சிறப்புக் கட்டுரைகள்

குழந்தைகளை சாப்பிட வைக்கும் முறை + "||" + The method of feeding children

குழந்தைகளை சாப்பிட வைக்கும் முறை

குழந்தைகளை சாப்பிட வைக்கும் முறை
குழந்தைகளை சாப்பிட வைப்பதே தனிக் கலைதான்! அவர்களுக்கு எந்த உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பின்பு அதற்கேற்ப உணவுகளை தயார் செய்து கொடுங்கள். அவர்கள் சாப்பிடும்போது பிடிவாதம் பிடிக்காமல் ரசித்து ருசிக்க வேண்டும்.
எப்போதும் பால் மட்டுமே பருக கொடுக்கக்கூடாது. நாளடைவில் பால் என்றாலே அவர்களுக்கு அலர்ஜியாகி விடும். அதனால் பாலுடன் சத்துமாவு, தேன், நாட்டு சக்கரை என ஏதாவது ஒன்றை கலந்து கொடுக்கலாம். வெண்ணெய், நெய், தயிர் போன்ற பால் பொருட்களிலும் உணவு தயாரித்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு நீங்கள் ஓய்வாக இருக்கும் சமயத்தில் உணவு ஊட்டுவதற்கு முயற்சிக்காதீர்கள். குழந்தை களுக்கு எந்த சமயத்தில் பசி உணர்வு எட்டிப்பார்க்கும் என்பதை அறிந்து உணவு கொடுங்கள். அவர்களுக்கு பசிக்காத நேரத்தில் சாப்பிடுமாறு நிர்ப்பந்திக்க கூடாது. சிறு வயதில் இருந்தே எல்லா வகையான உணவுகளையும் சாப்பிட பழக்குங்கள்.

குழந்தைகள் பெரியவர்களை பார்த்துதான் வளர்வார்கள். அவர்களை போல் தாமும் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். பெரியவர்களோடு சேர்ந்து சாப்பிடவும் ஆசைப் படுவார்கள். அதனை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு தனியாக உணவு ஊட்டினால் தன்னை புறக்கணிப்பதாக கருதுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். தினமும் ஒருவேளையாவது இந்த வழக்கத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களை பெரியவர்களும் கொஞ்சம் ருசி பார்க்க வேண்டும். அதை பார்த்ததும் குழந்தைகளுக்கு சாப்பிடும் ஆர்வம் அதிகரித்துவிடும். அதனால் எந்த உணவு பொருளாக இருந்தாலும் குழந்தைகள் முன்பாக சாப்பிட வேண்டும். அதை பார்த்து அவர்களும் சாப்பிட தொடங்கிவிடுவார்கள்.

டி.வி., செல்போன் பார்த்துக் கொண்டே உணவு சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் உணவின் அளவு குறைந்து டி.வி., செல்போன் மீது மோகம் அதிகரித்துவிடும். பருவ கால நிலைகளுக்கு ஏற்ப உணவை வேறுபடுத்தி கொடுக்கலாம். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உணவு கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றலாம்.

பிஸ்கட், சாக்லேட், பேக்கரி வகை உணவுகளை அதிகம் ருசித்து சாப்பிட்டால் பசி அடங்கி விடும். இவைகளால் உடலுக்கு எந்த பயனும் இல்லை. குழந்தை களுக்கு கொடுக்கும் உணவில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், உலர் பழ வகைகள், வேகவைத்த பயறு வகைகள், முட்டை, தயிர் போன்றவற்றை சுழற்சி முறையில் கொடுக்கலாம். குளிர்பானம், டீ, காபி போன்றவற்றை பழக்கப்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக பழ ஜூஸ் கொடுக்கலாம்.

குழந்தைகள் கோபமோ, மன அழுத்தமோ கொண்டிருக்கும் சமயத்தில் உணவு கொடுத்தால் சாப்பிட மறுத்து, பிடிவாதம் பிடிப்பார்கள். எவ்வளவு முயற்சித்தாலும் சாப்பிடவே மாட்டார்கள். அதனால் சாப்பிட வைப்பதற்கு முன்பு, அவர்களை ஜாலியான மன நிலைக்கு கொண்டு வர வேண்டும்.