மேற்கு வங்காள தேர்தல்- 800 கூட்டங்கள் நடத்த பாஜக திட்டம் ; 20 கூட்டங்களில் மோடி பேசுகிறார்


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 4 March 2021 6:13 AM GMT (Updated: 4 March 2021 6:13 AM GMT)

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக தேசிய தலைவர்களின் 800 பிரசாரக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளது.

கொல்கத்தா

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் கம்பீரமாக வீற்றிருக்கும் மாநிலம் என்றால் அது மேற்கு வங்க மாநிலம்.  ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஆக சிறந்த ஆளுமைகளை நாட்டிற்கு கொடையாக கொடுத்த பூமி இந்த வங்க பூமி. 88, 752 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் பரந்து விரிந்துகிடக்கும் மேற்கு வங்கம், இந்தியாவின் 14வது மிகப்பெரிய மாநிலம். 

சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இம்மாநிலம் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. கங்கை ஆற்றுப்படுகை இம்மாநிலத்தின் பெரும் நிலப்பரப்பில் பரவியுள்ளது.மாநிலத்தை ஒட்டி வடக்கில் நேபாள் மற்றும் பூடான் போன்ற நாடுகளும் கிழக்கில் வங்காள தேசமும் அமைந்துள்ளன.

ஆனால் ஆங்கிலேயர் படையெடுப்பிற்கு முன்னர் தற்போதைய வங்கதேசத்தையும் சேர்த்து வங்காளமாக பரந்து விரிந்து இருந்தது தான் இதனுடைய முந்தைய வரலாறு. உரிமை போராட்டங்களும், மறக்க முடியாத மதவெறி தாக்குதல்களும் வங்க வரலாறில் அழிக்க முடியாதவை. நவராத்திரியை ஒட்டி 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜையும், ஈடன் கார்டனில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியும் கொண்டாட்டங்களில் முந்தி நிற்பவை.

ஒட்டுமொத்தமாக 9 கோடி மக்கள் தொகை கொண்ட  மேற்குவங்கத்தில், 77 சதவீதம் பேர் கல்வி அறிவு கொண்டவர்களாக உள்ளதாக கூறுகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு. 

மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 12.54 லட்சம் கோடி ரூபாயாக இருக்க, மாநில அரசின் கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்... இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் 9.8 சதவீதம் பங்கு வகிக்கும் இந்த மாநிலம், 2 சதவீதம் மட்டுமே அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதாக கூறப்படுகிறது. 

அரிசி, கரும்பு, கோதுமை, உருளைக் கிழங்கு போன்றவற்றை அதிகளவில் விளைவித்து வரும் மேற்குவங்கம், இந்தியாவிலேயே ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. 

பின்தங்கிய, பழங்குடி மற்றும் பூர்விக சமூகங்களின்  ஒரு கூட்டணியை உருவாக்கி விட்டார்கள். இவர்கள்தான் மேற்கு வங்காளத்தில் பலகாலமாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட துணைநிலை பிரிவினர்.  இந்தக் கூட்டணிதான் பா.ஜ.கவிற்கு சென்ற லோக்சபா தேர்தல்களில் 18 இடங்களை கைப்பற்ற உதவியது. அதிலிருந்து பா.ஜ.க இந்த கூட்டணியை பலப்படுத்தி வருவதுடன் அதனுடன் சேர்ந்து பல சமூகங்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று வருகிறது.

மார்ச் 27-ல் தொடங்கி 8 கட்டங்களாக அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. மம்தா பானர்ஜியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக தேசிய தலைவர்களின் பிரச்சாரக் கூட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 800 கூட்டங்கள் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.

அசாமில் 2-வது முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த பிரதமர் மோடி 7 கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மற்ற 3 மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே நாளில் மூன்று கூட்டங்கள் நடத்தும் திட்டத்துடன் 5-க்கும் மேற்பட்ட முறை பயணம் மேற்கொள்கிறார் மோடி.

இதில் பிரதமர்  மோடி மார்ச் 7 ல் தொடங்கி 20 கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலா 60 கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜகவின் பிற தேசிய தலைவர்களின் கூட்ட எண்ணிக்கை 700-க்கும் அதிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.

 மேற்குவங்கத்தில் அதிரடி யுக்திகளை கையாளும் பாஜக ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது ஆளும் திரிணாமூல் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி வாகை சூடுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Next Story