கருணை உள்ளமே.. கடவுள் இல்லமே..


கருணை உள்ளமே.. கடவுள் இல்லமே..
x
தினத்தந்தி 15 April 2021 12:13 PM GMT (Updated: 15 April 2021 12:13 PM GMT)

வசிக்க வீடு இல்லாமல் தெருவில் வாழ்பவர்களுக்கு பலரும் பலவிதங்களில் உதவுகிறார்கள். உணவு கொடுப்போரும், பணம் கொடுப்போரும், உடை கொடுப்போரும் உண்டு. அபூர்வமாக ஒருசிலர் இலவசமாக வீடுகளை கட்டிக்கொடுத்து அவர்கள் நிம்மதியாக வாழ வழிகாட்டுகிறார்கள்.

முனைவர் எம்.எஸ்.சுனில் என்ற பெண்மணி 2005-ம் ஆண்டு இந்த சேவையை தொடங்கி, இதுவரை 200 வீடுகளை ஏழைகளுக்காக உருவாக்கி அர்ப்பணித்திருக்கிறார். சிஸ்டர் லிசி சக்காலக்கல் 2011-ல் தொடங்கி, 150 வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கிறார். அன்வர் சதத் என்பவர் 2017-ல் இந்த சேவையை ஆரம்பித்து 50 வீடுகளை ஏழைகளுக்கு கட்டி வழங்கியிருக்கிறார். இவர்கள் மூவரும் கேரளாவில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.இவர்கள் வசதிபடைத்தவர்கள் இல்லை. சாதாரண குடும்பங்களில் பிறந்து, வளர்ந்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள். ஆனால் கருணை நிறைந்தவர்கள். 
அதனால்தான் கடைக்கோடி மக்களின் மீது இவர்களது கருணைப்பார்வை பதிந்திருக்கிறது. தங்களால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்காக செய்துகொண்டிருக்கிறார்கள். சுனில் கல்லூரியில் துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். அன்வர் சதத் ஆலுவா தொகுதி எம்.எல்.ஏ! சிஸ்டர் லிசி மேல்நிலைப்பள்ளி ஒன்றின் முதல்வர்.

அதிகமான வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கும் முனைவர் சுனில் சொல்கிறார்:
‘‘மனிதர்கள் சக மனிதர்கள் மீது வைக்கும் நம்பிக்கையால்தான் 16 ஆண்டுகளாக எனது சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் வீடு கட்டும்போதே கையில் பணமில்லை. ஆனால் வீட்டை கட்டிமுடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைதான் இந்த லட்சியத்தை அடையும் தைரியத்தை தந்திருக்கிறது. நான் பத்தனம்திட்டை கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது `நேஷனல் சர்வீஸ் ஸ்கீமின்' (என்.எஸ்.எஸ்) திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தேன். அப்போதுதான் முதல் வீட்டை ஒரு மாணவிக்கு கட்டிக்கொடுத்தோம்.பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட அந்த மாணவியை அவளது பெரியம்மா பாதுகாத்து பராமரித்து வந்தார். புறம்போக்கில் குடிசைகட்டி வசித்து வந்த அவர்கள் இருவருக்கும் பஞ்சாயத்து தலைவரிடம் பேசி இடத்தை பெற்று, அதில் வீடு கட்டிகொடுக்க முடிவெடுத்தோம். வீடுகட்ட உதவி செய்வதாக கூறிய பலரும் பாதியிலேயே பதில் சொல்லாமல் ஒதுங்கிவிட்டார்கள். நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எனது சொந்த பணத்தை செலவிட்டு, வீட்டை கட்டிமுடித்து, வழங்கினேன். நல்ல செயலுக்கு கடவுள் ஒருபோதும் முட்டுக்கட்டை போடுவதில்லை.கல்லூரி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அதனால் முழுநேரமும் இந்த பணியில் இறங்கிவிட்டேன். ஒரு வீட்டை நான்கு லட்சம் ரூபாயில் கட்டி முடிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, `அது எப்படி முடியும்? எட்டு லட்சம் ரூபாய் செலவாகுமே' என்பார்கள். அப்போது வீடு கட்ட வேண்டிய இடத்திற்கு நானே நண்பர்களோடு சென்றுவிடுவேன். நானே அளவெடுத்து, பிளான் தயார் செய்வேன். என்ஜினீயர், சூப்பர்வைசர், காண்ட்ரக்டர் எல்லாமே நாங்கள்தான். அதனால்தான் குறைந்த செலவில் வீடுகளை கட்டி இலவசமாக கொடுக்க முடிகிறது. அவர்கள் ஏழையாக இருப்பதால் வீட்டை பராமரிக்கவும், பெயிண்ட் அடிக்கவும் அவர்களால் முடியாது. அதனால் தரமான பொருட்களை வாங்கி, தரம்கொண்ட வீடுகளை கட்டிக்கொடுக்கிறோம்.

650 சதுர அடிகொண்ட வீடுகளை கட்டுகிறோம். சமையல் அறை, ஹால், பாத்ரூம், சிட் அவுட், படுக்கை அறை போன்றவை உண்டு. வழக்கமாக 4 லட்சம் ரூபாய் செலவாகும். மூலப்பொருட்கள் விலை ஏறினால் 5 லட்சம் ரூபாய் வரை ஆகிவிடும். மொத்த செலவை குறைக்கவேண்டும் என்பதற்காக பழைய கட்டிடங்களில் உள்ள கதவு, ஜன்னல் போன்றவைகளை வாங்கி பயன்படுத்துகிறோம்.போதுமான காற்றும், வெளிச்சமும் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 7 ஜன்னல்கள் வைக்கிறோம். தரை முழுவதும் டைல்ஸ் பதிக்கிறோம். மேற்கத்திய முறை கழிப்பறையும் 
கட்டித்தருகிறோம்.வீடு என்பது வசிப்பிடமாக மட்டுமில்லை, அவர்களுக்கு தன்னம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது. வீடு கட்டிக்கொடுப்பதோடு எங்கள் வேலை தீர்ந்துவிடாது. அவர்களுக்கு தன்னம்பிக்கைகொடுத்து அடுத்த கட்டத்தை நோக்கி அவர்கள் முன்னேறிச் செல்வதற்கான தூண்டுகோலாகவும் இருக்கிறோம். அவர்கள் வீடுகளிலே இருந்து சுயதொழில் செய்யவும் பல்வேறு குழுக்கள் உதவுகின்றன. இதுவரை 200 வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கிறோம்’’ என்கிறார்.

150 வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கும் சிஸ்டர் லிசி சொல்கிறார்:

‘‘நான் இப்போது பள்ளி முதல்வராக பணியாற்றுகிறேன். ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த அவர்களது வீட்டுச்சூழல் எப்படி இருக்கிறது என்பதை அறியும் திட்டம் ஒன்றை வகுத்துவைத்திருந்தோம். அதற்காக நான் மாணவிகளின் வீட்டிற்கு செல்வேன். அங்கு அவர்கள் எப்படிப்பட்ட வாழ்வியல் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு கவுன்சலிங் வழங்குவேன். நிறைய மாணவிகளுக்கு பாதுகாப்பான வீடு இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.ஒரு மாணவியின் தந்தை இறந்ததும், துக்கம் விசாரிக்க அவளது 
வீட்டிற்கு சென்றேன். அவளது தந்தை கூலி வேலை செய்துவந்திருக்கிறார். கடற்கரை பகுதியில் சீட் போட்டு மூடிய நிலையில் அவளது வீடு இருந்தது. பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது. அந்த இடம் இறந்துபோன அவளது தந்தைக்கு சொந்தமானது. அந்த இடத்தில் எப்படியாவது ஒரு வீட்டை கட்டிவிடவேண்டும் என்று அவர் முயற்சிசெய்திருக்கிறார். அந்த ஆசை நிறைவேறாமலே அவர் இறந்துவிட்டார். அதை கேள்விப்பட்டு அந்த இடத்திலே அவளுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்க முடிவுசெய்தேன். எனது அந்த கனவுத் திட்டத்திற்கு `ஹவுஸ் சேலஞ்ச்' என்று பெயர் சூட்டினேன்.அப்போது 
என் கையில் பணம் ஏதும் இல்லை. கடவுள் எப்படியாவது நிறைவேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை மட்டுமே இருந்தது. அவர் இறந்த 30 நாட்களுக்குள் வீட்டிற்கு அடிக்கல் நாட்டிவிட முடிவுசெய்தேன். 

தாமதித்தால் அவரது கனவு எல்லோராலும் மறக்கடிக்கப்பட்டுவிடும்.எனது குருவிடம்தான் முதன் முதலில் தகவல் சொன்னேன். அவர் 25 ஆயிரம் ரூபாய் கடனாக தந்தார். பள்ளி நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் தந்தது. அந்த ஐம்பதாயிரத்தில் வீடு கட்ட முடியாது என்பது எனக்கு தெரியும்தான். ஆனாலும் 30-வது நாள் தைரியமாக அடிக்கல் நாட்டினேன். இறந்து போனவரின் நண்பர்கள் கூலி வாங்காமல் கட்டிடப்பணியை மேற்கொண்டார்கள். சிலர் பண உதவியும் செய்தார்கள். ஐந்து மாதத்தில் 500 சதுர அடியில் வீடு தயாரானது.எங்கள் பகுதியில் வசிக்கும் மாணவிகளில் பெரும்பாலானவர்கள் கடற்கரை பகுதிகளில் இருந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வீடு இல்லை. அதுமட்டுமின்றி அவர்களது தந்தை குடிப்பழக்கம் கொண்டவராகவும் இருக்கிறார். அதனால் அந்த மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அவர்கள் குளிக்கவோ, உடைமாற்றவோ, தூங்கவோகூட வசதியில்லை. அதனால்தான் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தை தொடங்கினேன். நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவியதால் இத்தனை வீடுகளை கட்டிக்கொடுக்க முடிந்தது.முதலில் நிலம் இருப்பவர்களுக்குதான் வீடு கட்டிக்கொடுத்தோம். பின்பு சிலர் நிலம் வழங்கியதால், நிலமற்றவர் களுக்கும் வீடு கட்டிகொடுத்தோம். ரஞ்சன் வர்க்கீஸ் என்பவர் 72 சென்ட் இடம்கொடுத்தார். அதில் பத்து வீடுகள் கட்டி முடிக்கும் நிலையில் உள்ளது. அதையும் சேர்த்தால் 150 வீடுகள் ஆகியிருக்கிறது. கருணை உள்ளம் கொண்டவர்கள் நிறைந்திருப்பதால்தான் இது சாத்தியமாகிறது" என்கிறார், சிஸ்டர் லிசி.

50 வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கும் அன்வர் சதத் எம்.எல்.ஏ. சொல்கிறார்:

‘‘பெண்கள் திடீரென்று கணவரை இழந்து விதவையாகிவிடுகிறார்கள். அப்போது அவர்கள் தனிமையாகி, தவிக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவார்கள். கணவர் இறந்துபோனதும், வீடு என்ற அவர்களது பெருங்கனவும் தகர்ந்துபோய்விடும். அதோடு வீட்டுச்செலவு, குழந்தைகளின் கல்விச்செலவு போன் றவைகளையும் சமாளிக்க முடியாமல் குழம்புவார்கள்.வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் வருடந்தோறும் வாடகையை உயர்த்தி கொடுக்கவேண்டியதுள்ளது. அவர்களுக்கு சொந்த இடம் இருந்தாலும், அதில் வீடு கட்ட பண வசதி இருக்காது. அதனால் அவர்கள் 
நிரந்தரமாக வசித்த பகுதியில் இருந்து வெளியேறி வீட்டு வாடகை குறைவாக உள்ள கிராம பிரதேசங்களை நோக்கிச்செல்கிறார்கள். சிலர் சொந்த இடத்தில் விளம்பர பலகைகள், சீட்களை வைத்து குடிசை அமைத்து பாதுகாப்பில்லாமல் வசிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதிலும் பெண் குழந்தைகளை கொண்ட குடும்பத்தினர் மிகுந்த அச்சத்துக்குள்ளாகிறார்கள்.பெரும்பாவூர் என்ற பகுதியில் பாதுகாப்பற்ற குடிசையில் பெற்றோரின் பராமரிப்பில் வளர்ந்த ஜிஷா என்ற சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டாள். அதை பற்றி நான் மிகுந்த கவலையோடு சிந்தித்துக்கொண்டிருந்தபோதுதான், பள்ளி விழா ஒன்றுக்கு என்னை அழைத்திருந்தார்கள். அங்கு ஸ்ரீகுட்டி என்ற மிக சிறந்த மாணவிக்கு நான் பரிசு கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அந்த மாணவியின் குடும்ப நிலையை பற்றி விசாரித்தேன். 

அப்போதுதான் அவள் வீடு இல்லாமல் விதவை தாயிடம் வளர்ந்து வருவது தெரிந்தது.அவளுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்க முடிவெடுத்தேன். எனது அந்த கனவுத் திட்டத்திற்கு நண்பரான நடிகர் நாதிர்ஷா `அம்மா கிளிக்கூடு' என்று பெயரிட்டார். அந்த வீட்டிற்கான முதல் கல்லை நடிகர் ஜெயராமன் எடுத்துக்கொடுத்தார். அந்த வீட்டை உஜாலா ராமசந்திரன் கட்டித்தந்தார். ஸ்ரீகுட்டிக்கு அழகாக வீடு ஒன்று கிடைத்தது. தொடர்ந்து அந்த சேவையில் ஈடுபட்டு 50 வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கிறோம்.இரண்டு பெண் குழந்தைகளை கொண்ட விதவைகளுக்கு வீடு கட்டிக்கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்கிறோம். இரண்டு பெட் ரூம், சமையல் அறை, ஒரு பாத்ரூம், ஒரு சிட்அவுட் போன்றவைகளை 510 சதுர அடியில் கட்டிக்கொடுக்கிறோம். நாங்கள் ஒரு வீட்டிற்கு 7 லட்சம் ரூபாய் செலவிடுகிறோம். சிலர் தங்கள் கையில் கொஞ்சம் பணம் இருப்பதாக சொல்வார்கள். அவர்களுக்கான வீட்டில் அந்த பணத்தையும் செலவிட்டு கூடுதல் சவுகரியங்களை ஏற்படுத்திக்கொடுக்கிறோம்.

நான் பள்ளிக்காலம் தொட்டே சமூக சேவையில் அக்கறை கொண்டிருந்தேன். எம்.எல்.ஏ. ஆனதும் சேவை உணர்வு அதிகரித்துவிட்டது. எனது இத்தகைய சேவை செயல்பாடுகளுக்கு மனைவி, பெற்றோர் உள்பட குடும்பத்தினர் அனைவரும் ஒத்துழைப்பு தருகிறார்கள்’’ என்கிறார்.

Next Story