எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு சரி செய்வது?


எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு சரி செய்வது?
x
தினத்தந்தி 5 Sep 2021 8:24 AM GMT (Updated: 5 Sep 2021 8:24 AM GMT)

நாம் நினைத்த செயல் தவறாக நிகழும்போது எதிர்மறை எண்ணம் உருவாகிறது.

நாம் நினைத்த செயல் தவறாக நிகழும்போது எதிர்மறை எண்ணம் உருவாகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடி, கல்வி கற்பதில் உண்டாகும் சிரமங்கள், காதல் தோல்வி, உடல் மற்றும் மனரீதியான உபாதைகள் போன்ற பல்வேறு காரணங்களால், எதிர்மறை சிந்தனைகள் ஏற்படுகின்றன. இவை சில நேரம் தவறான முடிவுகளை நோக்கி செல்ல வைக்கும்.

எதிர்மறை எண்ணங்களின் மிகுதியால் பலர் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். உலக சுகாதார மையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், உலகில் ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலையில் ஈடுபட்டு உயிரிழப்பதாகவும், அதில் 15 முதல் 29 வயதுக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கை, அதிகமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. தற்கொலை எண்ணம் தடுக்கக்கூடியதுதான் என்ற விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் நாள்‘ உலக தற்கொலை தடுப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

தற்கொலை உணர்வை தடுப்பதற்கு, முதலில் நமக்குள் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை களைய வேண்டும். சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு உள்ளது. நம்மை சுற்றியுள்ளவர்கள் எத்தகைய சிந்தனையில் இருக்கிறார்கள் என, அவர்களின் மன நிலையை அறிந்து செயல்பட வேண்டும்.

எதிர்மறை எண்ணங்களின் அறிகுறிகள்

சமுதாயத்தில் இருந்து விலகி தனிமையில் இருத்தல், தற்கொலை மற்றும் மரணம் குறித்து அதிகமாக பேசுதல், தேவையில்லாத மாத்திரைகள் மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் பொருட்களை வாங்குதல், போதைப்பொருட்களுக்கு அடிமையாதல், எப்போதும் பதற்றத்துடன் இருத்தல், எளிதில் எரிச்சல் அடைதல்,
தூக்கமின்மை, கவனமின்மை, சரியாக சாப்பிடாமல் இருப்பது, மன அழுத்தம், மனநல பாதிப்பு, குற்ற உணர்ச்சி, நம்பிக்கையின்மை போன்றவை எதிர்மறை எண்ணங்களின் அறிகுறிகளாகும்.

தீர்வுகள்

உங்கள் பிரச்சினையை நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். பாதிப்பின் தாக்கம் இதனால் குறையும். தீர்வுகளை பற்றி யோசிக்க முடியும்.

எப்போதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சூழலிலேயே வாழுங்கள். மனதுக்குப் பிடித்த, மகிழ்ச்சியைத் தரும் சிறு செயல்களைக்கூட செய்யுங்கள். ‘பிறர் என்ன கூறுவார்?’ என்று யோசிக்கும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.

தனியாக இருப்பதைத் தவிர்த்து, உங்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்களுடன் நேரத்தை செலவிடலாம். இது மன மாற்றத்துக்கு உதவும்.

உங்கள் பிரச்சினை என்ன, அது எப்படி ஏற்பட்டது போன்றவற்றை , எழுதி படித்துப் பாருங்கள். இந்த செயல்முறை தீர்வுக்கான வழியை அறிய உதவும்.

எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள். எதிர்பார்த்தபடி நிகழாமல் போகும்போது, அதுவே மன அழுத்தத்தை உண்டாக்கும். ஆகையால், நிகழ்கால நடப்பை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நம்மால் செய்ய இயலாத, கவலையை ஏற்படுத்தும், பதற்றத்தை உண்டாக்கும் விஷயங்களைப் பற்றி யோசிப்பதைத் தவிர்க்கலாம். அடுத்தவர்களுடன் உங்களை எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மன அமைதி, நிம்மதி உண்டாக தியானம், உடற்பயிற்சி, யோகா அல்லது விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம்.

Next Story