உலகளாவிய கொரோனா தடுப்பூசி உற்பத்தி கூடமாக மாறும் ஐதராபாத்; 5 நிறுவனங்கள் தீவிர முயற்சி


உலகளாவிய கொரோனா தடுப்பூசி உற்பத்தி கூடமாக மாறும் ஐதராபாத்; 5 நிறுவனங்கள் தீவிர முயற்சி
x
தினத்தந்தி 28 Dec 2020 1:11 AM GMT (Updated: 28 Dec 2020 1:11 AM GMT)

கொரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய உற்பத்தி கூடமாக ஐதராபாத் உருமாறி வருகிறது. அங்கு 5 நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

ஐதராபாத், 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக முடிவடையாத நிலையில், புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத், கொரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய உற்பத்தி கூடமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான மீட்பராக மாறப்போகிறது. அந்த அளவுக்கு 5 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஐதராபாத்தில் ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த நிறுவனத்துக்குத்தான் பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தியின் முன்னேற்றத்தை கேட்டறிந்தார். 60-க்கு மேற்பட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் தனியாக பார்வையிட்டனர். அதிலிருந்து ஐதராபாத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

பயாலஜிக்கல் இ லிமிடெட் என்ற மற்றொரு ஐதராபாத் நிறுவனம், ஜான்சென் பார்மசூட்டிக்கல் என்வி என்ற நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன் பரிசோதனை நடந்து வருகிறது. அரவிந்தோ பார்மா என்ற ஐதராபாத் நிறுவனம், கொரோனா உள்பட பல்வேறு வைரஸ்களை குணப்படுத்தும் தடுப்பூசிகள் உற்பத்திக்காக ரூ.275 கோடி முதலீடு செய்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெடீஸ் லேப்ஸ் நிறுவனம், ரஷிய தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கும், இந்தியாவில் 10 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிப்பதற்கும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஹீட்டரோ என்ற ஐதராபாத் நிறுவனமும் ஸ்புட்னிக் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதுதவிர, ஐதராபாத் நிறுவனங்கள் கொரோனாவுக்கான மருந்துகளான ரெம்டெசிவிர், பேவிபிரவீர் ஆகியவற்றுக்கான மூலப்பொருட்களையும், செய்முறைகளையும் அளித்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

அத்துடன், ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Next Story