சிறப்புக் கட்டுரைகள்

திராட்சை சாகுபடியில் புதுமை செய்யும் விவசாயி..! + "||" + Innovative farmer in grape cultivation ..!

திராட்சை சாகுபடியில் புதுமை செய்யும் விவசாயி..!

திராட்சை சாகுபடியில் புதுமை செய்யும் விவசாயி..!
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் விவசாயத் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார்கள்.
குறிப்பாக திராட்சை சாகுபடியில் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நாட்டிலேயே முன்னோடியாக திகழ்கிறார்கள். புது விதமான திராட்சை வகைகளை அறிமுகம் செய்து விவசாயத்துறையில் புரட்சியும் படைக்கிறார்கள்.

அவர்களில் முக்கியமானவர் சோலாபூரைச் சேர்ந்த 56 வயது விவசாயி தத்தராயா காலே. இவர் திராட்சை சாகுபடியில் கொடிகட்டி பறந்துவருகிறார். இவருடைய கண்டுபிடிப்பை பாராட்டி மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்திருக்கிறது.

பள்ளி பக்கம் செல்லாத விவசாயியான தத்தராயா தற்போது 25 ஏக்கர் பரப்பளவில் திராட்சை விவசாயம் செய்து வருகிறார். இங்கு அவர் புதிதாக கண்டுபிடித்த 6 வகையான திராட்சைகள் பயிரிடப்பட்டுள்ளன. தத்தராயா திராட்சை விவசாயத்தில் சிறந்து விளங்குவதற்கு அவரது தந்தை நானாசாகேப் தான் காரணம். இவர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய முன்னோடியாக திகழ்ந்து வந்தார். ஆகவே, தனது தந்தையின் பாதையை தத்தராயாவும் பின்பற்ற தொடங்கிவிட்டார்.

அவரது தந்தை ‘சோனாகா’ என்ற விதையற்ற பச்சை நிற திராட்சையை அறிமுகம் செய்தவர். இந்த வகை திராட்சையே இந்தியாவில் தற்போது அதிகம் பேரால் விரும்பி சாப்பிடப்படுகிறது.

விவசாயத்தில் புது வகை திராட்சையை கண்டுபிடிக்கும் தனது தந்தையின் வழியை பின்பற்றியே இவரும் ஒரு திராட்சை வகையைக் கண்டுபிடித்து சாதித்துகாட்டினார். கடந்த 2004-ம் ஆண்டு ‘சரிதா’ என்ற பெயரில் கருப்பு நிற விதையற்ற திராட்சையை கண்டுபிடித்தார். இதுவும் மக்களால் அதிகம் விரும்பப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து பல்வேறு புதுமையான வகைகளில் திராட்சைகளைக் கண்டுபிடித்தார்.

தற்போது ஆறாவது வகையாக ‘கிங் பெர்ரி’ என்ற பெயரில் விதையற்ற புதுவகை திராட்சையை கண்டுபிடித்திருக்கிறார். இது அளவில் பெரிதாக இருக்கிறது. இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறது. இந்திய வானிலைக்கு ஏற்றதாக இருப்பதால் விவசாயிகள் பலரும் கிங் பெர்ரி வகை திராட்சை பயிரிடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ஏற்றுமதி மட்டுமின்றி உள்ளூர் சந்தையிலும் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் தென்னிந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் இந்த வகை திராட்சையை பயிரிட்டு வருமானம் ஈட்டுகிறார்கள்.