தொடர் நாயகன் விருது: கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா!


தொடர் நாயகன் விருது: கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா!
x
தினத்தந்தி 8 Dec 2020 4:21 PM GMT (Updated: 8 Dec 2020 4:21 PM GMT)

தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன் தான் என அவர் கையில் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா!

சிட்னி,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்று வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில்  நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் இன்று  நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு  செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச்  ரன் எதுவும் இன்றி நடையைக் கட்டினார்.  மற்றொரு துவக்க வீரரான மேத்யூ வேட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஸ்மித் 24 ரன்களில் வெளியேறினார். பின்னர் கிளென் மேக்ஸ்வெல் உடன் ஜோடி சேர்ந்த வேட் இந்திய அணியின் பந்து வீச்சை விளாசித்தள்ளினார். 53- பந்துகளில் 7 பவுண்டரிகள்,  2 சிக்சர்கள் உள்பட 80 ரன்கள் அடித்த நிலையில், வேட் ஆட்டமிழந்தார்.  மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 54 ரன்களில் நடராஜன் பந்தில் வெளியேறினார்.  ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186- ரன்கள் எடுத்தது.  இதையடுத்து, 187-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. 

இந்திய அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய  கேப்டன் விராட் கோலி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் மறு முனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஷிகர் தவான் ( 28 ரன்கள்), சஞ்சு சாம்சன் (10 ரன்கள்) ஷ்ரேயாஸ் ஐயர் (0) ஹர்திக் பாண்ட்யா (20 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், விராட் கோலி தனி ஒருவராக வெற்றிக்கு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிரடியாக ஆடி வந்த விராட் கோலி 18.1 ஓவரில் 85 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 61 பந்துகளை சந்தித்த விராட் கோலி 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசினார். விராட் கோலி ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் வெற்றிக்கனவும் தகர்ந்து போனது. 

20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியால் 174 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20  ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.  நடராஜன், ஷர்துல் தலா ஒரு விக்கெட்டையும், சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், 20 ஓவர்  தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதன் பிறகு சோனி தொலைக்காட்சியில் தொடர் குறித்த தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார்.

அப்போது அவர், "ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது முதலாவது பயணத்தின் எதிர்பார்ப்பு குறித்து  நடராஜனிடம் கேட்டபோது, "நான் எதுவும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். நான் நெட் பவுலராகவே வந்தேன். என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது. சக வீரர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர். என்னை எல்லோரும் ஊக்குவித்தனர். அது எனக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

நான் எனது யார்க்கர் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன். விக்கெட்டுக்கு ஏற்றாற்போல கேப்டனிடம் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என ஆலோசனை கேட்பேன். கேப்டன், கீப்பர் சொல்வது போல செயல்பட்டேன். முழு ஈடுபாட்டுடன் எனது திறமையை வெளிப்படுத்தினேன். வேறு மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஐபிஎல் தொடரில் எப்படி ஆடினேனோ அதுபோலவே இங்கேயும் ஆடினேன்" என்று கூறினார் நடராஜன்.

நான் சின்ன வயதில் இருந்து விக்கெட் எடுத்தால் கத்தும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை. மிக ஆக்ரோஷமாக கத்துவது எனக்கு வராது. ஒரு புன்னகை செய்து விட்டு நகர்ந்து விடுவேன். ஆரம்பத்தில் இருந்தே நான் அப்படித்தான் என்று தனது இயல்பான புன்னகை மாறாமல் தமிழிலேயே தனது பேட்டியை நிறைவு செய்தார் நடராஜன்.

இந்த் போட்டியில் தோனி சாதனையை கோலி முறியடிக்க தவறினாலும் வேறெந்த இந்திய கேப்டனும் சாதிக்காத ஒருவிஷயத்தை சாதித்திருக்கிறார். 

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்  என மூன்று பார்மெட்டிலும் தொடரை வென்ற  ஒரே  இந்திய கேப்டன் கோலிதான். சர்வதேச அளவில் இதை இரண்டு கேப்டன்கள் மட்டுமே சாதித்திருக்கிறார்கள். ஒருவர் டு பிளசிஸ், இன்னொருவர் விராட் கோலி. 

Next Story