சிறப்புக் கட்டுரைகள்

50 வயதும்.. ஆனந்தமான வாழ்வும்.. + "||" + 50 years old .. happy life ..

50 வயதும்.. ஆனந்தமான வாழ்வும்..

50 வயதும்.. ஆனந்தமான வாழ்வும்..
முதுமை, வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் முதுமை பருவத்தை நோய் நொடியின்றி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு சில நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது. 50 வயதை கடந்ததுமே சில பழக்கவழக்கங்களை பின்பற்ற தொடங்கினாலே முதுமை காலத்தை ஆனந்தமயமாக கழிப்பதற்கு அடித்தளமிட்டுவிடலாம்.
1. சுறுசுறுப்பு: உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். அது கவலை, மனச்சோர்வை குறைக்க உதவும். உடல் சம நிலையையும், மன நிலையையும் மேம்படுத்துவதற்கு சில பயிற்சிகள் கைகொடுக்கும். இதுநாள் வரை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருந்தாலும் கூட 50 வயதை கடந்த பிறகு உடற்பயிற்சியை நாட வேண்டியது அவசியம். அது ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. பயிற்சியின்போது தசை வலிமையை அதிகரிப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.

2. இணைந்திருங்கள்: முதுமை காலகட்டத்தை நெருங்கிவிட்டாலே சிலர் தனிமையை விரும்ப தொடங்கிவிடுவார்கள். அது குடும்பத்தினரிடம் இருந்து விலகுவதற்கு தாமே அடித்தளமிட்டதாக அமைந்துவிடும். குடும்பத்தினர், நண்பர்களுடனான தொடர்பை இழப்பதற்கான சூழலை ஒருபோதும் உருவாகிவிடக்கூடாது. நகைச்சுவை உணர்வை தக்கவைத்துக்கொள்வதும் அவசியமானது. அன்புக்குரியவர்களுடன் பேசுவதும், தொடர்பில் இருப்பதும் மிகவும் முக்கியம். சமூக தொடர்புகளையும் உருவாக்கிக்கொள்ளலாம். சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் இணைந்து தன்னார்வ தொண்டுகளில் ஈடுபடலாம். இன்றைய கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வழியாக வீட்டில் இருந்தபடியே சமூக குழுக்களை ஒருங்கிணைத்து சேவையாற்றலாம்.

3. சமச்சீர் உணவு: ஆயுளை அதிகரிப்பதற்கு சமச்சீர் உணவு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். 50 வயதை கடந்துவிட்டால் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதும் அவசியமானது. கார்போஹைட்ரேட், கொழுப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. அவற்றை தவிர்த்து ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் கொண்ட உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். முழு தானியங்கள், நட்ஸ் வகைகள், பழங்கள், காய்கறிகளை உட்கொள்வது முதுமை கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதய நோய் உள்ளவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும். போதுமான அளவு கால்சியம் கொண்ட உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

4. பரிசோதனை: வயது அதிகரிக்கும்போது நோய் பாதிப்பும் வீரியமடையும். ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்புகளை கண்டறிவதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. வழக்கமான பரிசோதனைகளை தவறாமல் செய்துவந்தால் பெரிய சிக்கல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட இணை நோய்களை கொண்டிருப்பவர்கள் மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் மருந்துகளையும், பரிசோதனைகளையும் புறக்கணிக்கக்கூடாது.

5. மதுப்பழக்கம்: வயது அதிகரிக்கும்போது உடல் நலம் குறைய தொடங்கும். ஆதலால் உடல் இயக்க செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மது பழக்கம் கொண்டவர்கள் 50 வயதுக்கு பிறகு அறவே தவிர்த்துவிட வேண்டும். வயதான காலத்தில் ஆல்கஹால் நுகர்வு, நோய் பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

6. புகைப்பழக்கம்: பொதுவாகவே புகைப்பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வயதான காலத்தில் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். ஏற்கனவே வயது அதிகரிப்புக்கு ஏற்ப உடல் செயல்பாடுகள், செயல் திறன் குறைந்துவிடும். அதனை கருத்தில் கொள்ளாமல் புகையிலை பொருட்களை நுகர்வது, உயர் ரத்த அழுத்தம், இதய துடிப்பு அதிகரிப்பு, நீரிழிவு நோய், புற்றுநோய், கொழுப்பு அதிகரிப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். புகைப்பழக்கம் எலும்புகளையும் பலவீனப்படுத்திவிடும். ஆதலால் புகைப்பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

7. தூக்கம்: வயதான காலத்தில் உடல் ஆரோக்கியமாக செயல்பட, சரியான ஓய்வு தேவை. 50 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு 6 முதல் 8 மணிநேர தூக்கம் அவசியம். தூங்கும் நேரம் எவ்வளவு குறைகிறதோ, அதற்கேற்ப ஆரோக்கியத்தில் கடுமையான விளைவை ஏற்படுத்தும். தாமதமாக தூங்க செல்வது, இரவில் இடை இடையே கண் விழிப்பது, சீக்கிரமாகவே எழுந்திருப்பது போன்றவை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும், தூங்குவதில் சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.