முதுமைக்கு சவாலாக அமையும் மறதி நோயின் தன்மைகள்


முதுமைக்கு சவாலாக அமையும் மறதி நோயின் தன்மைகள்
x
தினத்தந்தி 16 Sep 2021 4:22 PM GMT (Updated: 16 Sep 2021 4:22 PM GMT)

நினைவாற்றல், சிந்தனை, நடத்தையில் தடுமாற்றம், அன்றாட பணிகளை செய்வதில் சிரமம் போன்ற அறிகுறிகள் டிமென்ஷியா பாதிப்பை வெளிப்படுத்தக்கூடியவை. இது வயதானவர்களை அதிகம் பாதிக்கும் மறதி நோயாக கருதப்பட்டாலும் மற்ற வயதினரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமான பேர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 50 லட்சம் பேர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். 2010-ம் ஆண்டு இந்தியாவில் 37 லட்சம் பேர் டிமென்ஷியா பாதிப்புக்கு ஆளானார்கள். 2030-ம் ஆண்டுக்குள் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் 2020-ம் ஆண்டுக்குள்ளாகவே நோய் பாதிப்பு 50 லட்சத்தை கடந்துவிட்டது. 2010-ம் ஆண்டில், டிமென்ஷியா நோயாளிகளைப் பராமரிப்பதற்கான மொத்த சமூக செலவு ரூ.14 ஆயிரத்து 700 கோடியாக இருந்தது. இது 2030-ம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக மூளை செல்களின் சேதம் அல்லது குறைபாடு காரணமாக ஏற்படும் அறிகுறிகள் டிமென்ஷியாவுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. பலவீனமான நினைவாற்றல், சிந்தனையில் தடுமாற்றம், பிறர் பேசுவதை புரிந்து கொள்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது, முடிவெடுப்பதில் குழப்பம் போன்றவையும் டிமென்ஷியா பாதிப்புக்கு வித்திடுகின்றன.

வயது அதிகரிக்கும்போது நோய் பாதிப்பின் தன்மையும் கூடுகிறது. ஆரம்ப நிலையில் பதற்றம் எட்டிப்பார்த்தாலும் தங்களின் வழக்கமான பணிகளை செய்து விடுவார்கள். ஆனால் அடிக்கடி மறதி எட்டிப்பார்க்கும். அவர்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை ஒரே சமயத்தில் செய்ய முடியாது. பிறருடைய பெயர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுதல் மற்றும் நேரத்தை நினைவில் வைத்துக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

இந்தியாவில் டிமென்ஷியா பாதிப்புக்குள்ளாகுபவர்களில் 10 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். சுயமரியாதை, போதிய சுகாதாரம், மறுவாழ்வு வசதி, சொத்துக்களை கையாளுதல், நிதி பரி வர்த்தனைகள், நோய்த்தடுப்பு சிகிச்சை போன்ற பல அம்சங்களை அவர்கள் கையாள்வதற்கு குறிப்பிட்ட சட்ட திட்டங்கள் தேவைப்படுகிறது என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் ஆய்வறிக்கையில், உலக அளவில் 2050-ம் ஆண்டு வாக்கில் 13.1 கோடி முதியவர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தனி நபர், குடும்பம் மற்றும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பொருளாதார நெருக்கடியையும் உண்டாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


Next Story