறுகிறார்கள். கூட்டம் சோகத்தில் ஸ்தம்பித்து அந்த பிளையிங் ஸ்குவாடு வாகனத்தை நெருக்குகிறது. பி.ஆர்.எம்.எம். சாந்தகுமார் அதனை நிதானமாக ஓட்டிவருகிறார். கீழ்ப்பாக்கத்தில் இருந்து வாகனம் கிளம்பி வேலங்காடு இடுகாடு வருகிறது. அங்கு வாகனத்தை நிறுத்தி, தனது குழுவினர் உதவியோடு உடலை இறக்கி, ப்ரீசர் பாக்சில் இருந்து வெளியே எடுத்து இறுதிக்காரியங்களுக்கு ஒப்படைத்துவிட்டு, நடப்பது ஒவ்வொன்றையும் கனத்த இதயத்தோடு கண்காணித்துக்கொண்டிருந்த சாந்தகுமாரை அணுகினோம்.

இவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மறைந்த முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி உள்பட பல தலைவர்களுக்கும், ஏராளமான பிரபல நடிகர்- நடிகைகளுக்கும் இறுதி யாத்திரை வாகனத்தை இயக்கியவர். இறுதி காரியங்களையும் உடனிருந்து செய்தவர். அதில் இவருக்கு கலங்கடிக்கும் அனுபவங்களும் நிறைய கிடைத்திருக்கின்றன.

அவருடன் நமது உரையாடல்:

பிரபலங்கள் அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ வாகனங்களில் பயணித்திருந்தாலும், அவர்களை கடைசியாக நீங்கள், உங்கள் வாகனத்தில் கொண்டு செல்கிறீர்கள். சோகமான மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அந்த வாகனத்தை இயக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

இந்த உலகம் அவர் இறந்துவிட்டதாக நினைக்கும். ஆனால் நான் அவர் ஆழ்ந்த நிரந்தர தூக்கத்தில் இருப்பதாக நினைத்து, அவரது தூக்கம் கலையாத நிலைக்கு அலுங்காமல் குலுங்காமல் வாகனத்தை ஓட்டுவேன். இறந்த தலைவர் என்று நினைத்து பெரிய மாலைகளை கொண்டுவந்து அவர் மீது போட்டால் வலித்துவிடும் என்று நினைத்து அப்புறப்படுத்திவிடுவேன். என் கவனம் முழுக்க அந்த உடல்மீதும், சாலையின் மீதும் இருக்கும்.

உணர்ச்சிவசப்பட்டு கதறி அழும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வாகனத்தை இயக்கும் நீங்களும், எப்போதாவது அடக்கமுடியாத சோகத்தோடு உணர்ச்சிவசப்பட்டதுண்டா?

நானும் மனிதன்தான். சுற்றி நின்று பலரும் கதறும்போது நானும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் 41 ஆண்டுகளாக இதனை தொழிலாக செய்துவருகிறேன். அதனால் மனப்பக்குவம் ஏற்பட்டிருக்கிறது. அந்த உடலுக்கு நான் செய்யவேண்டிய கடமையிலே கவனமாக இருப்பதால், இப்போதெல்லாம் எளிதாக உணர்ச்சிவசப்படாமல் பார்த்துக்கொள்கிறேன்.

தலைவர்களின் முகத்தை கடைசியாக ஒரு தடவை பார்க்க பலரும் மணிக்கணக்கில் காத்திருக்க நீங்கள், அந்த தலைவர்களின் இறுதிப் பயணத்தில் மிக அருகில் இருக்கிறீர்கள். இதை உணர்வுரீதியாக எப்படி பார்க்கிறீர்கள்?

அதை கடவுள் எனக்கு தந்த வாய்ப்பாக பார்க்கிறேன். மரணத்திற்கு பின்பு நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை என்பது அவர்களது ஆத்மாவுக்கு செய்யும் சேவையாகும். ஒரு உடலுக்கு இறுதி மரியாதை செய்யும் வரை அந்த ஆத்மா, அந்த உடலின் அருகிலே இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அனைவருக்கும் அந்த ஆத்மாவின் ஆசி கிடைக்கும். அது எனக்கும் கிடைக்கிறது. 1980-ம் ஆண்டுகளிலே நான் இந்த பணிக்கு வந்துவிட்டேன். அன்று ‘என்னை யாரென்றே தெரியாது’ என்று கூறி ஒதுங்கிச்செல்வார்கள். இன்று, ஓடிவந்து என்னோடு பேசுகிறார்கள். இதற்கு அந்த ஆத்மாக்களின் ஆசிதான் காரணம்.

சோகத்தில் கொந்தளிக்கும் கூட்டத்திற்கு மத்தியில் உடல் இருக்கும் வாகனத்தை ஓட்டிச்செல்வது எளிதான பணியா?

இல்லை. இதில் நிறைய நெருக்கடிகள் உண்டு. சோகத்தில் கட்டுப்பாடற்று உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் கூட்டத்திற்கு மத்தியில் மனதை ஒருநிலைப்படுத்தி கவனமாக வாகனத்தை இயக்கவேண்டும். எந்த விபத்தும் நடந்துவிடாத அளவுக்கு விழிப்புடன் இருக்கவேண்டும். 2001-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் இறுதிப் பயணத்தில் அப்பலோ மருத்துவமனை முதல் போக் ரோட்டில் உள்ள அவரது வீடு வரை 8 கி.மீ. தூரத்திற்கு மக்கள் கடலாக குவிந்திருந்தார்கள். அதற்குள்ளும் நீந்தி வந்தோம். மறைந்த முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி அவர்களது இறுதிப்பயணங்களும் உணர்ச்சிக்கொந்தளிப்பாக இருந்தது. ‘அய்யா எங்களையும் கூட்டிட்டு போங்க..’ என்று பலர் அழுது துடித்து வாகனத்தில் விழுந்தார்கள். கடவுள் அருளால் இதுவரை எந்த சேதமும் இன்றி எங்கள் பணி தொடர்கிறது. இதற்கு எங்கள் குழுவின் உதவியும், குடும்பத்தின் உதவியும் முக்கிய காரணம்.

பிரபலங்கள் இறந்ததும் உங்களுக்கு தகவல் தருகிறார்கள். அதன் பின்பு நீங்கள் எப்படி திட்டமிட்டு ஒன்றன்பின் ஒன்றாக காரியங்களை செய்கிறீர்கள்?

பொதுவாக எல்லா நேரத்திலும் நாங்கள் தயாராகத்தான் இருப்போம். எங்கள் குழுவில் அனுபவம் பெற்ற ஐம்பது பேர் வரை இருக்கிறார்கள். எங்கிருந்து உடலை பெறுவது, எங்கு கொண்டுசெல்வது என்று முழுவிவரத்தையும் கேட்டு, அதற்குரிய திட்டங்களை உடனே வகுத்துவிடுவோம். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு என்னோடு சேர்ந்து என் குழுவினர் 22 பேர் பணியாற்றினார்கள். பேராசிரியர் க.அன்பழகனுக்கு 16 பேர் பணிபுரிந்தோம். கூட்டத்திற்கும், தூரத்திற்கும் தக்கபடி திட்டங்களை உருவாக்குவோம். அதில் ‘ஏ டூ இசட்’ வரை அனைத்து காரியங்களையும் நாங்களே செய்துவிடுவோம்.

நீங்கள் பலதடவை பத்திரிகைகளிலும், டெலிவிஷன்களிலும் பார்த்து பிரமித்த தலைவரை உயிரற்ற உடலாக பார்க்கும் அந்த முதல் வினாடி உங்கள் மனதில் என்ன தோன்றும்?

கவலை தோன்றும். மரணத்தை யாராலும் வெல்லமுடியாது. மானசீகமாக அஞ்சலி செலுத்திவிட்டு அவருக்கான கடமைகளை செய்யத் தொடங்கிவிடுவேன். இன்னொரு கோணத்தில் என் மனது பொதுவாக சிந்திக்கும். இதுதான் வாழ்க்கை. எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் வெறுங்கையோடுதான் போகவேண்டியதிருக்கிறது. ஒவ்வொரு மரணமும் நமக்கு பாடம். ஆனால் அதை நாம் புரிந்துகொள்வதில்லை. புரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் தப்பு செய்கிறோம். தலைவர்களோ, சாதாரணமானவர்களோ ஒவ்வொரு மரணமும் நமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன.

இந்த துறையில் நீங்கள் எந்த மாதிரியான நவீன தொழில்நுட்பங்களை புகுத்தியிருக்கிறீர்கள்?

மனித உடல் விரைவாகவே கெட்டுப்போகும். அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் திரண் டிருக்கிறார்கள். உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல சாலை களில் பல மணி நேரம் ஆகியிருக்கிறது. அதனால் வெயில்பட்டு உடலில் பல மாற்றங்கள் நிகழும். தோற்றமும் மாறும். அந்த நிலை ஏற்படாமல் இருக்க பிரீசர் பாக்ஸ் கொண்டு வரப்பட்டது. நானே அதனை வடிவமைத்து காப்புரிமையும் பெற்றேன். பின்பு இதற்கான ஏ.சி.வாகனம் உருவாக்கப்பட்டது. படிப்படியான மாற்றத்திற்கு பின்பு நானே இந்த ராயல் சென்ட்ஆப் வாகனத்தை வடிவமைத்து வாங்கியிருக்கிறேன். இந்த கண்ணாடி ரதத்தின் உள்ளே நவீன வசதிகள் உள்ளன. ‘வைபை’ வசதியும் உள்ளது. உலகில் எங்கிருந்தாலும் ஊர்வலக் காட்சிகளை பார்க்கலாம்.

எங்கள் பணி இதுமட்டுமல்ல. அதிநவீன ஆம்புலன்ஸ் சேவைகளையும் செய்கிறோம். எங்கள் ஆம்புலன்ஸ்கள் மினி மருத்துவமனை போன்று அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது. உள்ளே கிச்சன், மூன்று படுக்கைகள், டெலிவிஷன் வசதி உள்பட அனைத்தும் உண்டு. இந்தியாவிற்குள்ளும், நேபாளம், பூடான் எல்லை வரையும் சென்று உயிர்காக்கும் சேவையை செய்கிறோம்.

மிகப் பெரிய தலைவர்களின் இறுதியாத்திரையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதும் அதை மறந்துவிடுவீர்களா?

வீட்டிற்கு சென்றதும் குளித்துவிட்டு, அந்த ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். ஆனால் அந்த காட்சிகளை என்னால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. சில நாட்கள் அந்த காட்சிகள் கனவில் வரும். அதுவே என் மனத்திரையிலும் ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த தொழில் உங்களை பிரபலமாக்கிவிட்டாலும், இதற்காக நீங்கள் வாழ்க்கையில் இழந்தது என்ன?

நிம்மதியாக தூங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. இரவில் எந்த நேரத்திலும் அழைப்புகள் வரும். உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் அவர்களது அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறேன். ஒரு சினிமாகூட முழுமையாக பார்த்ததில்லை. பத்து தடவையாவது போனுடன் வெளியே செல்லவேண்டியதிருக்கும். ஆனாலும் கடவுள் எனக்காக விதித்த மிக உயர்ந்த தொழில் இது. இழப்புகளை பற்றி சிந்திக்காமல் ஆத்மதிருப்தியோடு இதை செய்துகொண்டிருக்கிறேன்!

இவர் குடும்பத்தோடு கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் வசித்து வருகிறார். மனைவி எஸ்.லலிதா, மகள்கள் எஸ்.கே. சந்தியா சாய் ஹரீஷ், எஸ்.கே.ஜோதி கவுதம்.

பிரபலமானவர்களின் இறுதிக்காரியங்களில் ஏற்பட்ட
உங்கள் மறக்க முடியாத அனுபவம்?

நிறைய இருக்கிறது. ஒரு மனிதர் எவ்வளவு பலன் உள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பதை நான் அவர்களது மரணத்தில் நேரடியாக பார்க்கிறேன். பல்லாயிரம் மக்கள்கூடி அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாமல் அழுது துடிப்பார்கள். அந்த பிரபலங்களின் நிஜமான சம்பாத்தியம் அதுதான்.

மிக பிரபலமான நடிகை ஒருவர். முன்னாள் முதல் வருடன் நடித்து தென்னிந்தியா முழுக்க ரசிகர்களை பெற்றவர். முதுமையாகி அவர் மரணமடைந்தார். எங்கள் காரில் அவர் உடலை பெசன்ட் நகர் மயானத்திற்கு கொண்டு செல்ல ஏற்றினோம். அந்த உடலுடன் நானும், என் உதவியாளரும் மட்டுமே பயணித்தோம். குடும்பத்தினர் இன்னொரு விலை உயர்ந்த காரில் பின்தொடர்ந்தார்கள். நாங்கள் உடலோடு சென்று 15 நிமிடங்கள் மயானத்தில் காத்திருந்த பின்பு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். வேறு ஒரு ஆள்கூட இல்லை. அந்த காலத்து கனவுக்கன்னியின் நிலையை நினைத்து கண்கலங்கினேன்.

நாட்டிய பேரொளி நடிகை பத்மினி இறந்ததும், உடலை பெறுவதற்காக சென்றோம். அங்கு திரளான கூட்டம் இருந்தது. நடிகை ஷோபனா அப்போது எங்களிடம் ‘என் சித்தி எப்போதும் லிப்ஸ்டிக்குடன் அழகான தோற்றத்துடன்தான் காட்சியளிப்பார். இப்போதும் ஒப்பனை செய்து லிப்ஸ்டிக் போடவேண்டும்’ என்றதோடு அவரே அதை எங்கள் முன்னிலையில் செய்தார். அது நெகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஏகப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் சொல்லிவிடுவது தர்மமல்ல.


Next Story