நகர வாழ்க்கையில் இருந்து விலகி... இயற்கையோடு இணைந்து வாழும் தம்பதி


நகர வாழ்க்கையில் இருந்து விலகி... இயற்கையோடு இணைந்து வாழும் தம்பதி
x
தினத்தந்தி 4 July 2021 3:12 PM GMT (Updated: 4 July 2021 3:12 PM GMT)

‘‘சமையலுக்கு தேவைப்படும் உணவு தானியங்களை நாமே வளர்த்து, தன்னிறைவான வாழ்க்கை முறைக்கு மாற இயலுமா? என்பதை பரிசோதித்து பார்ப்பதற்கு முடிவு செய்தோம்.

தக்காளி, செடி வகை தாவரமாகும். சுமார் 1 அடி முதல் 3 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆனால் மரத்தில் வளரும் தக்காளி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் 7 அடி உயரத்தில் வளர்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லா? இப்படி தக்காளி போன்ற வித்தியாசமான வெளிநாட்டு ரக செடி, மர வகைகளை தங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்த்து இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வசிஷ்டா - நேஹா தம்பதியர்.

இவர்களது பூர்வீகம் மும்பை. இருவருமே இயற்கை ஆர்வலர்கள். நெருக்கடி மிகுந்த நகர வாழ்க்கையை விட்டு வெளியேறி இயற்கையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள். சில காலம் கோவாவில் தங்கி இருந்தபடி தாங்கள் குடியேறுவதற்கான சரியான இடத்தை தேடி இருக்கிறார்கள். ஒரு வருட தேடலுக்கு பிறகு கொடைக்கானலை தேர்வு செய்திருக்கிறார்கள்.

‘‘சமையலுக்கு தேவைப்படும் உணவு தானியங்களை நாமே வளர்த்து, தன்னிறைவான வாழ்க்கை முறைக்கு மாற இயலுமா? என்பதை பரிசோதித்து பார்ப்பதற்கு முடிவு செய்தோம். அந்த வாழ்க்கை இயற்கையோடு ஒன்றிணைந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இறுதியில் ‘மலை களின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு செல்ல முடிவு செய்தோம். அங்கு சில வாரங்கள் தங்கி இருந்து ஒத்திகை பார்ப்பதுதான் எங்கள் திட்டம். ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கு நடந்த ‘பெர்மாகல்சர்’ எனப்படும் ஒருங் கிணைந்த விவசாய முறையை விவரிக்கும் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அது தோட்டக்கலை மீதான எங்கள் பார்வையை விசாலப்படுத்தியது’’ என்கிறார், நேஹா.

கொடைக்கானலில் தங்கி இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு வித்தியாசமான பழங்கள், காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை பார்த்தவர்கள், தக்காளி போலவே தோற்றமளிக்கும் ஒரு பழத்தை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். அதனை விற்பனை செய்தவரிடம் விசாரித்தபோது அவர், ‘இது மரத்தில் விளையும் தக்காளி. அதனால் மர தக்காளி என்று அழைப்போம்’ என்று கூறி இருக்கிறார்.

மரத்தில் தக்காளி காய்க்குமா? என்ற குழப்பத்துடன் நேஹா அந்த தக்காளியை வாங்கி இருக்கிறார். ‘‘நான் அந்த தக் காளியை அப்படியே சாப்பிட்டு பார்த்தேன். அதனை எப்படியெல்லாம் சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தேடி படித்தேன். தமிழ்நாட்டில் இந்த பழத்தில் சட்னி, ஜாம் தயாரிக்கப்படுகிறது. சுவைக்காக ரசத்திலும் சேர்க்கப்படுகிறது’’ என்கிறார், நேஹா.

கொடைக்கானலின் அழகும், ரம்மியமான இயற்கை அம்சங்களும் பிடித்துபோனதால் வசிஷ்டா - நேஹா தம்பதியர் 2019-ம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பேத்துப் பாறை என்ற இடத்தில் குடியேறி இருக்கிறார்கள். அங்கு தங்கள் வீட்டின் பின்புறத்தில் 50 வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து வருகிறார்கள். எல்லா பருவ காலத்திலும் விளையும் காய்கறி வகைகளை வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். சமையல் செய்வதற்கான பொருட்களை வெளியே வாங்காமல் வீட்டிலேயே விளைவித்துவிட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

‘‘தக்காளி, கேரட் போன்றவை வருடத்திற்கு ஒருமுறை உற்பத்தியாகக்கூடியவை. காய்கறிகளை அறுவடை செய்த உடனேயே வேறொரு பயிர்களை வளர்க்க வேண்டும்.

இருப்பினும் காலே, மோரிங்கா, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவை பல ஆண்டுகளாக வளரக்கூடியவை. மர தக்காளியும் அந்த ரகம்தான். எங்கள் தோட்டத்தில் வேலி அமைக்கப்படவில்லை. குரங்குகளின் தொல்லைதான் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு நண்பர் ஒருவர் மர தக்காளியை வளர்க்க உதவினார். அதனை பராமரிப்பதற்கு அதிக முயற்சி எடுக்கவில்லை. ஏனெனில் இந்த பகுதியின் காலநிலைக்கு ஈடுகொடுத்து வளரும் தன்மை கொண்டது. இருப்பினும் உரம், உலர்ந்த இலைகள் போட்டு பராமரித்தோம். ஏழு மாதங்களுக்குள், மரம் 7 அடி உயரத்திற்கு வளர்ந்தது. பச்சை நிறத்தில் தக்காளிகளும் காய்த்து குலுங்க தொடங்கியது. இதுவரை இரண்டு முறை தக்காளி மகசூல் கொடுத்துள்ளது. ஆனால் குரங்குகள் அவற்றை சாப்பிடுவதால் எங்களால் அதனை பறித்து சமைக்க முடியவில்லை. எங்கள் விளைச்சலை இயற்கையோடு பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அடுத்த பருவத்தில் மர தக்காளியை ருசிக்க முடியும் என்று நம்பு கிறோம்” என்கிறார் நேஹா.

நேஹா தனது தோட்டத்தில் விளைந்த மர தக்காளியை சாப்பிடவில்லை என்றாலும், சந்தையில் இருந்து வாங்கி வந்து பல விதமான சட்னிகள் மற்றும் ஜாம் தயாரித்துள்ளார். தமரில்லோ அல்லது நாகா மர தக்காளி என்று அழைக்கப்படும் இது 1800களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரு நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த தக்காளி தற்போது மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

Next Story