சிறப்புக் கட்டுரைகள்

லிட்டில் மாஸ்டர்ஸ்..! + "||" + Little Masters ..! ßrivisagan and sriharini

லிட்டில் மாஸ்டர்ஸ்..!

லிட்டில் மாஸ்டர்ஸ்..!
கொரோனா ஊரடங்கால் வீட்டிற் குள் முடங்கி இருக்கும் குழந்தைகளுக்கு, காரைக்காலைச் சேர்ந்த 10 வயது இரட்டையர்கள் வீடியோக்கள் மூலம் தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்கிறார் கள். யார் இவர்கள்?, வீடியோ மூலம் தற்காப்பு பயிற்சி அளிப்பதன் நோக்கம் என்ன? போன்ற கேள்வி களோடு அவர்களை தொடர்பு கொண் டோம். நம்முடைய கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தார்கள்.
“நானும், என் தங்கை ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள். 3 வயதில் இருந்தே தற்காப்பு கலையை ஆர்வமாக பயின்று வருகிறோம். கடின பயிற்சி மற்றும் விடாமுயற்சியினால் 9 வயதிலேயே கராத்தே கலையில் இரண்டு ‘பிளாக் பெல்ட்’ வென்ற இரட்டையர்கள் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறோம்.

பெற்றோரின் அரவணைப்பும், மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமாரின் பயிற்சியும் தற்காப்பு கலையில் சிறப்புமிக்கவர்களாக எங்களை மாற்றி இருக்கிறது. மாநில, தேசிய அளவில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று, பல பட்டங்களை வென்றிருக்கிறோம். இனி வரவிருக்கும் போட்டிகளுக்காகவும் தயாராகி வருகிறோம்” என்று தன்னை பற்றியும், தன் தங்கை பற்றியும் பொறுப்பாக அறிமுகப்படுத்தி கொண்டான், ஸ்ரீவிசாகன். அடுத்து ஸ்ரீஹரிணி பேசினாள்.

“தற்காப்பு பயிற்சியும், தற்காப்பு போட்டிகளும்தான் எங்களை உற்சாகமாக இயங்க செய்கிறது. நினைவு தெரிந்த வயதில் இருந்தே தற்காப்பு கலை எங்களோடு வளர்ந்து வருகிறது. கராத்தே, குங்பூ, சிலம்பம், குத்துச்சண்டை, சுருள் வாள், வாள் பயிற்சி, நுங்சாக்... என பல்வேறு தற்காப்பு பயிற்சிகளை பயின்றிருக்கிறோம். இதில் பெரும்பாலான கலைகளில், பல பரிசுகளையும் வென்றிருக் கிறோம்” என்றாள்.வீடு நிறைய பரிசு கோப்பைகளை நிரப்பி வைத்திருக்கும் இந்த சாதனை இரட்டையர்களிடம், தற்காப்பு பயிற்சி வீடியோக்களின் அவசியம் பற்றி கேட்டோம். அதற்கு அவர்கள் பதிலளித்தனர்.

“கொரோனா ஊரடங்கு சில பெரியவர்களையும், குழந்தைகளையும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலர் யூ-டியூப் வீடியோக் களை பார்த்து சமைக்கிறார்கள். சிலர் படிக்கிறார் கள். பல விஷயங் களை பழகுகிறார் கள். அந்தவகையில் தற்காப்பு கலைகள் பழக ஆசையாக இருக்கும் குழந்தைகளுக்கு உதவி யாகவே, தற்காப்பு பயிற்சி வீடியோக்களை உருவாக்கினோம்.

நானும், தங்கையும் கராத்தே, குங்பூ, சிலம்பம் பயிற்சிகளை மேற்கொள்ள, தந்தை முருகானந்தம் வீடியோவாக பதிவு செய்கிறார். அது வாட்ஸ் அப், பேஸ்புக், யூ-டியூப் வழியாக பரவ தொடங்கி, இன்று எங்களது பயிற்சி வீடியோக்களின் மூலம் பல குழந்தைகள் கராத்தே பயிற்சி பெறுகிறார்கள். நாங்களும் புதுமையான பயிற்சி வீடியோக்களை உருவாக்கி, இணையதளத்தில் பதிவேற்றுகிறோம்” என்றார்கள்.

தற்காப்பு கலையில் பட்டையை கிளப்பும் இரட்டையர்கள், பள்ளி படிப்பிலும் அசத்து கிறார்கள். தற்காப்பு பயிற்சிகள் ஒருபக்கம், வீடியோ தயாரிப்பு மறுபக்கம் என பிசியாக இருந்தாலும், ஆன்லைன் வகுப்புகளிலும் ஆர்வமாக படிக்கிறார்கள்.

இவர்கள் தற்காப்பு கலைகள் மட்டுமின்றி, பாரம்பரிய விளையாட்டுகள் சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள். இதுபற்றி இரட்டையர்களின் தந்தை முருகானந்தம் கூறுகிறார்.

“பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், சில்லுக்கோடு, தட்டாமலை, பூப்பறிக்க வருகிறோம், பச்சை குதிரை, பம்பரம், கிட்டிப்புள்... என பல பாரம்பரிய விளையாட்டுகளின் நுட்பங்களை வயதான பாட்டியிடம் இருந்து கேட்டறிந்தார்கள். பிரபலமில்லாத பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அதனால், பாரம்பரிய விளையாட்டுகளை வீடியோவாக மாற்றி, அதை பதிவேற்றும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர். பிள்ளைகளை விளையாட்டு துறையில் சாதனையாளர்களாக மாற்றுவதுதான் என் ஆசை. தற்காப்பு பயிற்சி திட்டமிடுதலை நான் பார்த்து கொள்கிறேன். படிப்பு சம்பந்தமான விஷயங்களை என் மனைவி பிரியா கவனித்து கொள்கிறார்” என்றார்.