பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பரதக்கலைஞர்..!


பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பரதக்கலைஞர்..!
x
தினத்தந்தி 4 Dec 2021 5:07 PM GMT (Updated: 4 Dec 2021 5:07 PM GMT)

அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரத கலையை இலவசமாக கற்றுக்கொடுப்பதுடன், அதன் மூலம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார், சூர்யா பிரபாகரன்.

யார் இவர்?, என்ன செய்கிறார்? போன்ற கேள்விகளுடன், அவரை சந்தித்தோம். அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டவை இதோ...

உங்களை பற்றி கூறுங்கள்?

சென்னைதான் என் பூர்வீகம். வட சென்னையில், கண்ணதாசன் நகரில் வசித்து வருகிறேன். சிறுவயதிலிருந்தே நடன கலை மீது ஆர்வம் அதிகம் என்பதால் அது சம்பந்தமான படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன். பரதம், நாட்டுப்புற நடனம் ஆகியவற்றோடு வெளிநாட்டு நடனங்களிலும் ஆர்வம் காட்டுகிறேன்.

பரதக் கலையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

என்னுடைய அம்மாதான் பரதக் கலையை எனக்கு அறிமுகம் செய்தவர். புதுவிதமான, பல விதமான நடன கலைகள் எவ்வளவோ இருந்தாலும் பரதநாட்டியம் தனித்துவமானது. பாரம்பரியமிக்கது. அந்த ஈர்ப்பில் தான் பரதநாட்டியம் பயின்றேன். எத்தனையோ நடனக்கலைகள், புதிது புதிதாக டிரெண்டிங்கில் வந்தாலும், பரதத்தின் மதிப்பும், மகத்துவமும் என்றும் குறைந்ததே இல்லை.

எத்தனை வருடமாக பரதநாட்டியம் பயில்கிறீர்கள் ?

2001-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை பரதநாட்டியம் பயில்கிறேன். உற்சாகத்துடன் பரதம் ஆடி மகிழ்கிறேன்.

பரதக் கலையை ஏழை-எளிய மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தது எப்போது?

நான் வசிக்கும் வட சென்னை பகுதி கானா பாடல்களுக்கும், கானா இசைக்கும் பிரபலமானது. இங்கு பரதம் கற்றுக் கொடுப்பதும், கற்றுக் கொள்வதும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம் தான். இருப்பினும் இங்கு இருக்கும் குழந்தைகளுக்கு பரதக்கலை மீது தனி ஆர்வம் இருக்கிறது. அதை உணர்ந்து கொண்ட பிறகுதான் இலவசமாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

பரதக் கலையில் ஏதாவது புதிதாக முயன்று இருக்கிறீர்களா?

ஆம்..! நிறையவே முயன்றிருக்கிறேன். பரதக் கலையை அடிப்படையாகக் கொண்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரங்கேற்றி இருக்கிறேன். கொரோனோ விழிப்புணர்வில் தொடங்கி, அவ்வப்போது தலை தூக்கும் சமூகப் பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், அத்துமீறல்கள் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு பரத நாட்டிய நிகழ்ச்சிகளை அடிக்கடி அரங்கேற்றி இருக்கிறேன்.

வேறு என்ன செய்கிறீர்கள்?

வடசென்னை பகுதியை சுற்றி இருக்கும் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக பரதநாட்டிய பயிற்சி வழங்குவதோடு, பெண்கள், பள்ளி மாணவிகளுக்கு தேவையான பாலியல் கல்விகளை பரத வடிவில் வழங்குகிறேன். ‘குட் டச், பேட் டச்’... அதாவது முறையான தொடுமுறைகளை மாணவிகளுக்கு பரதம் வழியாக கற்றுக்கொடுக்கிறேன். ஒருசில மாற்றுத்திறனாளி பள்ளி குழந்தைகளுக்கும், பரதம் கற்றுக்கொடுக்கிறேன். பரதக் கலை மூலமாக அவர்களை மகிழ்விக்கிறேன்.

உங்களுடைய லட்சியம் என்ன ?

விளிம்பு நிலையில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரதக் கலையை பயிற்றுவித்து அவர்களை கொண்டு கின்னஸ் சாதனை புரிய ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன்.

பெண்கள், பள்ளி மாணவிகளுக்கு தேவையான பாலியல் கல்விகளை பரத வடிவில் வழங்குகிறேன். ‘குட் டச், பேட் டச்’... அதாவது முறையான தொடுமுறைகளை மாணவிகளுக்கு பரதம் வழியாக கற்றுக்கொடுக்கிறேன்.


Next Story