வீட்டுக்கொரு தேன்குடம் தந்த பாட்டுக் கலைஞன்


வீட்டுக்கொரு தேன்குடம் தந்த பாட்டுக் கலைஞன்
x
தினத்தந்தி 24 March 2020 4:41 AM GMT (Updated: 24 March 2020 4:41 AM GMT)

இன்று (மார்ச் 24-ந்தேதி) டி.எம்.சவுந்தரராஜன் பிறந்தநாள். ஓர் அரை நூற்றாண்டு காலம் தமிழர்களின் ஒவ்வொரு வீட்டு வாயிற்படியிலும் தினந்தோறும் ஒரு தேன்குடம் தந்துபோன கந்தர்வன் டி.எம்.சவுந்தரராஜன். அவர் காணக்கிடைக்காத ஒரு கான வியப்பு.

அப்பர் முதல் அருணகிரி வரை, மருதகாசி முதல் வைரமுத்து வரை, தண்ணீர்க் குடம் உடைவது முதல், தண்ணீர்க் குடம் உடைப்பது வரை பாடிக்கொடுத்த பாட்டுக் குயில். இசைகூட்டிய இன்றமிழை அழுதும் தொழுதும், குழைந்தும் குழைத்தும், கனிந்தும் கனன்றும், துணிந்தும் பணிந்தும் ஓதி ஓதி ஓங்கி உலகளந்த உத்தமப் பாடகன்.

ஆடிய தொட்டில்கள் தூங்கியதற்கும், அரசு கட்டில்கள் மாறியதற்கும், சவுந்தரராஜன் குரலுக்குப் பகிர முடியாத பங்கிருக்கிறது. சவுந்தரராஜனின் ஆறங்குல நாக்கு அரை நூற்றாண்டுக் காற்றைக் கட்டிப்போட்ட கயிறானது.

சங்கத்து மதுரையிலே பிறந்து, சாரங்கபாணி பாகவதரிடம் இசையூட்டம் பெற்று, குருநாதர் கோயில்தெரு பஜனைமடத்தில் கெஞ்சிக் கெஞ்சி வாய்ப்புப் பெற்றுப் பாடத் தொடங்கியபோது ‘பரவாயில்லையே... பையன் பாட்டு பாகவதர் மாதிரி இருக்கே’ என்று ஆங்காங்கே கேட்ட அசரீரியில் ஜென்மமே சிலிர்த்துப் போனது சிறுவன் சவுந்தரராஜனுக்கு.

எவர் பாட்டு தமிழ்நாட்டைப் பைத்தியமாய் அடித்திருந்ததோ, சவுந்தரராஜன் எவரைத் தன் இசையாசான் என்று எண்ணிப் பயின்றாரோ, அவர் அந்த பாகவதர் மதுரையில் மாமா அழகர்சாமி இல்லத்தில் எழுந்தருளியிருக்கிறார். சவுந்தரராஜன் ஓடிச்சென்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆண்களும் காதலிக்கும் அந்த அழகனை. அவர் பாடிய பாட்டை அவர் முன்பே பாடுகிறார்.

“என்னோடு வந்து விடுகிறாயா?” என்கிறார் இசையரசர். “இல்லை; யோசிக்க வேண்டும்” என்கிறார் இளவரசர். அந்த ஒற்றை முடிவுதான் சவுந்தரராஜனை சங்கீத அரசனாக்கியது. தியாகராஜ பாகவதரோடு சென்றிருந்தால் பாகவதரின் ஜவ்வாதுப் பொட்டோடு சேர்த்து சவுந்தரராஜனும் கரைத்துப் பூசப்பட்டிருப்பார்; தனித்துவம் கிட்டியிராது. ஆனால், அந்தத் தனித்துவம் அடைவதற்கு அந்த இசைக்காரன் பட்ட பாடு எழுதுந்தரமன்று.

இந்தச் சமூகம் வாய்ப்புத் தராது; ஆனால், உன் திறமையை நிரூபித்துக் காட்டு என்று வன்முறை செய்யும். நீர்நிலை காட்டாது; ஆனால், நீச்சலடித்துக் காட்டு என்று நிர்ப்பந்திக்கும்.

பானையாவதற்கு முன்னால் காலால் மிதிபடும் களிமண் மாதிரி, எல்லா வெற்றிகளும் அவமானங்களின் காலில் மிதிபட்டு வந்தவைதாம். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் முகாமிட்டு வாய்ப்புத் தேடிய வயதில் பி.யூ.சின்னப்பாவுக்கு பீடி வாங்கிக் கொடுத்ததையும், இயக்குனர் சுந்தர்ராவ் நட்கர்னியின் மனைவிக்கு மாவரைத்துக் கொடுத்ததையும், காற்றினிலே வரும் கீதம் புகழ் எஸ்.வி.வெங்கட்ராமன் வீட்டுக்கு கோபாலபுரத்தில் காய்கறிகள் வாங்கி வந்து வழங்கியதையும் அந்த மகா கலைஞன் ஒருபோதும் மறைத்ததில்லை.

தானும் பாகவதர் ஆகவேண்டும் என்ற கலை மையலின் காரணமாகத்தான் 28.3.1946-ல் தனது திருமண அழைப்பிதழிலேயே சுமத்திராவுக்கும் ‘சவுந்தரராஜ பாகவதரு’க்கும் என்று அச்சடித்திருந்தார் சவுந்தரராஜன்.

‘கிருஷ்ண விஜய’த்தில் முதல் பாட்டுக்கு வாய்ப்புக் கிட்டியது. “ராதை நீ என்னை விட்டுப் போகாதே” என்ற பல்லவியை பாகவதர் போலவே பாட முயன்றார் சவுந்தரராஜன். ஆனால், இரண்டரைக் கட்டையில் பாடியபோது பாட்டுக்குள் பாகவதர் வாசம் அடிக்கவில்லை. அதனால் அவர் மீண்டும் ஐந்து கட்டைக்குப் பாடி குருநாதரைக் கொண்டு வந்துவிட்டார். படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டு இசைத்தட்டில் இடம் பெறாததால் அது திரையரங்கைத் தாண்டித் தெருவின் காதில் விழவேயில்லை.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து அழைப்பு வந்தது. ஒலிபெருக்கி முன் நின்று “உபகாரம் செய்பவர்க்கே” என்று உச்சத் தானத்தில் ஓங்கித் தொடங்கினால், ‘இந்தப் பாடகரின் குரலில் பிசிரடிக்கிறது’ என்று ஓரங்கட்டப் பார்த்தார் ஒலிப்பதிவாளர். “அந்தப் பிசிர் கூட சங்கீதத்தில் ஓர் அழகு தானே” என்று காப்பாற்றிக் கரை சேர்த்தார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.

மீண்டும் இடைவெளி; மீண்டும் வாய்ப்புத் தேடல். ஒருவன் எழுவதையும் விழுவதையும் விதி என்கிறது சமூகம். ஆனால், அதை இயங்கியல் என்கிறது விஞ்ஞானம்.

கண்ணுக்குத் தெரியாத காரண காரியச் சேர்மானங்கள் மனிதக் காய்களை நகர்த்துகின்றன. “எட்டுப் பாட்டு; மொத்தம் இரண்டாயிரம் தருகிறோம்; பாட முடியுமா?” என்று திருச்சி லோகநாதனைக் கேட்கிறது அருணா பிலிம்ஸ் அலுவலகம். “இந்த அற்பத் தொகைக்கு நான் பாட மாட்டேன்; சொற்பத் தொகைக்குப் பாட வேண்டுமென்றால் மதுரைக்காரப் பையன் ஒருவன் புதிதாக வந்திருக்கிறான்; அவனைப் பாட வையுங்கள்” என்று கலைக்கர்வம் காட்டுகிறார் திருச்சி லோகநாதன்.

அவ்வளவுதான்; திறந்தன திசையின் கதவும் இசையின் கதவும். ‘தூக்குத் தூக்கி’யின் பாடல்களைக் கேட்டு ஒலிப்பதிவுக் கூடம் தலைசுற்றிப் போனது. படப்பிடிப்பின் இடைவேளையில் பாடல்களைக் கேட்கவந்த நடிகர் திலகம், ‘இவர்தான் இனி எனக்கு எல்லாப் பாட்டும்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். படம் தலைதெறிக்க ஓடிற்று. “ஏறாத மலைதனிலே” ஏறிநின்ற சவுந்தரராஜனை எம்.ஜி.ஆரின் உளவுச் செவிகள் கவனிக்கத் தவறவில்லை. ஞாபகத்தின் தோள்களில் சுமந்திருந்த சவுந்தரராஜனை எம்.எஸ்.சுப்பையா நாயுடுவிடம் இறக்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ பாடலின் அந்த ஆலாபனையிலேயே ஆகாயம் அதிர்ந்தது. திரையுலகத்தையும், திராவிடர் உலகத்தையும் எம்.ஜி.ஆரின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதற்கான திருப்பள்ளி எழுச்சி சவுந்தரராஜனால் இப்படித்தான் சம்பவித்தது.

1952 முதல் 58 வரையிலான ஏழாண்டுகள் தமிழ்த் திரையுலகம் மடைமாறிய காலங்கள். பழையன கழிந்து, புதியன புகுந்து, புதுமைகள் பொலிந்து அடுத்த கால்நூற்றாண்டுப் பயணத்திற்கான கலையூட்டம் பெற்ற காலம் அது.

மலைக்கள்ளன்(1954), குலேபகாவலி(1955), மதுரைவீரன்(1956), தாய்க்குப்பின் தாரம்(1956), மகாதேவி(1957), நாடோடி மன்னன்(1958) போன்ற ஏறுமுகப் படங்கள் எம்ஜிஆருக்கு ஏணி தந்தன.

தூக்குத் தூக்கி(1954), நான் பெற்ற செல்வம்(1956), அம்பிகாபதி(1957), தங்கமலை ரகசியம்(1957) உத்தமபுத்திரன்(1958), வீரபாண்டிய கட்டபொம்மன்(1958) போன்ற படங்கள் சிவாஜிக்குச் சிறகு கட்டின. இந்த இரண்டுபேரும் உச்சம் தொடுவதற்குத் தன் உயிர்க் காற்றை ஊதிக் கொடுத்தார் சவுந்தரராஜன்.

சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, கண்டசாலா, எஸ்.சி.கிருஷ்ணன், பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று எல்லாப் பாடகர்களுக்கும் நாற்காலி கொடுத்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும், சவுந்தரராஜனுக்கு மட்டும் ஒரே ஒரு சிம்மாசனம் போட்டு உட்கார வைத்தார்கள்.

1960 வரைக்கும் சவுந்தரராஜனைப் பிடித்திருந்த பாகவதர் பைத்தியம் கலையவே இல்லை. பாடலின் எங்கேனும் ஓரிடத்தில் பாகவதரின் கள்ளக் கையெழுத்திடாமல் கலைசெய்ய முடியவில்லை. சவுந்தரராஜனின் குரலில் ஓடிய பாகவதர் இழையை விஸ்வநாதன்தான் துணிந்து துடைத்தெறிந்தார். ‘பாவ மன்னிப்பு’க்குப் பிறகு பாகவதர் கழிந்த சவுந்தரராஜனைப் பாட்டுலகம் பார்த்தது. அதுவரை இல்லாத புத்திளமை அவர் குரலில் குடியேறியது. காதலிக்கும் ஓடையிலும், கல்யாண மேடையிலும், தூளிகள் ஆடையிலும் தூக்கிச் செல்லும் பாடையிலும், தமிழர் வாழ்வியல் மீது சவுந்தரராஜனின் ஆதிக்கம் ஆரம்பித்தது. கண்ணதாசனின் தமிழ்க்கொடி பறந்தது.

1960களின் ‘பா’ வரிசைப் படங்களில் சிவாஜிக்கும், ‘தா’ வரிசைப் படங்களில் எம்.ஜி.ஆருக்கும் தானன்றி இன்னொருவர் இல்லை என்ற தவிர்க்கமுடியாத பாடகரானார். ஒரு பாடலைப் பாடும்போது தனக்குள் இருந்த நடிகன், மனிதன், கலைஞன், காதலன், தகப்பன், சகோதரன் என்ற எல்லாரையும் தேவைப்பட்ட அளவுக்கு எழுப்பிக் கொள்ளும் திறம் சவுந்தரராஜனுக்கு மட்டுமே வாய்த்த தனி வரம்.

அண்ணன் காட்டிய வழியம்மா(படித்தால் மட்டும் போதுமா), ஏன் பிறந்தாய் மகனே(பாகப்பிரிவினை) போன்ற பாடல்களின் உள்ளார்ந்த கதறல், அச்சம் என்பது மடமையடா(மன்னாதி மன்னன்) பாடலில் வினைப்படும் வீரம், வீடுவரை உறவு(பாத காணிக்கை) பாடலில் வெளிப்படும் சித்தர் சித்தம், பாவாடை தாவணியில் பார்த்த உருவமா(நிச்சய தாம்பூலம்) பாடலில் காணக்கிடைக்கும் காதல் கசிவு, “சவுந்தரராஜன் உயரத்திற்குப் பாடினால் நான் செத்துவிடுவேன்” என்று முகமது ரபியை மூர்ச்சைக்கு உள்ளாக்கிய தூங்காதே தம்பி தூங்காதே(நாடோடி மன்னன்) பாடலின் உச்சத் தொனி, வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது(சிவகங்கைச் சீமை) பாடலில் வீசிய இனமானத் தணல், சிந்தனை செய் மனமே(அம்பிகாபதி) பாடலின் தியானத் திளைப்பு, நான் ஆணையிட்டால்(எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் அரசியல் ஆவேசம், எரிமலை எப்படிப் பொறுக்கும்(சிவப்பு மல்லி) பாடலின் பொதுவுடைமைப் பேரோசை, ஏரிக்கரையின் மேலே(முதலாளி) பாடலின் ஆரபி ஆலோலம், யார் அந்த நிலவு(சாந்தி) பாடலின் உள்ளடங்கிய உரையாடல், ஓடும் மேகங்களே(ஆயிரத்தில் ஒருவன்) பாடலில் சில்லிட்டுக் கிடக்கும் சிருங்காரத் துயரம் எல்லாம் சவுந்தரராஜன் காற்றில் எழுதிய கல்வெட்டுகள்.

சாவற்ற பெருங்கலைஞர் சவுந்தரராஜன். தனக்குப் பட்டாடை நெய்வதற்காகக் கூர்ஜரத்திலிருந்து சவுராஷ்டிர மக்களைக் கொண்டு வந்து கோவிலைச் சுற்றிக் குடியமர்த்தினான் மன்னன் திருமலை. அவர்கள் நெய்த பட்டாடையை மன்னன் அணிந்து கொண்டான். ஆனால், அதே சமூகத்தைச் சேர்ந்த டி.எம்.எஸ் தயாரித்த பாட்டாடையைத் தமிழ்த்தாய் தரித்துக்கொண்டாள். திருமலை மன்னன் தரித்தது நைந்து போவது; தமிழ்த்தாய் தரித்தது நையாதது மற்றும் பொய்யாதது.

 - கவிஞர் வைரமுத்து

Next Story