விநாயகர் சிலைக்கு புது வடிவம் கொடுக்கும் பெண் வழக்கறிஞர்


விநாயகர் சிலைக்கு புது வடிவம் கொடுக்கும் பெண் வழக்கறிஞர்
x
தினத்தந்தி 17 Sep 2021 2:49 PM GMT (Updated: 17 Sep 2021 2:49 PM GMT)

முந்தைய காலங்களில், விநாயகர் சிலைகள் களிமண் கொண்டு வடிவமைக்கப்பட்டன. அதன் மீது பூசப்படும் வண்ணங்கள் இயற்கை சாயங்களால் தயாரிக்கப்பட்டன. பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியின்போது வீட்டிலேயே சிலைகளை வடிவமைத்து வழிபடுவார்கள்.

ஆனால் இன்று பெரும்பாலான விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் தெர்மாகோல் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. அவற்றுக்கு செயற்கை வண்ணங்கள் பூசப்பட்டு அலங்காரம் செய்யப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடியவை.அதுமட்டுமின்றி விநாயகர் சதுர்த்தியின்போது பூஜை செய்யப்படும் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும் நிகழ்வும் நடைபெறும். அப்படி ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிலைகள் நீர் நிலைகளில் மூழ்கடிக்கப்படுகின்றன. சமீபகாலமாக சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு விநாயகர் சிலைகளை வடிவமைத்து நீர் நிலைகளில் கரைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களில், தனித்துமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார், திரிப்தி கெய்க்வாட். 33 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர். வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் செயல்படும் இவர், சம்பூர்ணம் சேவா அறக்கட்டளை என்ற சமூக அமைப்பையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் விநாயகர் சதுர்த்தியின்போது வடிவமைக்கப்படும் சிலைகள், சிலை வடிவமைப்பின்போது வீணாகும் பொருட்கள் போன்றவற்றை மறு சுழற்சி செய்து பயனுள்ள பொருட்களை உருவாக்குகிறார். இவருடைய கைவண்ணத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், பறவைகள், விலங்குகள் நீர் அருந்துவதற்கு பயன்படும் கிண்ணங்கள், பறவைகள் தங்குவதற்கான கூடுகள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய மறு சுழற்சி பொருட்களை உருவாக்குவதற்கு முன்பு முறையாக மத சடங்குகளை செய்து வருகிறார். மத உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிப்பதாகவும், அதற்கு எந்த விதத்திலும் பாதிப்பு நேராமல் செயல்படுவதாகவும் கூறுகிறார். விநாயகர் சிலைகளை மறுசுழற்சி செய்வதற்கான காரணத்தையும் விவரிக்கிறார்.

‘‘எனது வீடு கோதாவரி ஆற்றின் அருகில் உள்ளது. ஒரு நாள் ஆற்றங்கரைக்கு சென்றபோது ஒருவர் பழைய புகைப்பட பிரேம்களுடன் ஆற்றை நோக்கி வருவதை பார்த்தேன். அவர் அவற்றை ஆற்றில் விட தொடங்கினார். நான் அவரிடம், மரத்தால் செய்யப்பட்ட இந்த பிரேம்களை ஆற்றில் விடுவதை விட மறு சுழற்சி செய்து மீண்டும் உபயோகப்படுத்தலாம் என்று கூறினேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதுபோன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தயார் செய்யும் விஷயத்தில் மக்களுக்கு உதவினால், சிறந்த பலன்களை பெற முடியும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்’’ என்கிறார்.

இதைத்தொடர்ந்து சமூக ஊடகங்கள் வழியாக தொடர்பு கொண்டு, ‘வீட்டில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கும் சிற்பங்கள், புகைப்பட பிரேம்களை வைத்திருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் அவற்றை மறுசுழற்சி பொருட்களாக மாற்றித்தருகிறேன்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அவரது முயற்சிக்கு முதல் வாரத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்று புனே, நாக்பூர், மும்பை என பல பகுதிகளில் இருந்தும் திரிப்திக்கு பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள். சமூக ஊடகங்கள், வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.

‘‘சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதுதான் எங்களின் நோக்கம். இந்த செயல்பாட்டில் எந்த வகையிலும் மத உணர்வுகள் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதை எங்கள் குழு உறுதி செய்கிறது. ஒவ்வொரு பொருளையும் மறு சுழற்சி செய்வதற்கு முன்பு பூஜை நடத்தப்படுகிறது. சிற்பங்கள் தூள் வடிவில் உருமாற்றப்பட்டு அதில் உள்ளடங்கி இருக்கும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பல்வேறு வகையான பொம்மைகளை தயாரிக்க பயன்படுகிறது. மர பிரேம்கள் மறுசுழற்சி செய்வதற்கு அனுப்பப்படுகின்றன. சில பிரேம்கள் பறவைகள் வசிக்கும் கூடுகளாக தயார் செய்யப்படுகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரிஸுடன் சிறிது சிமெண்ட் கலந்து கிண்ணங்களாக தயாரிக்கப்படுகின்றன. அவை தெரு நாய்களுள், பறவைகளுக்கு உணவளிக்க பயன்படுகிறது. வீணாகும் மதம் சார்ந்த பொருட்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாற்றுவதை உறுதி செய்வதே எங்கள் அமைப்பின் குறிக்கோள்’’ என்கிறார்.

திரிப்தி தனது குழு தயாரிக்கும் பொம்மைகளை நாசிக்கில் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கு வழங்குகிறார்.

Next Story