பெருமை பேசும் ‘பொங்கல் படி’


பெருமை பேசும் ‘பொங்கல் படி’
x
தினத்தந்தி 15 Jan 2021 1:05 AM GMT (Updated: 15 Jan 2021 1:05 AM GMT)

தைத்திங்கள் முதல்நாள் உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த முதல் நெல்லை சமைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுகிறார்கள்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ ஆதாரமாக இருக்கும் பஞ்சபூதங்களை இயக்குகின்ற மிகப்பெரிய சக்தியாக சூரியன் விளங்குகிறது. அதனால் தான் தைத்திங்கள் முதல்நாள் உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த முதல் நெல்லை சமைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுகிறார்கள்.

பழங்காலத்தில் இருந்தே மக்கள் சூரியனை கடவுளாக வழிபட்டு வருகிறார்கள் என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. சூரியனுக்கு சில இடங்களில் கோவில்களும் கட்டப்பட்டு உள்ளது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் முதல் பாடலாக ‘ஞாயிறு போற்றுதும்’ என்று தொடங்குகிறார். அந்த அளவுக்கு சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. கி.பி. 2-ம் நூற்றாண்டு முதல், அதாவது சங்கம் நிறுவிய காலத்தில் இருந்து சூரியனை மக்கள் வணங்கி வருகிறார்கள்.

சூரியன் தட்சணாயணம் என்று அழைக்கப்படும் தென்பகுதியில் இருந்து உத்ராயணம் என்று அழைக்கப்படும் வடக்கு நோக்கி நகருகின்ற தைத்திங்கள் முதல் நாளில் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆற்றுப்பாசனம், குளத்து பாசனம், ஏரி பாசனம் உள்ள பகுதிகளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த திருநாளில் பொங்கல் சீர்வரிசை, பொங்கல்படி என்பது மகளுக்கு பெற்றோர், பெற்றோர் இல்லாத சகோதரிகளுக்கு சகோதரர்கள் வழங்குவது பெருமைக்குரியதாகும். அரை நூற்றாண்டுக்கு முன்பு அரிசி, கரும்பு, காய்-கனிகள் என்று பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பே சென்று கொடுப்பார்கள். இப்போது புதுமண தம்பதிகளுக்கு மட்டும் இப்படி சீர்வரிசையை நேரில் கொண்டு செல்கிறார்கள். மற்றபடி இந்த வழக்கம் சற்று மாறி, பணமாக கொடுத்து வருகிறார்கள். அவர்களின் ஆயுள்காலம் வரை இந்த பொங்கல்படி வழங்குதல் ரத்த பந்தங்களின் உறவை சுற்றத்தாருக்கு உணர்த்துவதாகும்.

உங்கள் அப்பா பொங்கல்படி கொண்டு வந்துவிட்டாங்களா? உங்கள் அண்ணன் பொங்கல்படி கொண்டு வந்தார்களா? என்று சுற்றத்தார் கேட்பதும், அதற்கு பெண்மக்கள் பெருமிதத்துடன் பதிலுரைப்பதும் காண்பதற்கரிய மகிழ்ச்சியை வழங்குகிறது.

Next Story