சிறப்புக் கட்டுரைகள்

சர்க்கரை நோயாளிகளும்.. பாலும்.. + "||" + Diabetics .. and milk ..

சர்க்கரை நோயாளிகளும்.. பாலும்..

சர்க்கரை நோயாளிகளும்.. பாலும்..
பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுப்பொருளாக பால் விளங்குகிறது. கால்சியம் நிறைந்திருக்கும் சிறந்த ஆகாரமாகவும் கருதப்படுகிறது. ஆனால் பாலில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பால் பருகும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காலை உணவின்போது ஒரு டம்ளர் பால் பருகினால் அதில் சுமார் 15 கிராம் கார்போஹைரேட்டுகள் கலந்திருக்கும். ‘கிரீம் மில்க்’ என்றழைக்கப்படும் பாலில் நிறைய கொழுப்பு உள்ளது. அதுபோல் நிறைய கலோரிகளும் இருக்கின்றன. கொழுப்பு நீக்கப்பட்ட பால் ‘ஸ்கிம்டு மில்க்’ என்றழைக்கப்படுகிறது. அதில் கொழுப்பின் அளவு குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்தாலும் கார்போஹைட்ரேட்டுகள் நிச்சயம் கலந்திருக்கும். பசு அல்லது எருமை மாட்டுப்பாலை விட பாதாம் பால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஏனெனில் அதில் குறைவான அளவே கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. பாதாம் பாலுடன் வேறு சில பால் வகைகளையும் பருகலாம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டைப் 1 நீரிழிவு நோயாளிகள் ஒட்டகப் பால் பருகுவது ரத்த சர்க்கரை அளவையும், இன்சுலின் தேவையையும் குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் காயங்களை குணப்படுத்துதல் போன்ற நீரிழிவு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற பாலாடைக்கட்டி சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை குறைக்கும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் கார்போஹைட்ரேட் துளியளவும் இல்லை. அதேசமயத்தில் புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்திருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் பால் பருகலாமா? அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. அதேவேளையில் உணவில் குறைவான அளவில் சேர்த்துக்கொள்ளலாம். அதில் எத்தனை கலோரிகள் இருக்கின்றன என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.