சிறப்புக் கட்டுரைகள்

செவிலியர்களின் சேவையை போற்றுவோம்... + "||" + Of nurses We appreciate the service

செவிலியர்களின் சேவையை போற்றுவோம்...

செவிலியர்களின் சேவையை போற்றுவோம்...
நோய்கள் தாக்கினால் பொதுமக்கள் மருத்துவமனையை நாடுகிறார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.
எனினும் ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்பது அனைவரும் அறிந்தது. உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் செவிலியர்களை போற்றுவதற்காக மே மாதம் 12-ந் தேதி உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12-ந் தேதி தான் உலக செவிலியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

செவிலியர்களின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்துகளை வழங்கி சேவை செய்தார். நர்ஸ் பயிற்சி பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். பிரிட்டனில் செல்வ செழிப்பு மிக்க உயர் குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலி நகரில் பிறந்தார்.

அந்த காலத்தில் செவிலியர் சேவை ஒரு கவுரவமான பணியாகக் கருதப்படவில்லை. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களே இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். 1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 செவிலியருடன் ராணுவ மருத்துவமனைக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சென்றார். வசதி குறைவுகளுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். இரவு நேரத்தில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தங்களை காக்க ‘விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை’ என ராணுவ வீரர்கள் அவரை கவுரவித்தனர்.

பின்னர் நாடு திரும்பிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சாதனை பெண்மணியாக வரவேற்கப்பட்டார். இதன் மூலம் தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு நர்சிங் பள்ளியை நைட்டிங்கேல் தொடங்கினார். இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக, ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம்‘ என்ற பெயரில் இயங்கி வருகிறது.

கடந்த ஆண்டு முதல் கொடிய நோய்க் கிருமியாக விளங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 2-வது அலை வீசி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு அடுத்தபடியாக செவிலியர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான செவிலியர்கள் தன்னலம் பாராமல் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வருகிறார்கள். அவர்களின் இந்த சேவை மகத்தானது.

இது போன்று பல்வேறு நோயாளிகளுக்கும் அவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சமுதாயத்திலும் சுகாதார பராமரிப்பு அமைப்புகளிலும் செவிலியர்கள் ஆற்றும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தனிநபர் பராமரிப்பு, சிகிச்சை மேலாண்மை, குடும்பங்களோடும், சமுதாயத்தோடும் இணைந்து பணியாற்றுதல் ஆகியவை இதில் அடங்கும். பொது சுகாதாரத்திலும், நோய்களையும், தொற்றுகளையும் தடுப்பதிலும் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சுகாதாரத்தை மேம்படுத்துதல், நோய்களை தடுத்தல், நோயாளிகள், ஊனமுற்றோர், மரணப்படுக்கையில் இருப்போர் ஆகியோரை பராமரிப்பதில் முன்னோடிகளாக திகழ்கிறார்கள்.

எனவே உலக செவிலியர் தினம் அன்று நாமும் அவர்களை பாராட்டுவோம்... அவர் களது சேவையை போற்றுவோம்...மதிப் பளிப்போம்...