அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?


அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?
x
தினத்தந்தி 6 Aug 2020 8:25 AM GMT (Updated: 6 Aug 2020 8:25 AM GMT)

வேதியியல் பெயரில் NH4NO3 என்று அழைக்கப்படும் அம்மோனியம் நைட்ரேட் இயற்கையாக கிடைக்கக் கூடியதாகும்.

பெய்ரூட்,

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 135 பேர் பலியாகினர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன?

உலக நாடுகளை உலுக்கிய அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன ? அது ஏன் ஆபத்தானதாக அறியப்படுகிறது என்ற விவரத்தை காணலாம். அமோனியம் நைட்ரேட் உரங்கள் தயாரிக்கவே அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.  மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய அமில பொருள் என இது கூறப்படுகிறது.  வேதியியல் பெயரில் NH4NO3 என்று அழைக்கப்படும் அம்மோனியம் நைட்ரேட் இயற்கையாக கிடைக்கக் கூடியதாகும். இது அம்மோனியம் நேர்மின் அயனின் நைட்ரேட் உப்பாகி ஒரு வேதி சேர்மத்தில் உருவாகிறது. இது நீரில் எளிதில் கரையக் கூடிய தன்மைக் கொண்டுள்ளது.பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கையாகவும் அமோனியம் நைட்ரேட் உருவாக்கப்படுகிறது.

வெடிக்க காரணம் என்ன?

பயிர்கள் செழித்து வளர அமோனியம் நைட்ரேட் உரப்பொருளாக பயன்படுத்தப்படும் அதேவேளையில் பாறைகளை உடைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு எரிபொருளும் வெடிக்க குறிப்பிட்ட சில காரணங்கள் தேவை. அதே விதிதான் அமோனியம் நைட்ரேட்டுக்கும் பொருந்தும். அமோனியம் நைட்ரேட் மிகவும் ஆற்றல் கொண்டது. இது அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அம்மோனியம் நைட்ரேட் இருந்தால் அது தீப்பிழம்பு போன்று வெளிப்புற வினைகள் பயன்படாமல் நெருப்பை வெளியிடுகிறது.அமோனியம் நைட்ரேட்டில் இருந்து  ஆக்ஸிஜன் வெளியாகும் வாய்ப்பு உள்ளதால், கொழுந்து விட்டு எரிவதற்கு வசதியாக உள்ளது.  பயங்கரவாதிகளும் தங்கள் தாக்குதல்களுக்கு  அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தும் போக்கு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு நடந்த அமோனியம் நைட்ரேட் விபத்து

1921 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அமோனியம் நைட்ரேட் வெடி பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 500 பேர் பலியாகினர்.

அமெரிக்காவில் 1947 ஆம் ஆண்டு டெக்ஸாஸ் மாகணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அமோனியம் நைட்ரேட் வெடித்தது. இதில் 581 பேர் பலியாகினர்.

கடந்த 2015- ஆம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில்  நடைபெற்ற விபத்தில் அமோனியம் நைட்ரேட்  உள்பட வேதிப்பொருள் வெடித்தது. இதில் 173 பேர் பலியாகினர்.


Next Story