அழகான மாலத்தீவு


அழகான மாலத்தீவு
x
தினத்தந்தி 14 May 2021 3:42 PM GMT (Updated: 14 May 2021 3:42 PM GMT)

உலகிலேயே தட்டையான நாடு என்ற புகழுக்குரியதும் மிக அழகிய சிறிய மற்றும் பெரிய தீவுகளால் ஆனதுமான நாடு தான் மாலத்தீவு. சுமார் 1,190 தீவுகளைக் கொண்ட நாடு இது.

இவற்றில் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் மக்கள் தொகையும் ரொம்ப அதிகமில்லை. மொத்தமே சுமார் 4 லட்சம்தான். அழகான மணல் வெளிகள், தென்னை மரங்கள், பவள பாறைகள் இப்படி வர்ணனை செய்து கொண்டே போகலாம், அப்படி ஒரு அழகான இடமாக இது திகழ்கிறது.இங்கே உள்ள தீவுகளில் 26 தீவுகள் பவளப்பாறைகளால் உருவானது. இவை மாலை போல் தீவுகளை இணைத்திருக்கின்றன. ராடன் எனப்படும் ராஜாக்களாலும், ராணின் எனப்படும் ராணிகளாலும் மிகவும் பண்டைய காலத்திலிருந்தே மாலத்தீவு ஆளப்பட்டு வந்துள்ளது. இந்தியப் 
பெருங்கடலின் முக்கியமான கடல் பாதையில் இத்தீவு அமைந்துள்ளதால் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது.

இந்தியாவும் இலங்கையும் மாலத்தீவின் அண்டை நாடுகளாக இருக்கின்றன. இவ்விரு நாடுகளும் பல நூற்றாண்டுகளாக மாலத்தீவுடன் நெருங்கிய கலாசார மற்றும் பொருளாதாரத் தொடர்பு கொண்டுள்ளன. பலகறை சங்கு எனப்படும் கடல் பொருள் மாலத்தீவுகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கியுள்ளது. குட்டி நாடாக இருந்தாலும் இந்த நாட்டுக்குத் தனிப் பாரம்பரியம் உள்ளது. நம் சோழ 
மன்னர்கள் காலத்தில் இந்தத் தீவு அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1558-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர் இந்தத் தீவு தேசத்தைக் கைப்பற்றினார்கள். அந்தக் காலத்தில் பல ஐரோப்பிய நாடுகள் நாடு பிடிக்கும் போட்டியில் தீவிரமாக இருந்தன. இதன் காரணமாக 1654-ம் ஆண்டு முதல் டச்சுக்காரர்கள் வசமும், 1887 முதல் ஆங்கிலேயர்களிடமும் இந்த நாடு அடிமைப்பட்டது. இறுதியாக 1965-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தக் குட்டி நாடு விடுதலை பெற்றது.

மாலத் தீவுகள் நாடு சுற்றுலாவை நம்பித்தான் இருக்கிறது. உலக வெப்பமயமாதல் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்தால், கடலில் மூழ்கும் முதல் நாடு இதுவாகத்தான் இருக்கும். இதை உணர்த்துவதற்காக 2009-ம் ஆண்டில் அந்த நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கடியில் நடைபெற்றது.

Next Story