குழந்தைக் கதைகளின் அரசன் ஆண்டர்சன்


குழந்தைக் கதைகளின் அரசன் ஆண்டர்சன்
x
தினத்தந்தி 1 March 2021 2:02 PM GMT (Updated: 1 March 2021 2:02 PM GMT)

குழந்தைகளுக்கான சிறுகதை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆண்டர்சன். இவரது பிறந்த நாளே குழந்தைகளுக்கான புத்தக தினமாக பின்பற்றப்படுகிறது.

புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்கத் தூண்டும் வகையில், சிறுகதைகளை எழுதினார். குழந்தைகளின் கதை அரசன் என போற்றப்படும் கவிஞர் எச்.சி.ஆண்டர்சன். இவர் டென்மார்க்கில் உள்ள ஒடென்சு என்னும் நகரில் 1805 ஏப்ரல் 2-ந் தேதி பிறந்தார். சிறுவயதில் நடிகராக வேண்டும் என எண்ணினார். இவரது குரல் வளத்தை கேட்ட சகக்கலைஞர்கள், நீங்கள் ஏன் கவிதைகள் பாடக்கூடாது என கேட்டனர். இதனை லட்சியமாக எடுத்துக்கொண்ட ஆண்டர்சன் அதில் முழு ஈடுபாட்டை செலுத்தினார். பின்னர் குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் எழுதுவதில் வல்லவராக மாறினார். தனது படைப்புகளால் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளை மகிழ்வித்தார். கோடை காலம் ஒரு கவிஞனின் கடைவீதி, ஸ்பெயினில் மற்றும் போர்ச்சுகல் பயணம் போன்றவை இவர் எழுதிய சில பயண நூல்களாகும். குறிப்பாக சுவீடனில் என்ற பயண நூலில் அதிக கற்பனைக்கதைகள் இடம் பெற்றுள்ளது. இவரது கதை புத்தகங்கள் 120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது கதைகளை தழுவி, அனிமேஷன் திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டு உள்ளன.

பள்ளியில் படித்த காலமே மிகவும் இருண்ட காலம் எனவும், தனது வாழ்க்கையின் மிகவும் கசப்பான காலம் அது என்று அவர் கூறியிருக்கிறார். 1875-ம் ஆண்டு ஆண்டர்சன் இறந்தார். இவரது நினைவாக சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதுவதில் சிறந்து விளங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எச்.சி.ஆண்டர்சன் விருது வழங்கப்படுகிறது.

இவரது 200-ம் ஆண்டு நினைவாக 2005-ம் ஆண்டை ஆண்டர்சன் ஆண்டு என டென்மார்க் அரசு சிறப்பித்தது. இவரின் வாழ்வையும், படைப்புகளையும் புகழும் வண்ணம் பூங்கா ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, நியூயார்க் உட்பட பல நகரங்களில் இவருக்கு சிலைகள் உள்ளன. அமெரிக்க காங்கிரசு நூலகத்தில் இவரின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1967-ம் ஆண்டு முதல் இவரது பிறந்த நாளான ஏப்ரல் 2-ம் தேதியை பன்னாட்டு குழந்தைகளின் புத்தக தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Next Story