சிறப்புக் கட்டுரைகள்

நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது + "||" + Grand Ceremony For Ayodhya Ram Temple Today, PM To Attend

நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது

நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது
அயோத்தியில், சர்ச்சைக்கிடமான இடத்தை ராமஜென்மபூமி நியாசுக்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்த பிறகு, சர்ச்சை முடிவுக்கு வந்து இருக்கிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுமா?

- இது உலகமெங்கும் வாழுகிற இந்துக்களின் கனவாக இருந்தது. இந்த கனவு நனவாக வழக்குகள் சீன பெருஞ்சுவர் போல தடையாக இருந்தன.

அயோத்தியில், சர்ச்சைக்கிடமான இடத்தை ராமஜென்மபூமி நியாசுக்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்த பிறகு, சர்ச்சை முடிவுக்கு வந்து இருக்கிறது.

90 ஆண்டு காலம் ஆங்கிலேயர் ஆட்சியிலும், 70 ஆண்டு காலம் சுதந்திர இந்தியாவிலும் நடந்த சட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

அதன் சுருக்கமான வரலாற்று பதிவு இது:

1857 : அன்றைய பைசாபாத் மாவட்டத்தின் அங்கமாக அயோத்தி இருந்தது. பைசாபாத் மாஜிஸ்திரேட்டு முன்பாக பாபர் மசூதியின் மத குரு மவுலவி முகமது அஸ்கார் ஒரு வழக்கு தொடுத்தார். பாபர் மசூதியின் முற்றத்தை அனுமன் கர்ஹி மகந்த் பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டார் என்பதே வழக்கு.

1859 : ஆங்கிலேய அரசாங்கம் இதில் முதன்முதலாக தலையிட்டது. அப்போது முஸ்லிம்கள், இந்துக்கள் வழிபாட்டு தலங்களை பிரிக்கும் வகையில் அரசு நிர்வாகம் ஒரு சுவர் கட்டியது. இந்துக்கள் கிழக்கு வாசல் வழியாகவும், முஸ்லிம்கள் வடக்கு வாசல் வழியாகவும் தத்தமது வழிபாட்டு தலங்களுக்கு சென்றனர்.

1860-1884 : முந்தைய வழக்கு போன்ற வழக்குகளை முஸ்லிம்கள் தொடுத்தனர். நிலத்தை சட்ட விரோதமாக உள்ளூர் ஜீயர்களும், சாதுக்களும் ஆக்கிரமிப்பதாக வழக்குகளில் புகார் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.

1885 : கிழக்கு முற்றத்தில் உள்ள உயர்த்தப்பட்ட மேடை(சபுதாரா) ராமரின் பிறப்பிடம் என்றும், அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி கோரியும், ராமர் பிறப்பிடத்தின் மகந்த் என்று அழைக்கப்பட்ட ரகுபர்தாஸ் என்பவர் வழக்கு தொடுத்தார்.

1886: ரகுபர்தாஸ் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதை ஒரு இந்து-முஸ்லிம் பிரச்சினை என பார்க்கத்தொடங்கினர்.

1870-1923 : சர்ச்சை மேலும் பரவியது. இதை அப்போது வெளியான அரசு கெஜட்டுகள் பதிவு செய்தன. மசூதியின் பிரதான நுழைவாயிலில் எண்.1, ராம ஜென்மபூமி என்ற கல்வெட்டு வைக்கப்பட்டது.

சுதந்திரத்துக்கு பின்னர் இந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்தது.

1949 டிசம்பர் 22, 23: நள்ளிரவில் ராமர், லட்சுமணர் சிலைகள் வைக்கப்பட்டன. மக்கள் கூடினர். அங்கு பக்திப் பாடல்கள் பாடப்பட்டன.

1949 டிசம்பர் 29 : பைசாபாத் கோர்ட்டு, பாபர் மசூதி சர்ச்சைக்குரிய சொத்து என்று அறிவித்தது. அப்போதைய நிலை அப்படியே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மசூதிக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரதான வாயில் பூட்டப்பட்டது. பக்க வாயிலில் இருந்து இந்துக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. சிலைகளுக்கு பூஜை செய்ய 4 பூசாரிகள் நியமிக்கப்பட்டனர்.

1950 ஜனவரி 16 : இந்து மகாசபாவின் உறுப்பினர் கோபால் சிங் விஷாரத் சிவில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் தடங்கல் இல்லாமல் வழிபாட்டுக்கு அனுமதி கோரி இருந்தார். சிலைகளை அகற்ற நிரந்தர தடை கேட்டார்.

1959 : நிர்மோஹி அகாரா ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அது மசூதி அல்ல, அது கோவில் என்பதால் முழு கட்டமைப்பையும் அதற்கு மாற்ற வேண்டும் என்று கோரி இருந்தார்.

1961 டிசம்பர் 18 : சன்னி மத்திய வக்பு வாரியம் ஒரு வழக்கு தொடுத்தது. அதில் பாபர் மசூதியை தங்களிடம் ஒப்படைக்க கோரி இருந்தது.

1986 பிப்ரவரி : பாபர் மசூதி பூட்டுகள், பைசாபாத் கோர்ட்டு உத்தரவால் திறக்கப்பட்டன.

1987 : பைசாபாத் கோர்ட்டில் இருந்த வழக்குகள் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வுக்கு மாற்றப்பட்டன. விஷாரத் தாக்கல் செய்த வழக்கு முதல் வழக்கு ஆனது. ராமச்சந்திர பரமஹன்ஸ் வழக்கு 2-ம் வழக்கு ஆனது. நிர்மோஹி அகாரா வழக்கு 3-ம் வழக்கு. வக்பு வாரியத்தின் வழக்கு 4-ம் வழக்கு.

1989 : ராம் லல்லா (குழந்தை ராமர்) வழக்கின் ஒரு தரப்பு ஆனார். 5-வது வழக்கு, ராம் லல்லாவின் சகா என்ற பெயரில் தியோகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த வழக்கு ஆகும்.


1992 டிசம்பர் 6: ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கர சேவகர்களுக்கு எதிராக முதல் வழக்கும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், டால்மியா, வினய் கட்டியார், சாத்வி ரதம்பரா ஆகியோருக்கு எதிராக 2-வது வழக்கும் பதிவாகின.

1992 டிசம்பர் 16 : பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வுகள் தொடர்பான உண்மைகள், சூழ்நிலைகள் குறித்து ஆராய நீதிபதி லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது.

1993 ஜனவரி 7 : பிரச்சினைக்குரிய இடத்தை சுற்றிலும் அமைந்துள்ள இடத்தை கையகப்படுத்த ஜனாதிபதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தார். அது பின்னாளில் சட்டமானது.

1993-2002 : அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் சொத்து உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நடந்தது.

2002 ஆகஸ்டு 1: இடிக்கப்பட்ட இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்த இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்புக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

2002 டிசம்பர்- 2003 ஆகஸ்டு : டிசம்பர் 30-ந் தேதி தொல்பொருள் ஆராய்ச்சி தொடங்கியது.

2003 ஆகஸ்டு : ஐகோர்ட்டில் தொல் பொருள் ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பும், மேல்முறையீடும்...

2010 செப்டம்பர் 30 : அலகாபாத் ஐகோர்ட்டு சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமை பற்றிய தீர்ப்பை வழங்கியது. இதில் சன்னிவக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம்லல்லா ஆகியோர் சர்ச்சைக்குரிய இடத்தை சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதே தீர்ப்பு. ஆனால் முத்தரப்பும் தீர்ப்பில் திருப்தி அடையவில்லை.

2011 மே 9 : ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். பின்னர் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

2017-2019 : சுப்ரீம் கோர்ட்டில் முதலில், தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவும், பின்னர் ரஞ்சன் கோகாயும் அயோத்தி வழக்கில் கவனம் செலுத்தினர். 2018-ல் தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றார்.

2018: அக்டோபரில் ரஞ்சன் கோகாய், தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதும், அயோத்தி வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க விருப்பம் தெரிவித்தார்.

2019 ஜனவரி : அயோத்தி வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

2019 மார்ச் : கோர்ட்டுக்கு வெளியே பிரச்சினைக்கு தீர்வு காண முன்னாள் நீதிபதி எப்.எம். கலிபுல்லா, வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் தலைமையில் சமரச குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.

2019 ஆகஸ்டு : ஆகஸ்டு 2-ந் தேதியன்று, சமரச ஒப்பந்தம் ஏற்படுத்த முடியவில்லை என்று சமரச குழு, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை அளித்தது. அதைத் தொடர்ந்து 6-ந் தேதி முதல் இந்த வழக்கில் தினசரி விசாரணை என அறிவிக்கப்பட்டது.

2019 அக்டோபர் 16 : ஆகஸ்டு 6-ந் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடந்து முடிந்தது. முத்தரப்பும் தங்கள் தரப்பு எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்தன.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

2019 நவம்பர் 9: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நசீர், அசோக் பூஷண் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை அளித்தது. ஒருமனதாக அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும், இதை மேற்பார்வையிட மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

2020 ஆகஸ்டு 5: இன்று அயோத்தியில் ராமர்கோவிலுக்கு பூமி பூஜை போடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொள்கிறார். இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் என்ற இந்துக்களின் கனவு நனவாக அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய சரித்திரம் உருவாகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு: அத்வானி வழக்கில் தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்க ஒரு மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு - 2 ஏக்கர் நிலம் ஒதுக்க உ.பி. முதல்-மந்திரிக்கு எடியூரப்பா கடிதம்
அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரும்படி உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு, எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார்.
3. நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
ராமர் கோவில் கட்டப்படுவதன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
4. அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது - பிரதமர் மோடி பங்கேற்பு
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வருகிறது.
5. விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி:பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு யோகி ஆதித்யநாத், உமா பாரதி வருகை
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இடத்திற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...