சிறப்புக் கட்டுரைகள்

ஆக்கி வீராங்கனை நேஹா கோயல் + "||" + Akki Veerangana Neha Goyal

ஆக்கி வீராங்கனை நேஹா கோயல்

ஆக்கி வீராங்கனை நேஹா கோயல்
வாழ்க்கைச் சூழல் என்றுமே நமக்கு சாதகமாக அமைவதில்லை. அதை நமக்கானதாக மாற்றிக்கொள்வதில்தான் வெற்றிக்கான முதல் ஆயுதம் அடங்கியுள்ளது. நேஹா கோயலின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது இதைதான்.
வாழ்க்கைச் சூழல் என்றுமே நமக்கு சாதகமாக அமைவதில்லை. அதை நமக்கானதாக மாற்றிக்கொள்வதில்தான் வெற்றிக்கான முதல் ஆயுதம் அடங்கியுள்ளது. நேஹா கோயலின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது இதைதான். சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், இந்திய மகளிர் ஆக்கி அணி அரை இறுதியில் தோற்ற போதிலும், இத்தனை ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி அடைந்ததூரம் ஆர்ப்பரிப்புக்கு உரியதே ஆகும்.


கடுமையாக போட்டியிட்ட இந்திய அணியில், முக்கிய வீராங்கனையாக இருந்தவர் அரியானாவைச் சேர்ந்த 24 வயது நேஹா கோயல்.

வறுமையின் காரணமாக, தன் குடும்பத்தோடு சைக்கிள் தொழிற்சாலையில் பகுதி நேர வேலை செய்து வந்தார் நேஹா. பள்ளியில் கிடைக்கும் இலவச காலணிக் காகவும், சீருடைக்காகவும்தான் முதன்முதலாக ஆக்கி விளையாடினார். அதன் மூலம் நேஹாவின் திறமை அவரை ஆக்கியோடு பிணைத்துவிட்டது.

பள்ளியில் நேஹாவின் இந்த திறமையை கண்டுபிடித்தவர், அவரின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய மகளிர் ஆக்கி வீரருமான ப்ரீடம் சிவாச். களத்தில் மட்டும் அல்ல, வாழ்க்கையிலும் நேஹாவுக்கு பக்கபலமாக இருந்தவர் ப்ரீடம்தான். “தினமும் தவறாமல் பயிற்சி செய்தால், இருவேளை ஊட்டச்சத்து
நிறைந்த உணவுகளை நேஹாவுக்கு தருவதாக உறுதியளித்தேன். அதுவே அவளை பயிற்சிக்கு வர ஊக்குவித்தது” என்கிறார் ப்ரீடம் சிவாச்.

மூன்று பெண் பிள்ளைகளை கொண்ட நேஹாவின் குடும்பம், தந்தையை இழந்து பல இன்னல்களுக்கு உள்ளானது. இத்தகைய சூழலில் அந்த குடும்பத்தின் ஒரே துணையாக இருந்தவர் நேஹாவின் தாயார் சாவித்ரி தேவி. பொருளாதாரமும் சமூகமும் எத்தனை துயரங்களை தந்த போதும், நேஹாவை அவரின் கனவுகளை நோக்கி ஊக்குவித்தார்.

ஆணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது பெண் என்று கேட்டிருப்போம். இங்கே நேஹா கோயல் என்ற பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது இரு தன்னலமற்ற பெண்களே .

கடுமையான சூழலிலும் விடாது பயிற்சி செய்த நேஹா தன் 14-வது வயதில் ஆசிய போட்டியில் பங்கு பெற்றார். ஆட்டத்தில்தன் திறமையை பறை சாற்றி 17 வயதில் சர்வதேச போட்டிக்கு தேர்வானார்.

ஆக்கி அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நேஹா கோயல், முன்னோடியாக தன் பயிற்சியாளரும், நலம் விரும்பியுமான ப்ரீடம் சிவாச்சையே கருதுவதாக கூறுகிறார்.

ஒலிம்பிக் போட்டி வரை முன்னேறியுள்ள நேஹா, இன்று தன்னை போன்று சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் உதவி வருகிறார். வெற்றி என்பது நாம் மட்டும் முன்னேறுவது அல்ல, மாறாக நம்மோடு சேர்த்து நம் சமூகத்தையும் உயர்த்துவது தான் என்பதை நேஹா தன் செயலின் மூலம் இச்சமூகத்திற்கு உணர்த்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆக்கி அணிக்கு 10 ஆண்டுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா முடிவு
ஆக்கி அணிக்கு 10 ஆண்டுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா முடிவு.