சிறப்புக் கட்டுரைகள்

இந்திய அரசியலமைப்பு சட்டம் + "||" + Constitution of India Act

இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டம்
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தொடங்கியது. 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. அந்த தினத்தையே குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
தெற்கு ஆசிய நாடான இந்தியா, 1947-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்தது. அவர்களிடம் இருந்து விடுதலை பெற இந்திய வீரர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். படிப்படியாக போராட்டங்கள் வெற்றி பெறவே இந்தியா விடுதலை அடைந்தது. அதன்பிறகு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா திகழ்ந்தது. இங்குள்ள அரசியலமைப்பு சட்டம் மிகவும் நீளமானது. இது நெகிழா தன்மையும், நெகிழ்ச்சி தன்மையும் கொண்டது. இவ்வாறு கூறுவதற்கு காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம் சாதாரண காலங்களில் மாற்றுவதற்கு சிரமமானதாகவும், நெருக்கடி காலங்களில் மாற்றுவதற்கு சுலபமானதாகவும் இருப்பதே ஆகும். இதில் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 1,17,369 சொற்கள் உள்ளன. இது கூட்டாட்சி தத்துவம் கொண்டது என்றாலும், ஒரு வலுவான ஒற்றைச்சார்பை கொண்டுள்ளது.

இந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தொடங்கியது. 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. அந்த தினத்தையே குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். மேலும் பொதுவுடமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை ஆகியவை கொள்கைகளாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியபோது பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களின் கூறுகள் எடுத்து கொள்ளப்பட்டது. அதாவது கூட்டாட்சி முறையை கனடாவில் இருந்தும், அடிப்படை உரிமை முறையை ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்தும், அடிப்படை கடமைகள் முறையை அன்றைய சோவியத் யூனியனிடம் இருந்தும், அரசியல் சட்ட திருத்த முறையை தென்னாப்பிரிக்காவிடம் இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் எடுத்து கொண்டனர்.

முதன்முறையாக 1934-ம் ஆண்டு இந்தியாவுக்கு தனியாக அரசியல் நிர்ணய சபை அமைக்க ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததால் 1942-ம் ஆண்டில் கிரிப்ஸ் என்ற தூதுக்குழு இந்தியாவுக்கு தனியாக அரசியல் நிர்ணய சபையை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இது ஏற்கப்பட்டு 1946-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது. இதன் தற்காலிக தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா செயல்பட்டார். அதன்பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டம் நடத்தப்பட்டு, அதன் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் வரைவுக்குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார்

இந்த சபைக்கு, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி(விடுதலை கிடைத்த பிறகு) சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு வந்தது. இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 7 பேர் கொண்ட வரைவுக்குழு தொடங்கப்பட்டது. அதில் என்.கோபாலசாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, என்.மாதவ்ராவ், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழு தனது அறிக்கையை 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி அரசியல் நிர்ணய சபையிடம் ஒப்படைத்தது. அந்த அறிக்கை முழு வடிவம் பெற்று 1949-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி அரசியல் நிர்ணய சபை தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி அரசியல் நிர்ணய சபையின் கடைசி கூட்டத்தில், அவரே சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இதில் முக்கியமானது அடிப்படை உரிமை ஆகும். இது 3-வது பிரிவில் 12-வது உட்பிரிவு முதல் 35-வது உட்பிரிவு வரை பட்டியலிடப்பட்டு உள்ளது. அதில், இந்தியாவிற்குள் அனைவருக்கும் சம பாதுகாப்பு, வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம், பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமய உரிமை, சிறுபான்மையினரின் பண்பாடு, கல்வி உரிமை, இந்த உரிமைகளை காத்துக்கொள்ள சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரும் உரிமை ஆகியன குறிப்பிடத்தக்கது. ஆனால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டால், தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். அது ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமலாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற குழுவுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் ஒரு சட்ட திருத்த மசோதா முன்வைக்கப்படும்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் வாக்குகளோடு நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் கூட்டாட்சி தொடர்பான சட்ட திருத்தங்களில் மாநில சட்டசபைகளின் பெரும்பான்மையை உறுதிபடுத்த வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியலமைப்புகளில் இருந்து வேறுபட்ட மற்றும் தனித்துவம் வாய்ந்தது ஆகும். இது நாட்டின் அரசாட்சிக்கு முதுகெலும்பு போன்றது. இதன் கூட்டாட்சி சக்தி வாய்ந்த மை அமைப்புடன் கூடியதாக உள்ளது. அதாவது போர், அயல்நாடுகள் ஆக்கிரமிப்பு, ஆயுதக்கலகம் மற்றும் நிதி நெருக்கடி போன்ற காலங்களில் மாநில அரசின் பல அதிகாரங்களை செயலிழக்க செய்து மத்திய அரசு வலுவாக செயல்படும் வகையில் அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைவருக்கும் வாக்குரிமை, சுதந்திரமான நீதித்துறை, ஒற்றை குடியுரிமை போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்திய அரசியலமைப்பு தாங்கி நிற்கிறது.