சிறப்புக் கட்டுரைகள்

பெண்களுக்கு சுதந்திரம் தரும் வேலை + "||" + Work brings freedom to women

பெண்களுக்கு சுதந்திரம் தரும் வேலை

பெண்களுக்கு சுதந்திரம் தரும் வேலை
இந்தியா முழுவதும் 20 முதல் 24 வயதுடைய பெண்கள், தொழில்துறையில் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களாக நுழைகின்றனர்; தமிழ்நாட்டில் அனைத்து வயது குழுக்களிலும் பெண் ஊழியர்கள் அதிகமாக உள்ளனர்.
20 முதல் 24 வயதுடைய பெண்கள், நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையில் தொழில்துறையில் ஊழியர்களாக சேர்ந்து வருகின்றனர். அனைத்து இதர வயதினரின் எண்ணிக்கை தேசிய அளவில் குறைந்து வரும் வேளையில், இந்த ஒரு பிரிவினரின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சி.எம்.ஐ.இ) ஆய்வு ஒன்று கூறுகிறது.

2019 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, இந்த வயதுடைய பெண்களின் பங்கெடுப்பு 14.3 சதவீதமாக, 2017-ல் இருந்த 9.4 சதவீதத்தை விட பெரும் அதிகரிப்பாக இருந்தது. கிராமப்புற பங்கெடுப்பு 12.2 சதவீதமாகவும், நகர்ப்புற பங்கெடுப்பு 18.7 சதவீதமாகவும் இருந்தது.

சி.எம்.ஐ.இ. செய்த ஆய்வில் 1.74 லட்சம் குடும்பங்கள் பங்கெடுத்தன.  15 வயதுக்கு மேற்பட்ட, அனைத்து மட்டங்களிலும், பல்வகையான துறைகளிலும்  பணிபுரிபவர்களிடம் ஆய்வுகள் செய்யப்பட்டன. 

தேசிய அளவிலான சித்திரம்

பண நீக்க நடவடிக்கைக்கு பின்னர், 20 முதல் 24 வயதுடைய குழுவினரின் அதிகபட்ச பங்கெடுப்பு விகிதம் இதுதான் என்று சி.எம்.ஐ.இ அறிக்கை கூறுகிறது. 

 2016 ஜனவரி முதல் ஏப்ரல் வரை, 20 - 24 வயதினரின் பங்கெடுப்பு 17.3 சதவீதமாக இருந்தது. 2016 மே முதல் ஆகஸ்டு வரை, இது 18.4 சதவீதமாக அதிகரித்தது.

2016 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில், பண நீக்க நடவடிக்கைக்கு பின், பங்கெடுப்பு 13.5 சதவீதமாக வீழ்ந்தது. 2017 மே முதல் ஆகஸ்டு வரையில் இது 9.5 சதவீதமாக மேலும் குறைந்தது. 2017 மற்றும் 2018 முழுவதும் 11 சதவீதத்திற்கும் குறைவாக தொடர்ந்தது.

இருபது வயதுகளின் பிற்பகுதியில், பணியாளர்கள் அணியில் இருந்து பெரும் எண்ணிக்கையில்  பெண்கள் வெளியேறுகின்றனர். 55 முதல் 59 வயதினரில்,  பங்கெடுப்பு விகிதம் 10.13 சதவீதமாக உள்ளது.

கிராமப்புற பகுதிகளில், பெண்களின் பங்கெடுப்பு, பண நீக்கத்திற்கு முன்பு 16.4 சதவீதமாக இருந்து, பண நீக்கத்திற்கு பின்னர் 9.3 சதவீதமாக வீழ்ந்தது. இன்று இது 12.2 சதவீதமாக, 300 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. நகர்ப்புற பகுதிகளில், இதே கால கட்டத்தில் 670 அடிப்படை புள்ளிகள் உயர்ந்துள்ளது. 

முப்பது வயது குழுவினரில், பணியில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிரடியாக, 16 - 18 சதவீதத்தில் இருந்து, வெறும் 11 அல்லது 12 சதவீதமாக  குறைகிறது.


தமிழகத்தின் கதை 

தமிழகத்தின் எண்ணிக்கை, அனைத்து வயதுடைய குழுவினரிடமும் அதிகமாக, தொழிலாளர்களின் எண்ணிக்கையில், 20 - 24 வயதினரின் பங்களிப்பு 15.59  சதவீதமாக, தேசிய சாராசரியை விட அதிகமாக உள்ளது. 2019 செப்டம்பர் - டிசம்பர் காலகட்டத்தில், 40 - 44 வயதினரின் பங்கெடுப்பு மிக அதிகமாக இருந்தது.

இது தேசிய அளவிலான போக்குகளுக்கு முரணாக உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் பெண் தொழிலாளர்களின் பங்கெடுப்பு எப்போதும் அதிகமாக இருப்பதாக தமிழகத்தின் அடிமட்ட நிலையில் பணி புரியும் தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

“திருமணத்திற்கான செலவுகளை ஈட்டும் பொறுப்பு இளம்பெண்கள் வசம் அளிக்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறது. தங்களுக்கும், தங்களின் திருமணத்திற்கும் சேமிக்க வேண்டி, வேலையில் சேர வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது’’ என்று ரூட்ஸ் என்ற பெண்கள் அமைப்பை சேர்ந்த கல்பனா சதீஷ் கூறுகிறார்.

திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான இளம்பெண்கள் பணிபுரிகின்றனர். பெற்றோர்கள், தம் மகள்கள், திருமணத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி, பிற நகரங்களில் பெண்கள் தங்கும் விடுதிகளில் தங்கி, தமது வாழ்வாதாரத்திற்காகவும்,  உடன் பிறந்தவர்களை காப்பாற்றவும், வேலையில் சேருவதை பற்றி திறந்த மனம் கொண்டவர்களாக மாறியுள்ளனர். 

இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் சமூகத்தின் விளிம்பு நிலைகளில் (எஸ்.சி / எஸ்.டி / பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சமூகங்கள்) உள்ள பிரிவினரை சேர்ந்தவர்கள். தினமும் மூன்று வேளை உணவுக்கான பணத்தை ஈட்டுவதே பெரும் பாடாக உள்ளவர்கள். இதை வேலை அளிப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். 

திருமணத்திற்கு பின், இவர்களில் சுமார் 70 சதவீதத்தினர் வேலைக்கு செல்வதில்லை. அவர்களின் குடும்பத்தினர் இதை விரும்பாதது அல்லது குழந்தை வளர்ப்பு ஆகியவை இதற்கு காரணங்கள் ஆகும். எனவே பின் இருபது வயதில் இருப்பவர்களின் குழுமத்தில் வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது.

இது கிராமப்புற பகுதிகளுக்கு மிகவும் பொருந்தும் என்கிறார். அப்படி இருந்தும், தமிழகத்தின் எண்ணிக்கைகள், தேசிய சாராசரியை விட அதிகமாக உள்ளன. 

தொழிலாளர்கள் வர்க்கத்தில் சேரும் இளம் பெண்களுக்கு அடிமட்ட அளவில் எளிதாக வேலை கிடைக்கிறது. நிறுவனங்கள் இவர்களுக்கு பயிற்சி அளிப்பது  சுலபம் என்பதாலும், இளம் ஆண்களிடம் நிர்வாகத்திற்கு கீழ்ப்படிந்து நடத்தல் குறைவாகவும், தொழிற்சங்கங்களில் சேருதல் அதிகமாக இருப்பதாலும், அவர்களை  விட இளம்பெண்களை நிறுவனங்கள் அதிகமாக தேர்வு செய்கின்றன. பெண்களுக்கு அளிக்கப்படும் ஊதியமும் குறைவுதான்.

வேலை வாய்ப்புகள் இடத்தை பொறுத்தும், தொழில் துறையின் பிரிவுகளை பொறுத்தும் உருவாகும் என்று கேர் டி என்ற ஜவுளித்துறையில் பணியாற்றும்  நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.எம்.பிரித்விராஜ் கூறுகிறார். ஒரே தொழில் துறைக்குள் கூட, சில பணிகளில் பெண்களின் பங்கெடுப்பு மிக அதிகமாக இருக்கும்.

சில பிரிவுகள் திருமணமான பெண்களை பணியமர்த்தும். வேறு சில பிரிவுகள், திருமணமாகாத பெண்களை பணியமர்த்தும். 
அரசுத்துறை வேலைகளைப் போல, பிரசவ கால விடுப்பு மற்றும் இதர சலுகைகள் கிடைக்காததால், அமைப்பு சாரா, தனியார் துறைகளில் பணி புரியும் திருமணமான  பெண்களில் பெரும்பாலானவர்கள் வேலையை விட்டு விலகுகின்றனர். 

விவசாயத்திற்கு அடுத்து அதிக அளவில் வேலை வாய்ப்புகளை அளிக்கும் (தமிழகத்தில் 20 லட்சம் பேர்) ஜவுளித்துறையில், பெண்களின் பங்களிப்பு சுமார் 50  சதவீதமாக உள்ளது. ஆனால் இது திறன் மிகுந்த, சுமாரான திறன் கொண்ட, திறனற்ற வேலைகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பிரிவுகளில்தான் அதிகமாக உள்ளதாகவும், அதற்கு மேற்பட்ட வேலைகளில் இல்லை என்றும் கூறுகிறார்.

உதாரணமாக, தையல் நூல் தயாரிப்பு மற்றும் நூற்பாலை நிறுவனங்களில், சுமார் 75 சதவீத தொழிலாளர்கள் பெண்கள் தான்.
திருநெல்வேலியில் சுமார் ஏழு லட்சம் பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். “இளம்பெண்களின் பெற்றோர்களை இடைத்தரகர்கள் அணுகி, வேலைவாய்ப்புகள் பற்றி பேசுகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் தம் பெண்களை அனுப்ப முன்வருகின்றனர்’’ என்று பெண்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள்  மத்தியில் பணியாற்றும் நவஜீவன் அறக்கட்டளையை சேர்ந்த பி.நல சந்திர சேகரன் கூறுகிறார்.

மூன்று ஆண்டுகள் பணி புரிய ஒப்பந்தம் செய்யப்படும் பெண்களுக்கு, அதன் முடிவில் மொத்தமாக ரூ.50,000 அல்லது ரூ.75,000 அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, இதனுடன் கூடுதலாக தினப்படி கூலி, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை அளிக்கப்படுகின்றன. இது பல குடும்பங்களுக்கு இழக்க முடியாத வாய்ப்பாக உள்ளது. 

ஆனால் ஒரு பெண் தொடர்ந்து, இடை நிற்காமல், நிறுவனம் அளிக்கும் விடுமுறைகளை தவிர வேறு விடுப்பு எதுவும் எடுக்காமல் வேலை செய்தால் மட்டுமே  இந்த இறுதித் தொகை அளிக்கப்படுகிறது. 

உடல் நலக்குறைவினால் நடுவில் விடுப்பு எடுத்தால் கூட இது அளிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, 2 முதல் 3 சதவீத பெண்கள் மட்டுமே இந்த தொகையை பெறுகின்றனர். சில சமயங்களில்,  ஆண் மேற்பார்வையாளர்கள் அளிக்கும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டு, இறுதித் தொகையை பெற முயல்கின்றனர். 

இளம்பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வெங்காய ஏற்றுமதி நிறுவனங்களில் வேலையில் சேருகின்றனர் என்று பெண்களின்  கூட்டமைப்பை சேர்ந்த ஷீலு பிரான்சிஸ் கூறுகிறார். இவர்களில் பலரும் கல்வி கற்றவர்கள். வீட்டை விட்டு வெளியேறி, சுதந்திரமாக பணம் ஈட்ட விரும்புகின்றனர்.

“பொதுவாக அவர்கள் நகை கடைகள் மற்றும் துணி கடைகளில் பணிகளில் சேருகின்றனர். சில தொழிற்சாலைகளில், நாள் முழுவதும் சினிமா பாடல்கள்  ஒலிக்கப்பட அனுமதிக்கப்படுவதை அவர்கள் விரும்புகின்றனர்’’ என்கிறார். 

/ விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in