சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதற்கான காரணங்கள் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம் + "||" + Two reasons why India's Covid-19 fatality is lower: younger

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதற்கான காரணங்கள் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதற்கான காரணங்கள் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
இந்தியாவில் கொரோனா தொற்று சரிந்து வருவதற்கான காரணங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.
புதுடெல்லி, 

உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று இன்னும் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னும் கொரோனாவின் முன் மண்டியிட்டே கிடக்கின்றன.

அதேநேரம் இந்தியாவோ கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இங்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வெறும் 16,504 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் 16-ந்தேதி கண்டறியப்பட்ட (97,894 பேர்) பாதிப்பை ஒப்பிடுகையில், இது சுமார் 6 மடங்கு குறைவாகும்.

35 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட வல்லரசான அமெரிக்காவிலேயே 2 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அதில் 3½ லட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 1.03 கோடி பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, சுமார் 1½ லட்சம் பேர் மடிந்திருக்கிறார்கள்.

இப்படி உயிர்க்கொல்லி கொரோனா இந்தியாவில் தனது பிடியை இழக்கும் காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் கண்டறியப்பட்ட முடிவுகளின்படி அவர்கள் பல்வேறு காரணிகளை அடுக்கி உள்ளனர்.

இதில் முக்கியமாக, ‘மந்தை நோய் எதிர்ப்பு சக்தி’, ‘இந்தியாவின் இளமையான மக்கள் தொகை’ ஆகிய 2 காரணங்களை அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து அசோகா பல்கலைக்கழக உயிர் அறிவியல் துறை இயக்குனர் ஷாகித் ஜமீல் கூறும்போது, ‘கொரோனா தொற்று பாதித்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவல்ல, ஆனால் இந்த சரிவு முக்கியமானது. இதில் தேசிய விகிதத்தை டெல்லியின் பாதிப்பு விகிதமும் எதிரொலிக்கிறது. அங்கு நேற்று வெறும் 384 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த 7 மாதங்களில் கண்டறியப்பட்ட மிகக்குறைந்த இந்த எண்ணிக்கை, மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதற்கான நம்பிக்கையை அதிகரிக்கிறது’ என்று கூறினார்.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது, தொற்று நோய்க்கு எதிரான ஒரு மறைமுக பாதுகாப்பு வடிவமாகும். அதாவது மக்கள் தொகையில் போதுமான சதவீதத்தினர் நோய் தொற்றுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவர்களாக மாறும்போது இந்த கூட்டு எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

பிரபல நோயெதிர்ப்பு நிபுணர் சத்யஜித் ராத் கூறுகையில், ‘நாட்டின் தொற்று சராசரி பல உள்ளூர் மயமாக்கப்பட்ட அதிகரிப்புகளை மறைக்கிறது, அது தொடரும். நோய்த்தொற்றின் பரவல் வீதம் குறைந்துவிடும். இதற்கு ஒரு சாத்தியமான விளக்கம் என்னவென்றால், முன்பு பரவலாக இருந்த நகர்ப்புற வட்டாரங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் பெரும்பாலும் நிறைவுற்றதாக இருக்கலாம். இது மந்தை நோய் எதிர்ப்பு சக்தியின் வடிவம் ஆகும்’ என்று தெரிவித்தார்.

வாஷிங்டனை சேர்ந்த நோய் இயக்கவியல் மைய நிறுவனர் லட்சுமிநாராயணன் கூறும்போது, ‘இந்தியா தனது இளமையான மக்கள் தொகையால் பாதுகாக்கப்படுகிறது. நாட்டின் 65 சதவீத மக்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். எனவே இந்த வயதினரிடம் தொற்று குறைந்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த பரவல் குறைந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

இதைப்போல இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை முடிவுற்றிருக்கிறதா? அல்லது 2-வது அலை ஒன்று இன்னும் வருமா? என்பது குறித்து கூறுவது கடினம் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், அது எவ்வளவு மக்கள் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்? என்பதை பொறுத்தே அமையும் எனவும் கூறியுள்ளனர்.

அந்தவகையில் தசரா முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலங்கள் மற்றும் பீகார் தேர்தல் களம் ஆகிய 2 முக்கியமான கட்டத்தை எத்தகைய ஏற்றமும் இன்றி இந்தியா கடந்து வந்திருப்பதாகவும், எனவே போதுமான பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் எனவும், இதற்கு மேல் 2-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் குறைவு எனவும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

எது எப்படியோ இந்தியாவில் கொரோனாவின் வீரியம் குறைந்து வருவது மட்டும் அனைத்து தரப்பினரும் ஏற்கும் ஒரு உண்மையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 4-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் 4-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.
2. புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் ஒருவரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
3. பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
4. அரியலூரில் 3 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.