பாராமெடிக்கல் படிப்பும், கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பும்..!


பாராமெடிக்கல் படிப்பும், கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பும்..!
x
தினத்தந்தி 23 Oct 2021 9:56 AM GMT (Updated: 23 Oct 2021 9:56 AM GMT)

‘‘எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., வெட்னரி இவற்றின் வரிசையில் முக்கியத்துவம் பெறுகிறது, பாரா மெடிக்கல் படிப்புகள். பலரும் பாரா மெடிக்கலை இரண்டாம் தர படிப்பாக எண்ணுகின்றனர்.

அது தவறானது. உண்மையில், மருத்துவப் படிப்புக்கு இணையானது இது. இதிலும் சரியான பிரிவுகளையும், மேற்படிப்புகளையும் தேர்வு செய்து படித்தால் 100 சதவீத வேலைவாய்ப்பு நிச்சயம்’’ என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்ப்பவர், கல்வியாளர் காலைக்கதிரவன்.

திருவாரூர் பகுதியை சேர்ந்தவரான இவர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுமையான படிப்புகளை பற்றிய விழிப்புணர்வுகளை, பல ஆண்டுகளாக வழங்கி வருகிறார். கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு, மாணவர்கள் மனதில் புதுநம்பிக்கை விதைத்திருக்கும், பாராமெடிக்கல் துறை பற்றியும், அதில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘பாராமெடிக்கல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாற்றாக அமைந்துவிடாது என்றாலும் மருத்துவத்துறையில் இந்தப் படிப்புக்கான பணி வாய்ப்புகளையும், சமூக அந்தஸ்தையும் நாம் மறுக்க முடியாது.

மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ். என்று சொல்லப்படும் ஐந்து ஆண்டு படிக்கும் மருத்துவர்களைப் போலவே அறுவை சிகிச்சை பணிகளில் கூட பங்கெடுத்துக்கொள்ளும் அளவுக்கும் அந்தஸ்து கொண்ட பாடப்பிரிவுகள் பாராமெடிக்கல் துறையில் உள்ளது’’ என்றவர், அதுதொடர்பான படிப்புகளை பட்டியலிடுகிறார்.

‘‘பார்மஸி டாக்டர் எனப்படும் பார்ம் டி படிப்பானது 6 வருட காலம் கொண்டதாகும். இந்தியாவில் பார்மஸி சார்ந்த துறையில் நோயாளிகளுக்கு நேரடி சேவை வழங்கும் வாய்ப்பை பெற்றது இந்தத் துறை மட்டுமே. மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது பற்றி சொல்லிக்கொடுப்பது, ஆக்குபேஷனல் தெரபி.

பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு ஆடியோலஜி. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் படிப்பு ‘ஸ்பீச் தெரபி’. உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை குறித்து அறிவதற்கு, ரேடியோகிராபி படிப்பு.

ரேடியோதெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. சில டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. நோயைக் கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது போன்ற பணிகளுக்கு மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி உதவும். இந்த படிப்பில்தான் உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இப்படி நிறைய படிப்புகள் இருக்கின்றன’’ என்றவர், அத்தனை படிப்புகளையும் பட்டியலிட்டார்.

‘‘கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, விபத்துக்கால முதலுதவி சிகிச்சை சார்ந்த ஆக்ஸிடென்ட் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, மொழி குறைபாடு சிகிச்சைக்கான ஆடியாலஜி அண்டு ஸ்பீச் லாங்வேஜ் பேத்தாலஜி, இதயம் தொடர்பான கார்டியாக் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி, மெடிக்கல் சோஷியாலஜி, நியூக்ளியர் மெடிக்கல் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் அண்டு அனஸ்தீஸியா டெக்னாலஜி, கண் சிகிச்சை தொடர்பான ஆப்தோமெட்ரி, மூட்டு தொடர்பான புரொஸ்தெட்டிக்ஸ் அண்டு ஆர்த்தோடிக்ஸ், ரேடியோகிராபி அண்டு இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி, மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ், கிளினிக்கல் நியூட்ரீஷியன் என மருத்துவம் சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன’’ என்றவர், பாராமெடிக்கல் பிரிவில் இருக்கும் முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் விளக்க ஆரம்பித்தார்.

‘‘கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான லேர்னிங் டிசெபிலிட்டி, சர்க்கரை நோய் தொடர்பான டயாபெடிக் எஜுகேஷன், ஹெல்த் புரொமோஷன் அண்டு எஜுகேஷன், எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னாலஜி, மருத்துவமனை நிர்வாகம் தொடர்பான வார்டு அட்மினிஸ்ட்ரேஷன், கதிரியக்கம் தொடர்பான ரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி, காது கேளாத குழந்தைகளுக்கு பேச்சுப்பயிற்சி அளிக்கும் ஆடிட்டரி வெர்பல் தெரபி, உடல் இயக்கச் செயல்பாடுகளுக்கான பயோ-மெக்கானிக்ஸ் அண்டு கினிஸியாலஜி, மருத்துவப் பாதுகாப்பு தொடர்பான கிளினிக்கல் ரிசர்ச், உடற்பயிற்சிகள் தொடர்பாக எக்ஸர்சைஸ் பிசியாலஜி என பாராமெடிக்கல் துறையில் பல முதுநிலைப் பட்டப்படிப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன’’ என்றதோடு, டிப்ளமோ படிப்புகளும் நிறைய உள்ளன என்றார்.

‘‘ஹெல்த் கேர் எய்டு, அனஸ்தீஸியா டெக்னாலஜி, ஆப்தமாலிக் அசிஸ்டென்ட், ஸ்கோப் சப்போர்ட் டெக்னாலஜி, மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ், ரேடியோகிராபி அண்டு இமேஜிங் டெக்னாலஜி, மெடிக்கல் லேப் டெக்னாலஜி, கார்டியாக் நான் இன்வேசிவ் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி போன்ற டிப்ளமோ படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்’’ என்றதோடு, கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு பாராமெடிக்கல் டிப்ளமோ படிப்புகள் சிறப்பான வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் என்றும் சொல்கிறார்.

‘‘எக்ஸ்ரே எடுப்பது, ரத்த மாதிரி சேகரிப்பது, எக்கோ எடுப்பதில் தொடங்கி, நோயாளிகளை கவனித்துக் கொள்வது, அறுவை சிகிச்சைகளுக்கு உதவுவது வரை நிறைய வேலைவாய்ப்புகள், அவரவர் பகுதிகளிலேயே இருக்கிறது. அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள, பாராமெடிக்கல் படிப்புகள் வழிகாட்டுகின்றன. வெகு குறுகிய கால வகுப்புகளில் தொடங்கி, 4-5 ஆண்டு கால படிப்பு வரை, ஏன்..? சில பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெறும் வகையிலான பாடங்களும் இருக்கிறது’’ என்றவர், பாராமெடிக்கல் பிரிவில் சேர்ந்து படிப்பதற்கான கல்வித்தகுதிகளை விளக்கினார்.

‘‘பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடத்தை பயின்றவர்கள், பாராமெடிக்கல் துறையின் பாடப்பிரிவுகளில் சேரமுடியும். சராசரி மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் எடுத்து படிக்கலாம். பாராமெடிக்கலில் ஒருசில டிப்ளமோ படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால்கூட போதும். இவற்றை தாண்டி, பொறுமை குணமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்களுக்கு, பாராமெடிக்கல் படிப்புகள் பொருத்தமானது’’ என்ற கருத்தோடு நிறைவு செய்தார்.

Next Story